சைலன்ஸ்

 

நடிகர்மாதவன்
நடிகைஅனுஷ்கா
இயக்குனர்ஹேமந்த் மதுக்கர்
இசைகோபி சுந்தர்
ஓளிப்பதிவுஷெனியல் டியோ

அமெரிக்காவில் இருக்கும் ஒரு பங்களாவில் மர்மமான முறையில் இரண்டு பேர் இறந்து போகின்றனர். அந்த வீட்டில் உள்ள ஒரு ஓவியத்தைத் தேடி மாதவனும் அவரது காதலியான அனுஷ்காவும் செல்கிறார்கள். அங்கு மாதவன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். காயங்களுடன் தப்பிக்கும் அனுஷ்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இந்த கொலையை துப்பறிய அஞ்சலி மற்றும் மைக்கல் மேட்சன் களமிறங்குகிறார்கள். இதற்கிடையில் பல இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள். காணாமல் போன பெண்களுக்கும் மாதவன் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக விசாரிக்கிறார்கள். இறுதியில் மாதவன் எப்படி கொல்லப்பட்டார்? காணாமல் போன பெண்கள் என்ன ஆனார்கள்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

இசைக்கலைஞராக நடித்திருக்கும் மாதவன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான வேடம் என்று திறம்பட செய்திருக்கிறார். காது கேட்காமல், வாய் பேச முடியாமல் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. ஓவியராக வரும் அனுஷ்கா படத்தில் நிறைய காட்சிகளில் வருகிறார். ஆனால், நடிப்பு திறனை வெளிப்படுத்து அளவிற்கு காட்சிகள் அமையாதது வருத்தம். மாதவனும் அனுஷ்காவும் வரும் காட்சிகள் ரசிக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக வரும் அஞ்சலி, கதாபாத்திரத்திற்கு பொருந்தினாலும், நடிப்பில் மிளிரவில்லை. குறிப்பாக இவர் பேசும் ஆங்கிலம் செட்டாகவில்லை. மற்றொரு போலீஸ் அதிகாரியான மைக்கல் மேட்சன் மற்றும் சுப்பராஜு ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். மற்றொரு கதாநாயகியாக வரும் ஷாலினியின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது.

திகில் கலந்த திரில்லர் படத்தை இயக்கி இருக்கிறார் ஹேமந்த் மதுக்கூர். படம் ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பு போகபோக குறைந்து விடுகிறது. அமெரிக்காவை சுற்றியே படமாக்கி இருக்கிறார். ஹாலிவுட் தரத்தில் உருவாக்க நினைத்த இயக்குனர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பல படங்களில் பார்த்த அதே திருப்பங்கள் சோர்வை ஏற்படுத்துகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடியும் அளவிற்கு வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் இன்னும் வேலை வாங்கி இருந்தால் இந்த சைலன்ஸ் இன்னும் சத்தமாக இருந்திருக்கும்.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கவனம் பெறவில்லை. ஷெனியல் டியோ ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அமெரிக்கா என்பதால் பிரம்மாண்டம் என்று இல்லாமல் கதைக்கு எது தேவையோ அதை அழகாக படம் பிடித்து கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘சைலன்ஸ்’ சத்தம் தேவை

malaimalar