சிவாலெனின் | நாட்டின் இன்றைய மோசமான அரசியலுக்கு வித்திட்ட, நம்பிக்கை துரோகத்தின் சான்றாக விளங்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீருடன் பாக்காத்தான் ஹராப்பான் மீண்டும் கைகோர்த்திருப்பது பெரும் பலவீனத்தை ஏற்படுத்தும் எனவும்; இப்போக்கு அன்வாரின் பிரதமர் இலக்கிற்கு மீண்டும் சாவுமணி அடிக்கும் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.
நடைபெறவிருக்கும் சிலிம் ரீவர் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் அதன் வேட்பாளரைக் களமிறக்காத நிலையில், துன் மகாதீர் தனது தரப்பு வாக்காளரைக் கவரும் நோக்கத்தோடு, வேட்பாளரைக் கடந்த 12.08.2020-ல் அறிவித்தார். வேட்பாளர் அறிமுகத்தின் போது மகாதீருடன் கெஅடிலான், ஜசெக மற்றும் அமானா தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றியது பெரும் அதிருப்தியினை அதன் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி, பின்னர் குறுகிய காலத்தில் அன்வாரிடம் பிரதமர் பதவியைக் கொடுப்பேன் என உறுதியளித்திருந்த துன் மகாதீர்; பின்னர் வாக்கு தவறியதும், தனது பேராசையாலும் சுயநலத்தாலும் ஆட்சியைப் பாக்காத்தான் ஹராப்பான் இழக்க நேர்ந்ததையும் அதன் ஆதரவாளர்கள் இன்னும் மறக்கவில்லை.
மீண்டும் பிரதமரான துன் மகாதீர், தொடக்கம் முதலே, கூட்டணி கட்சிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் கடைபிடிக்கவில்லை. தொடர்ந்து முரண்பட்ட கருத்துகளையும் எதிர்மாறான விடயங்களையும் கூறிக்கொண்டு, கூட்டணிக்குள்ளேயேக் குழப்பதை ஏற்படுத்தினார். இதனால், பக்காத்தான் ஹராப்பான் எப்போது வேண்டுமானாலும் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்படலாம் என்றும், புதியக் கூட்டணியோடு மகாதீர் ஆட்சியில் நீடிப்பார் எனவும் பரவலாக பேசப்பட்டது.
ஆனால், துன் மகாதீர் போட்ட வியூகம் கானல் நீராய் மாறி அவரையே ஆட்சியிலிருந்து தூக்கி எறியும் அவலம் ஏற்பட்டது. அவர் அமைக்க நினைத்த இஸ்லாமியப் போக்குடைய மலாய் பிரதிநிதிகள் கொண்ட அரசாங்கமும், எதிர்கட்சிகளே இல்லாத அரசாங்கமும் முழுக்க முழுக்க அவரது சுயநலம் சார்ந்தது மட்டுமே. இதன் மூலம் அன்வார் பிரதமர் ஆவதைத் தடுக்க முடியும் எனவும் அவர் முழுமையாக நம்பினார்.
மேலும், அன்வார் இப்ராஹிம் பிரதமராய் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கெஅடிலான் கட்சியில் பிளவை ஏற்படுத்திய பின்னணியில் துன் மகாதீரும் இருந்துள்ளார் என்பதை மறுத்திட முடியாது. அஸ்மின் அலிக்கும் அன்வார் இப்ராஹிமுக்கும் சர்ச்சைகள் எழ காரணியமாக இருந்ததோடு மட்டுமின்றி, அவ்விருவர் மத்தியில் பல்வேறு பிரச்னைகள் உருவாகவும் மகாதீர் சாதுரியமாய் அரசியல் காய்நகர்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கெஅடிலான் மக்கள் மத்தியில் பலமான கட்சியாகவும், அன்வார் ஒரு பலமிக்க தலைவராக உருவாகியிருந்த நிலையில், அதனை உடைத்தெறிந்து அன்வாரைப் பலவீனப்படுத்தும் முயற்சியாகவே கெஅடிலானிலிருந்து அஸ்மின் அலி உட்பட சிலரின் வெளிநடப்புகள் இருந்தன. தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவும் நிலையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்துகொள்ளவும், மகாதீர் விரித்த வலையில் அஸ்மினும் அவரது ஆதரவாளர்களும் விழுந்தனர். கெஅடிலானின் நம்பிக்கை என்றும் கட்சியை வருங்காலத்தில் வழிநடத்துவார்கள் எனவும் நம்பப்பட்ட அஸ்மின் அலியும் அவரைச் சார்ந்தவர்களும் வளர்ந்த பாசறையை விட்டுவிட்டு மகாதீரின் மந்தைகள் கூட்டத்திற்கு இடம்பெயர்ந்தனர்.
