ஆங்கிலம் தாய்மொழியா என்ன? மலேசியாவில் ஆங்கிலம் யாருக்கும் தாய்மொழி அல்ல. இருந்தும், தமிழர்களில் சிலர் ஆங்கிலத்தை உணர்வால் தாய்மொழிப்போல் எண்ணிக்கொண்டு ஆங்கிலேயராகவே வாழ்கின்றார்கள்.
தமிழர் அடையாளம் தமிழ்மொழியில் இல்லை என்றும், நல்ல பொருளாதார முன்னேற்றம் கண்டு, ஆங்கிலம் பேசிக்கொண்டு, அவ்வப்போது ‘தமிழ் சாமி கும்பிட்டேன், சடங்குகள் கடைபிடித்தேன்’ என்று இருந்தால்தான், தமிழினத்திற்குப் பெருமை என்பது இவர்களின் வாதம்.
புலம்பெயர்ந்து பலநாடுகளில் வாழும் நம்மவர்கள் அந்த நாட்டு மக்களில் ஓர் அங்கமாகவே மாறி, தாய்மொழியை மறந்துவிட்டனர். அதேப் பித்தவாதக் கண்ணாடியை அணிந்து கொண்டு, ‘இங்கேயும் தமிழர்கள் இப்படித்தான் வாழவேண்டும்’ என்று பார்ப்பாரும் உண்டு.
இவர்களுக்கு வாழ்க்கைத் தரம் என்றால் கார், பங்களா, நுனிநாக்கில் ஆங்கிலம், சொகுசு வாழ்க்கை, மரபு மீறல் இவைதான்.
ஆங்கிலம் பேசும் வெள்ளைக்காரர் நாட்டில் கூட அன்றாடங்காய்ச்சிகள் உண்டு. அங்கேயும் ஏழ்மை உண்டு.
ஆங்கிலமொழி கற்றல் கற்பித்தல்
அந்நிய மொழியான ஆங்கிலம் உட்பட தாய்மொழி அல்லாத வேறு எந்த மொழியையும் நன்கு கற்றுக் கொள்ள,
அ. அதற்கான சூழலையும் தேவையையும் வாய்ப்பையும் உருவாக்க வேண்டும்;
ஆ. சிறந்த கற்றல் கற்பித்தல் உத்தியைக் கடைபிடிக்க வேண்டும்.
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இன்னும்கூட மாணவர்கள் ஆங்கிலம் நன்கு கற்றுக்கொள்வதற்கான சூழலை மேம்படுத்தியும் அதற்கான வாய்ப்பையும் அதிகரிக்க வேண்டும் என்றால் நியாயம் இருக்கிறது. தமிழ்ப்பள்ளிகள் எல்லாம் தலைசிறந்தவை என்று நாம் பொய்கூற மாட்டோம். வளர்ச்சிக்கான வெற்றிடம் எப்போதும் இருக்கிறது. வளர்ச்சிக்கான ஒரு பரிந்துரையாக அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேசியப் பள்ளியோடு ஒப்பிடுதல்
தமிழ்ப்பள்ளிகளுக்கு என்று விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் நின்றுகொண்டு, ஆசிரியர்கள் ஆங்கில மொழியைச் சிறப்பாக கற்பிக்க முயல்கின்றார்கள். ஆங்கில மோகத்தில் வீட்டில் ஆங்கிலம் பேசும் பெற்றோர்களின் பிள்ளைகள் நிறைபேர் தேசியப் பள்ளிகளில் படிக்கின்றார்கள். அதனால், ஆங்கில மொழி தேர்ச்சி விகிதம் தேசியப்பள்ளிகளில் கூடுதல் என்று ஏரண அடிப்படையில் கூறலாம். ஆனால், கற்பித்தல் தரம் தேசியப் பள்ளியில் அதிகம் என்பதை ஆய்வு செய்தேக் கூறமுடியும். பொத்தாம் பொதுவாக அடித்துவிட்டு செல்வது சிறப்பன்று.
சிலர், மலேசியப் பள்ளிகளில் ஆங்கில மொழியின் தரம் உலகத்தரத்திற்கு இல்லையென்கின்றார். தாய்மொழிப்பள்ளிகளில் இன்னும் மோசம் என்கிறார். தாய்மொழிப்பள்ளியில் ஆங்கிலம் தரமாக இருந்தாலே போதும், உலகத்தரத்தைப் பிறகு எட்டிவிடலாம். கல்வியில் ஆளுமை என்பது தொடர்முயற்சியின் பயனாகக் கிடைப்பது.
டி.எல்.பி. – இருமொழி பாடத்திட்டம்
சிலர், ஆங்கில மொழியின் தரத்தை உயர்த்த கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தச் சொல்கின்றார்கள். டி.எல்.பி.-யையும் ஒரு வாய்ப்பாக பாருங்கள் என்று அவர்கள் சொல்வதில் இருந்து அறிய முடிகிறது.
தாய்மொழிப்பள்ளிகளில் ஆங்கில மொழியின் கற்றல் கற்பித்தல் தரம் உயர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான வழிகள் ஆயிரம் இருக்கின்றன. இதில் பாயான்லெப்பாசு தலைமை ஆசிரியர் திரு.சங்கா நல்ல எடுத்துக்காட்டு. மகிழம்பூ (மெங்கெளும்பு) தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி மாரியம்மாள் மேலும் ஓர் எடுத்துக்காட்டு. டி.எல்.பி இல்லாமலேயேப் பள்ளியில் ஆங்கில ஆளுமையை ஏற்படுத்தி உள்ளனர் என்பதே உண்மை.
ஆங்கில மொழியின் தரத்தை உயர்த்த அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் படித்துக் கொடுக்க வேண்டும் என்பதில்தான் எமக்கு உடன்பாடில்லை.
தொடக்கக் கல்வி, தாய்மொழியில் அடிப்படை அறிவை பெறவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருக்கின்றது. கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு இப்படி பல அடிப்படை அறிவுகளைத் தாய்மொழியில் பெற வேண்டும். அதன் பிறகு, இடைநிலைப் பள்ளியில் மாணவர்கள் மொழிப்பாடங்களைத் தவிர்த்து மற்ற எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்கலாமே! படித்தால் ஆங்கில மொழியின் தரம் கிடு கிடுவென்று உயருமே! அதைப் பற்றி சிந்திக்கலாமே!
அதை நோக்கி சிந்தனையை நகர்த்தாமல் தாய்மொழிக் கல்வியைக் குறிவைக்க வந்து விடுகின்றார்கள் குழப்பவாதிகள்.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்றாகிவிட்டது தாய்மொழிப் பள்ளிகள்.