இராகவன் கருப்பையா – கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக கடந்த 5 மாதங்களுக்கும் மேல் நாம் தொடர்ந்து போராடி வருகிற போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காணவில்லை என்பதுதான் உண்மை.
கடந்த மாதத்தில் நம் நாட்டில் இத்தொற்று சற்று தணிவதைப் போலத் தோன்றிய போதிலும் கெடா மற்றும் பெர்லிஸ் போன்ற வட மாநிலங்களில் அது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது நமக்கு அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, பிரேஸில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளைப் போன்று பெரிய அளவில் நாம் பாதிக்கப்படவில்லை என்ற போதிலும் இந்நோயின் தாக்கம் இப்போதைக்கு நம்மை விட்டு விலகாது என்றேத் தெரிகிறது.
பசிஃபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனீசியா, துவாலு, சோலமன் தீவுகள், வனுவாத்து, கிரிபாத்தி, மற்றும் தொங்கா உள்பட மொத்தம் 12 நாடுகளை இந்நோய் எட்டிப்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அளவுக்கு மலேசியாவுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற போதிலும் சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் தலைமையிலான மருத்துவ அறிஞர்கள் குழு சிறப்பான முறையில் இதனைக் கட்டுப்படுத்தி வருவதை யாரும் மறுக்க இயலாது.
இருந்த போதிலும் இந்தத் தொற்று நம்மை விட்டு முற்றாக அகழ்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனமே கணித்துள்ளபடியால் அத்தகைய சூழலுக்கு நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இம்மாதக் கடைசியில் முடிவடையும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட வேண்டும் என தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சுகாதார அமைச்சு பரிந்துரை செய்துள்ளதால் அதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரமும் கூட மீட்சியடைவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்பதால் ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதற்கு ஏற்ப புதிய நடைமுறைக்கு நாம் மாறத்தான் வேண்டும்.
உலகின் ஆகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் சுமார் 20 விழுக்காட்டை எட்டியுள்ள வேளையில் மலேசியாவின் நிலைமையும் சற்று மோசமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துலக ரீதியில் பல நாடுகளில் புதியதாக மேலும் மில்லியன் கணக்கானோர் வறுமையில் வாடுவார்கள் என்றும் கூட கணிக்கப்பட்டுள்ளது.
‘மொரெட்டோரியம்’ எனப்படும் ‘கடன் ஒத்திவைப்பு சலுகைகள்’ அடுத்த மாதவாக்கில் முடிவடையவிருக்கும் நிலையில் நிறைய பேருக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியத்தையும் நாம் நிராகரிக்க முடியாது.
எனவே இத்தகைய சூழ்நிலையை சமாளிப்பதற்கு நமது அன்றாட செலவினங்களை குறைத்துக்கொண்டு வாழ்க்கை நடைமுறையை நாம் மிகவும் கவனமாகத் திட்டமிடவேண்டியது அவசியமாகும்.
கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி நம் நாட்டில் நடமாட்டக்கட்டுப்பாடு அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து ஆயிரக் கணக்கானோர் ‘ஒன்லைன்’ எனப்படும் நிகழ் நிலை வழி புதிதாக வியாபாரங்களைத் தொடக்கியுள்ளது உண்மையிலேயே வியக்கத்தக்க ஒரு விசயம்தான்.
மிகக் குறைவான முதலீட்டிலான இதுபோன்ற, காலத்திற்கேற்ற தொழில் முறைகளை பரிசீலிப்பதும் விவேகமான ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆயுள் காப்புறுதி விற்பனை போன்ற முதலீடு இல்லாதத் தொழில்களையும் கூட கருத்தில் கொள்வதற்கு இது சரியானத் தருணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நாட்டின் பிரபல ஆயுள் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் இந்தியப் பிரிவின் விற்பனை விகிதம் 2ஆம் கால் ஆண்டில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது சமார் 3.5% உயர்வைப் பதிவு செய்துள்ளது.
அதே காலக்கட்டத்தில் புதிய முகவர்களின் சேர்க்கையும் சுமார் 22.5% உயர்வு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இக்கட்டான காலக்கட்டத்தில் அனாவசியமான செலவினங்களை குறைத்துக்கொண்டு ஆயுள் காப்புறுதி போன்ற சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதனையே இது உணர்த்துகிறது.
பொருட்களை வாங்கும் போது பிரபலமான வியாபாரச் சின்னங்களுக்காக அதிக அளவில் பண விரயம் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நாம் ஒவ்வொருவரும் சுகாதார ரீதியில் நம் உம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது அவசியமாகும்.
அதே சமயத்தில் கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்க முடியாத பட்சத்தில் அத்தகைய இடங்களில் முககவசம் அணிவது மற்றும் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற அம்சங்களுக்கு இன்னும் கொஞ்சம் நாள்களுக்கு நாம் முன்னுரிமை வழங்கத்தான் வேண்டும் – வேறு வழியில்லை!