பின்னர் மகாதீரை நம்பினால் அரசியல் எதிர்காலம் சூன்யமாகிவிடும் என அஞ்சிய அவர்கள், முகிடின் யாசினைப் பிரதமராக அறிவித்த பின்னர், முகிடினோடு கைகோர்த்து அரசியல் பிரவேசத்தை மேற்கொண்டனர். இருந்த போதும், அவர்களின் வருங்கால அரசியல் என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதற்கிடையில், இன்னொரு விடயத்தை இங்குப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. பெர்சத்துவில் அஸ்மின் அலி இன்னும் இணையாத நிலையில், அவரோடு கைக்கோர்த்து கெஅடிலானிலிருந்து வெளியேறி, துணை அமைச்சராகவும் பதவி வகிக்கும் எட்மன் சந்தாரா, அண்மையில் பெர்சத்துவில் இணைந்ததாகவும் தகவல் வெளியானது. ஆம், பாஸ் கட்சியில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒரு பிரிவு அமைக்கப்பட்டது போல் விரைவில் பெர்சத்துவிலும் அமைக்கப்படவிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
நாட்டின் 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே, துன் மகாதீரை நம்ப வேண்டாம். அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டாம் எனப் பக்காத்தான் ஹராப்பானின் ஆதரவாளர்களும் அரசியல் பார்வையாளர்களும் எச்சரிக்கை விடுத்திருந்த போதும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, குறிப்பாக அன்வாரும் அவரது குடும்பமும் துன் மகாதீரைப் பெரிதாகவே நம்பினர் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆட்சியில் அமர்ந்த பின்னர், அன்வாரின் அரசியல் சிந்தனை வெளிப்படையாக இருப்பதாகவும், அது மலாய்க்காரர்களின் நம்பிக்கையை இழக்க செய்யும் எனவும் பல்வேறு காரணியங்களை மகாதீர் அனைத்து கட்சிகளைத் தனது கட்டுபாட்டில் வைக்க ஒற்றுமை அரசாங்கமே சிறந்த தீர்வு என முழங்கினார். இதன் மூலம், அன்வார் பிரதமர் ஆவதைத் தடுப்பதோடு, தாமும் தொடர்ந்து பிரதமர் நாற்காலியை அலங்கரிக்கலாம் என்பதை மகாதீர் உறுதியாக நம்பினார்.
இதற்கிடையில், மகாதீரின் வியூகங்களையும் தந்திரங்களையும் அரசியல் சாணக்கியத்தனத்தையும் உடன் இருந்து பார்த்த முகிடின் யாசின், துன் மகாதீருக்கே துரோகம் இழைத்து, தேடி வந்த பிரதமர் வாய்ப்பைத் தனதாக்கிக் கொண்டார். எல்லாம் கைநழுவி போனப்பின்னரும், தனது பதவி ஆசைக்கு அச்சாரம் போடும் வகையில், ஜசெகவையும் அமானாவையும் தனக்குச் சாதகமாகத் திருப்பிய மகாதீர், அவ்விருக் கட்சிகளையும் ஹராப்பான் கூட்டணியிலிருந்து விலகி, அன்வாருக்கு எதிராகக் களமிறக்கும் உச்சக்கட்டம் வரை, சாதுரியமாகவே காய்நகர்த்தினார் மகாதீர். கிட்டதட்ட அவ்விவகாரத்தில் அவர் வெற்றி பெறும் நிலையில் தான் இருந்தார்.
அன்வாருக்கு எதிராகவே, ஒருகட்டத்தில் அதன் நீண்டகால கூட்டாளியான ஜசெக பேசவும் தொடங்கியிருந்தது. குறிப்பாக, அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் ஜசெக அன்வாரைக் காட்டிலும் துன் மகாதீர் பக்கமே வலுவாக நிற்கத் தொடங்கியிருந்தது. அமானாவும் மகாதீருக்கு ஆதரவாகவேப் பேச தொடங்கியிருந்த நிலையில், கெஅடிலானும் அன்வாரும் தனித்துவிடப்படுவார்கள் என்று பரவலாக பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், திடீரென ஜசெகவும் அமானாவும் பிரதமர் வேட்பாளராக அன்வாரை ஆதரிப்பதாகக் கூறியபோது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலிருந்து தாம் வெளியேறுவதாக மகாதீர் அறிவித்தார். மக்கள் வழங்கிய ஆட்சி அதிகாரத்தைத் தனது சுயநலத்திற்காக மிக எளிதாக இழந்திருப்பதை, நம்பி வாக்களித்த வாக்காளர்களின் உணர்வைக் கொஞ்சமும் மதிக்காமல் தூக்கியெறிந்ததற்கு ஈடானது எனலாம்.
