தோட்டப்புறங்களில் நம் சமூகம் விரிந்து பரவிக் கிடந்தக் காலக்கட்டத்தில் நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம், அங்குப் பயின்ற நம்மின மாணவர்களின் எண்ணிக்கையும் பெருமிதம். தோட்டத் துண்டாடலில் வாழ்வியல் அடையாளம் தொலைத்து நகர்புறங்களுக்கும், அதனை ஒட்டியப் பகுதிகளிலும் இந்தியர்கள் குடியேறிய நாள் முதல், தமிழ்ப்பள்ளிகளும் அதன் அடையாளத்தையும் அதன் செழுமையுற்ற அழகியலையும் தொலைத்து நிற்கும் காட்சியை இன்று வரை நாம் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.
தோட்டங்கள் நமக்கு அந்நியமானதால், தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களின் வருகைக்காக ஏங்க வேண்டியச் சூழல் உருவெடுத்தது. தோட்டப்புறப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மடமடவெனச் சரிய தொடங்கியது. இதனால், மாணவர்கள் இல்லாதத் தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன, இன்னும் சில பள்ளிகள் மூடப்படுவதற்கான சாத்தியத்தை எதிர்நோக்கி உள்ளன.
இந்நாட்டில் தமிழினத்தின் அடையாளமாக உயிர்பெற்றிருப்பதில் தனித்துவமாகவும் வரலாற்று சான்றாக இருப்பது தமிழ்ப்பள்ளிகள் தான். அதனைத் தொடர்ந்து தொலைக்கும் சூழலை சத்தமில்லாமல் ஒரு புறம் அரசாங்கமும் இனவாத அரசியல்வாதிகளும் மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் நமது இன, மொழி பற்று இல்லாமையும் அலட்சியமும் அறிவார்ந்த நிலையில் சிந்திக்காத நிலையும், தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளுக்கான மூடுவிழாவிற்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கிறது.
ஓர் இனத்தின் வரலாற்றையும் அதன் தொன்மையையும் மெய்ப்பிக்கும் அடையாளமாக இருப்பது அதன் தாய்மொழிதான். அந்நிலையில், மலாயா தொடங்கி மலேசியா வரை இந்நாட்டில் நமது வரலாற்று பெருமை பேசும் முகவரியாக இருப்பது தமிழ்ப்பள்ளிகள் தான். அத்தகையப் பெருமைகுரிய அடையாளத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக நாம் தொலைத்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சுய விமர்சனம் செய்துக் கொள்ளாமல், நம்மால் துளியும் உணர முடியாது.
இந்நாட்டில் தொடக்கம் முதல், தமிழ்ப்பள்ளிகள் மீதும் அதன் எதிர்காலத்தின் மீதும் நாம் கவனம் செலுத்தி இருந்தால் இன்றைக்குத் “தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு” எனத் தெருவில் கூவிக்கொண்டிருக்கும் நிலை நமக்கு வந்திருக்காது. தமிழ்ப்பள்ளிக்கும் தமிழுக்கும் எப்போதெல்லாம் ஆபத்து வந்ததோ, எப்போதெல்லாம் அவை புறக்கணிக்கப்பட்டதோ, அப்போதெல்லாம் நாம் மௌனம் தானே காத்தோம். எல்லாக் காலக்கட்டத்திலும் ஒரு சிலரைத் தவிர நம்மில் பெரும்பான்மையோர் வேடிக்கைதானே பார்த்தோம்.
ஒரு சீனப்பள்ளிக்கூடம் மூடப்படும் போது, அந்த உரிமத்தை நகரத்தின் மையத்தில், தங்களுக்குத் தேவையான இடத்தில், அப்பள்ளியின் பெயரில் புதியப் பள்ளிக்கூடம் கட்டப்பட்டதை இன்றைக்கும் நாம் நாட்டின் பெரும் நகரங்களில் பார்க்கவே முடிகிறது. ஆனால், இதுவரை ஒரு தோட்டப் பள்ளியாவது நகரத்தில் மையத்தில், புதியத் தோற்றம் கண்டுள்ளதா என்றால் நமக்கு ஏமாற்றமும் விரக்தியும் தான் மிஞ்சும். சீனர்கள் மத்தியில் அடையாளம் தொலைத்துவிடக்கூடாது எனும் உணர்வு நம்மிடையே துளியும் இல்லாதது வேதனையானது.
