தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தை சென்னையில் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா நேற்று திறந்து வைத்தார். இதில் டி.ஜி. தியாகராஜன், டி.சிவா, தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, நிதின் சத்யா, எஸ்.ஆர்.பிரபு, சி.வி.குமார் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பாரதிராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“கொரோனாவால் இடையில் நிற்கும் படங்களுக்கு நடிகர்-நடிகைகள் முன்னுரிமை கொடுத்து நடித்துக்கொடுக்க வேண்டும். இந்த படங்களை முடித்து விட்டுத்தான் அடுத்த படங்களில் நடிக்க வேண்டும். தியேட்டர் அதிபர்களுக்கு சில கோரிக்கைகள் வைத்து பேச்சுவார்த்தை நடத்த கேட்டு இருந்தோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர். திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு போகவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். நீங்கள் அடாவடித்தனமாக சில விஷயங்கள் செய்யும்போது எங்களுக்கு வேறு வழிகள் இருக்கிறது.
தொழில் சுதந்திரம் எனக்கு உண்டு. இந்த பொருளை குறிப்பிட்ட நபருக்குத்தான் விற்க வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. எனது பொருளை யாருக்கும் கொடுப்பேன். தியேட்டர்களை திருமண மண்டபமாக மாற்றுவோம் என்கிறீர்கள். கல்யாண மண்டபமாக வைத்துக் கொள்ளுங்கள். மாநாடு நடத்துங்கள். அது உங்கள் கட்டிடம். எங்களுடையது அல்ல. எங்கள் பொருள் உள்ளே வரும்போதுதான் அந்த கட்டிடம் பெருமை அடைகிறது. எங்கள் பொருளை பார்க்கத்தான் ரசிகர்கள் உள்ளே வருகிறார்கள். ஓ.டி.டிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக தியேட்டர் அதிபர்களுக்கு இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கவில்லை எங்கள் வேண்டுகோளை ஏற்றால் தியேட்டர்களை நோக்கித்தான் போவோம். இல்லை என்றால் ஓ.டி.டிக்கு போகவும் தயாராக இருக்கிறோம்.
விஞ்ஞான வளர்ச்சியில் எதுவும் நடக்கும். லாபத்துக்குத்தான் படம் எடுக்கிறோம். பெரிய நடிகர்கள் படங்களை திரையிடுகிறீர்கள். சிறிய படங்களை வாங்குவது இல்லை. எங்களிடம் 80 சிறிய படங்கள் இருக்கிறது. அந்த படங்களை முதலில் வெளியிட தைரியம் இருக்கிறதா?. இவ்வாறு பாரதிராஜா கூறினார்.
dailythanthi