கூட்டணிக்குத் துரோகம் இழைத்து விட்டதாகவும் மக்களின் நம்பிக்கைக்கு துன் மகாதீர் சாவு மணி அடித்துவிட்டதாகவும் ஆட்சியை இழந்து நின்ற பக்காத்தான் கூட்டணி தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் துன் மகாதீரை வசைப்பாடியது இன்னமும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. மகாதீரின் சுயநலப் போக்கினால், பக்காத்தான் கூட்டணி மத்திய ஆட்சியை இழந்ததோடு, சபா போன்ற மாநிலச் சட்டமன்ற கலைப்பிற்கும் மூலக்காரணமாக அமைந்தது என்பது மலேசிய வரலாற்றில் அழிக்க முடியாத சுவடாகும்.
துன் மகாதீரின் சுயநலம், நாட்டின் அரசியல் நிலைபாட்டை கேள்விக்குறியாக, நிலையற்ற தன்மையோடு, கட்டுக்கோப்பற்று, உலக நாடுகளின் விமர்சனத்திற்கும் அரசியல் பார்வையாளர்களின் கேலிக்கும் வித்திட்டுள்ளதோடு; நாட்டின் பொருளாதாரத்தையும் மந்தமாக்கி நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது என்றால் அது பொய்யல்ல.
இதற்கிடையில், அண்மையில் தாம் புதியக் கட்சி தொடங்கப்போவதாக துன் மகாதீர் அறிவித்தபோது மகாதீரின் புதியக் கட்சியைப் பக்காத்தான் கூட்டணியில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என அன்வார் இப்ராஹிம் கூட கருத்துரைத்திருந்தார். இது மகாதீரை நம்பி மீண்டும் அன்வார் ஏமாற்றம் அடைவதற்கானத் தொடக்கமாக அமையலாம் என அரசியல் ரீதியில் கருத்துரைக்கப்பட்டிருந்தது.
இருந்தாலும், இனியும் அன்வார், துன் மகாதீரை நம்பி அரசியலில் ஏமாறமாட்டார் எனும் கருத்தும் முணுமுணுக்கப்பட்டிருந்தது. இனி அவ்விருவரும் மலேசிய அரசியலில் எதிரும் புதிரும்தான் எனவும் நம்பப்பட்டது. இன்றைக்குக்கூட அன்வாரின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, ஜசெக ஆதரவாளர்களும் முகநூலில் துன் மகாதீரை வசைபாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். துன் மகாதீரைப் பக்காத்தானின் ஒட்டுமொத்த எதிரியாகவும் துரோகியாகவும் அடிமட்டத் தொண்டர்களும் ஆதரவாளர்களும் பார்க்கின்றபோது; கடந்த 12-ம் தேதி, சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மகாதீர் தனது வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்ச்சியில் அமானா, கெஅடிலான் மற்று ஜசெக தலைவர்கள் கலந்துகொண்டது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
அதேவேளையில், ஏன் மீண்டும் துன் மகாதீரைப் பாக்காத்தான் ஆதரிக்க வேண்டும் எனும் கேள்வியும் அதன் ஆதரவாளர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும், ஒருவேளை சிலிம் ரீவர் இடைத்தேர்தலில் துன் மகாதீரின் வேட்பாளர் வெற்றி பெற்றால், அது மகாதீரின் பலத்தை நிரூபிக்க சான்றாக அமைவதோடு, பக்காத்தானை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்துகொள்ளவும் இது வழிகோலும் எனப் பக்காத்தான் ஆதரவாளர் அஞ்சுகிறார்கள்.
