இராகவன் கருப்பையா – உலகிலேயே மிகவும் பலமிக்க நாடு எது என சிறு பிள்ளையைக் கேட்டால் கூட ‘அமெரிக்கா’ என்று பட்டென பதில் சொல்லிவிடும்.
இதனைத்தான் பல்லாண்டுகாலமாக தனது அதிகாரத்தாலும்
அகம்பாவத்தினாலும் அடாவடித்தனத்தாலும் தான்தோன்றித்தனமான இதர செயல்களினாலும் மலேசியாவைவிட 10 மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்ட அந்த வல்லரசு பறைசாற்றி வருகிறது.
இப்படித்தான் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள அந்நாடு விரும்புகிறது.
ரஷ்யா, வட கொரியா மற்றும் சீனா முதலிய நாடுகள் அமெரிக்காவைவிட பலம் அதிகம் என அவ்வப்போது தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புகிற போதிலும், ‘பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்’ எனும் கூற்றுக்கு ஏற்ப எந்த நாடும் அமெரிக்காவுடன் வம்பு தும்பில் ஈடுபட விரும்புவதில்லை.
இப்படிப்பட்ட ஒரு ஜாம்பவானைத்தான் கோறனி நச்சில் எனும் ஒரு நுண்ணிய கிருமி இப்போது தாறுமாறாக புரட்டி எடுக்கிறது.
உண்மையிலேயே பார்க்கப்போனால் எல்லா நிலைகளிலும் அமெரிக்காவுக்கு நிகராக உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் ஈராக்கிற்குள் புகுந்து அந்நாட்டை சின்னாபின்னமாக்கிய அமெரிக்காவை தட்டிக்கேற்க ஒரு நாதியில்லை அந்த சமயத்தில்.
உலகம் முழுவதும் மொத்தம் 70 நாடுகளில் சுமார் 800 ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள அந்நாடு ஒலிம்பிக் போட்டிகளிலும் கூட முதல் நிலையில்தான் இருக்கும்.
உலகிலுள்ள மொத்தம் 31 விமானம் தாங்கிக் கப்பல்களில் 19 கப்பல்கள் அமெரிக்காவுக்கு சொந்தம். இதர 12 கப்பல்களைத்தான் இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, சீனா போன்ற இதர நாடுகள் வைத்திருகின்றன.
உலகை சுற்றியுள்ள பெருங்கடலின் பல பகுதிகளில் அந்நாட்டின் விமானங்தாங்கிக் கப்பல்கள் 24 மணி நேரமும் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
தன்னைத்தானே அனைத்துலக போலீஸாக சுயமாக நியமித்துக் கொண்டுள்ள அமெரிக்கா பல நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் ‘தாதா’வாக உள்ளதும் நாம் அறிந்த ஒன்றே.
உலகின் ஆகப் பெரிய பொருளாதார வல்லரசுமான அந்நாட்டின் ராணுவ பலத்திற்கு ஈடாக வேறு எந்த நாடும் அருகில் இல்லை என்பதும் உண்மைதான்.
எம்மாதிரியான பிரச்னையாக இருந்தாலும் எங்களால் சமாளிக்க முடியும் என மார்தட்டி நின்ற அமெரிக்கா இப்போது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பதைப் பார்ப்பதற்கு பரிதாபமாகத்தான் உள்ளது.
‘யானைக்கும் அடி சறுக்கும்’ எனும் கூற்றுக்கு ஏற்ப கொரோனாவின் கொடிய தாக்கத்தை அந்நாடு குறைத்து மதிப்பிட்டு தவிப்பதைப் போல் தெரிகிறது.
தொடக்கத்தில் சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகத்தில் இந்நோய் பரவியபோது சற்று மித்தனமாக இருந்துவிட்ட அமெரிக்கா பிறகு கூடல் இடைவெளியை தனது மக்களிடையே அமல்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியது. குறிப்பாக கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃப்லோய்ட் போலீசாரால் நடுத்தெருவில் அநியாயமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கொஞ்சம் கூட கூடல் இடைவெளி இல்லாமல் நாடு முழுவதும் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள் அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக மாறியதையும் நாம் பார்த்தோம்.
இந்தக் கொடிய நோயின் கோரத்தாண்டவத்தில் சிக்கியுள்ள மொத்தம் 213 நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரையில் 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் {172,630 (15.8.2020)} ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மடிந்துள்ளது மிகவும் வருத்தமளிக்கும் ஒரு விசயமாகும்.
இந்நோய்க்கு அந்நாட்டில் தற்போது சராசரி நிமிடத்திற்கு ஒருவர் பலியாகிறார் என்பதும் ஒரு அதிர்ச்சித் தகவல்தான்.
இது குறித்து கருத்துரைத்த அமெரிக்காவின் பிரபல வைரஸ் தடுப்பு விஞ்ஞானி ஒருவர், வேறு எந்த நாட்டிலும் இருப்பதை விட ஒரு அமெரிக்கராக இருந்தால் கொரோனாவினால் மரணமடையும் அபாயம் அதிகமாக உள்ளது என்று அண்மையில் குறிப்பிட்டார்.
ஆக ‘சகலகலா வல்லவன்’ எனும் நிலையில் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இயங்கும் அந்த வல்லரசு கூடிய விரைவில் இந்நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லையென்றால் வர்த்தக ரீதியாக அந்நாட்டின் பொருளாதார தயவை நம்பியிருக்கும் வேறு பல நாடுகளும் சிரமத்திற்குள்ளாகும் வாய்ப்பு உள்ளதையும் நாம் மறுக்க இயலாது.