எனது பிரதிநிதி என முன்னிலைப் படுத்துபவர்களை நம்ப வேண்டாம்: நடிகர் அஜித்

நடிகர் அஜித்குமார்

எனது பிரதிநிதியாக முன்னுறுத்திக் கொள்பவர்களை நம்ப வேண்டாம் என நடிகர் அஜித், வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமாரின் சட்டப்பூர்வ ஆலோசகர் அஜித் குமார் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘‘சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிகாரர் சார்பாகவோ, அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிகாரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளது.

இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும், அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

மேலும், தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரேனும் அணுகினால் அந்த  தகவலை சுரேஷ் சந்திராவிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார். இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால் அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொது மக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

malaimalar