மலாய்க்காரர்கள் அதிக பெரும்பான்மையாக இருக்கும் சிலிம் ரீவர் இடைத்தேர்தலில், துன் மகாதீரின் வேட்பாளர் வெற்றி பெற்றால், அது மலாய்க்காரர்களின் மத்தியில் தமக்கு இருக்கும் செல்வாக்கை புலப்படுத்துவதாகவும், நாட்டைப் பிரதமராய் வழிநடத்த தாமே சரியான நபர் என்றும் மகாதீர் பறைச்சாற்றிக்கொள்ள நேரிடலாம். அன்வார் இப்ராஹிம் மலாய்க்காரர்களுக்கு அந்நியமான தலைவர், அவர் மலாய்க்காரர்களின் முழு நம்பிக்கையை பெற்றிருக்கவில்லை எனும் மாயையைத் தொடக்கத்திலிருந்தே துன் மகாதீர் தெளிவாகப் பதிவு செய்து வந்திருப்பதால்; மீண்டும் ஆட்சியில் அமர வேண்டுமானால் துன் மகாதீர்தான் பிரதமர் வேட்பாளர் எனும் முழக்கத்தைக் கூட்டணி கட்சிகளின் வாயிலிருந்தே மகாதீர் வரவைத்து விடுவார்.
துன் மகாதீரின் அரசியல் யுக்தியையும் அவரது வியூகத்தையும் அவ்வளவு எளிதில் யாரும் புரிந்துகொள்ள முடியாது. இந்நிலையில், சிலிம் ரீவர் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகத்தில் துன் மகாதீருடன் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லீ காங் (கெஅடிலான்), ஜசெகவின் அந்தோணி லோக் மற்றும் அமானா கட்சியின் தலைவர் மாட்சாபு ஆகியோர் களமிறங்கியிருப்பது மகாதீரின் அரசியல் சூழ்ச்சியில் மீண்டும் பாக்காத்தான் வீழ்ந்து விட்டதோ என ஐயங்கொள்ள வைக்கிறது.
அன்வார் இப்ராஹிம் நாட்டின் பிரதமர் ஆவதைத் தடுப்பதிலேயே பெரும் குறியாக இருக்கும் துன் மகாதீர், மீண்டும் பக்காத்தானோடு கைகோர்த்து, அன்வாரின் அரசியலையும் அவரது பிரதமர் இலக்கிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவாரோ என அன்வாரின் ஆதரவாளர்கள் வருந்துகிறார்கள். மீண்டும் கூட்டணி அமைத்தாலும் துன் மகாதீர் அதில் தாம் மட்டுமே ஆளுமை செலுத்த வேண்டும்; மற்றவர்கள் தனக்கு அடிப்பணிய வேண்டும் என்பதில் விடாபிடியாகவே இருப்பார் என்பது யாவரும் அறிந்ததே.
அரசியல் காரணியத்திற்காகவும் ஆட்சிக்காகவும் துன் மகாதீருடன் கைக்கோர்ப்பதற்குப் பதிலாக, நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராஹிம்மைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்து களமிறங்குவதே பக்காத்தானுக்குச் சிறந்தது. அதுவே, நாட்டில் பக்காத்தானின் அரசியல் எதிர்காலத்தையும் நம்பிக்கையான ஆதரவாளர்களையும் உறுதி செய்யும் எனலாம்.
அன்வாரைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்து, களமிறங்கி வென்றால், துன் மகாதீர் போன்ற சர்வாதிகாரிகளுக்குத் தலைவணங்காமல், துணிந்து மக்களுக்கான ஆட்சியை நேர்மையாகவும் வெளிப்படையான போக்குடனும் செயல்படுத்த முடியும். வெற்றி பெறாவிட்டால், எதிர்க்கட்சியாக தன்மானத்துடன், தனித்துவமாக மக்களுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கலாம். ஆட்சியைக் காட்டிலும் மக்கள் மனங்களில் அமருங்கள், ஒருநாள் ஆட்சி தானாகவே கிட்டும்.
சிலிம் ரீவர் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகத்தின் போது, துன் மகாதீரோடு பக்காத்தான் இணையக்கூடாது என அதன் ஆதரவாளர்கள் முணுமுணுத்தது, அவர்கள் பக்காத்தான் மீதும் அன்வார் மீதும் கொண்டிருக்கும் தீவிர ஆதரவையும் நம்பிக்கையையும் உணர்த்துகிறது.
பக்காத்தான் ஹராப்பான் அதன் ஆதரவாளர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, துன் மகாதீரோடு கைக்கோர்ப்பதைத் தவிர்க்குமா? அல்லது ஆட்சி அதிகாரத்திற்காக மகாதீரின் அதிகாரத்திற்குத் தலைகுனியுமா? நாட்டின் 15-வது பொதுத்தேர்தலில் தான் விடைகிடைக்கும். ஆனால், துன் மகாதீருடன் மீண்டும் பக்காத்தான் கைக்கோர்த்தால் அது அக்கூட்டணியின் பலவீனத்தை எடுத்துரைப்பதோடு மட்டுமின்றி, மக்களின் நம்பிக்கையையும் இழக்க நேரிடும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.