இன்றையச் சூழலில், நம் இனத்தவர்களிடையே பிறப்பு விகிதம் குறைந்து வருவதைத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவிற்கு ஒரு காரணியாக சொல்லப்படுவதை நாம் அறிந்திருந்தாலும் கூட, தமிழ்ப்பள்ளியோடு ஒப்பிடுக்கையில் பிற மொழிப்பள்ளிகளிலும் நம் மாணவர்கள் கிட்டதட்ட சரிநிகராக இருக்கும் சூழலை கவனிக்கும் போது, வேதனையும் வருத்தமும் நம்மை ஆட்கொள்ளதானே செய்கிறது. சுமார் 40 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட நம் இன மாணவர்கள், பிறமொழி பள்ளிகளில் பயில்வதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.
பேரா மாநிலத்தில், அதன் முன்னாள் தமிழ்ப்பள்ளி கண்காணிப்பாளர் திரு ந மனோகரன், 2010-ம் ஆண்டுகளில், ஒரு பள்ளி நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், இம்மாநிலத்தில் மட்டும் பிறமொழிப்பள்ளிகளில் சுமார் 43 விழுக்காடு நம் இன மாணவர்கள் பயில்வதாக கூறியதை நினைவுக்கூறும் இந்நிலையில், தற்போதைய அதன் நிலை என்னவென்பதை நினைத்துப் பார்க்க கொஞ்சம் பதற்றமாகவே உள்ளது. பேரா மாநிலத்தில் மட்டுமே இந்த நிலையென்றால், பிற மாநிலங்களின் நிலவரம் எப்படியிருக்குமோ?
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியும் மேம்பாடும் அதன் சாதனைகளும் உலகளாவிய நிலையில் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தோட்டப்புறப் பள்ளிகளின் சாதனைகள் கூட உலகளாவிய நிலையில் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் பெருமை சேர்த்திருக்கும் நிலையில், தமிழ்ப்பள்ளிகளின் அடைவுநிலை சிறப்பாக இல்லை, தமிழ்ப்பள்ளியில் போதிய வசதிகள் இல்லை என நொண்டிச்சாக்கு கூறும் கூட்டங்களின் முகத்தில் இருப்பது கண்கள் அல்ல, அவை புண்கள்தான்.
அதுமட்டுமின்றி, காலங்காலமாய் ஒரு குறிப்பிட்டக் கூட்டம் சொல்லி வரும் தமிழ் சோறு போடுமா எனும் வாசகத்தை இனி கேட்டால் அவர்கள் முகத்தில் காரி உமிழத்தான் வேண்டும். பிற மொழிப்பள்ளிகளில் படித்தால் வேலை கிடைக்கும், அம்மொழியில் தம் பிள்ளைகள் ஆளுமை கொண்டிருப்பார்கள் என கூறும் அறிவிலிகளின் கவனத்திற்கு இங்கு ஒன்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்ப்பள்ளியில் தன் ஆரம்பக்கல்வியைத் தொடங்கிய மாணவன், பிற மொழிப்பள்ளியில் பயின்ற மாணவர்களைக் காட்டிலும் கல்வியிலும், பண்பாட்டிலும், நன்னெறி ஒழுக்கத்திலும், மரியாதை பண்பிலும் தனித்தும் நனி சிறப்போடும் இருப்பதை மறுக்க முடியாது.
தமிழ் சோறு போடுமா? இது முட்டாள்களின் புலம்பல். தாய்மொழி என்பது சோறு போடுவதற்காக அல்ல. அஃது ஒருவனின் அடையாளத்தை மெய்ப்பிப்பதாகும். அவனது வரலாற்றையும் தொன்மையையும் பறைசாற்றுவதாகும். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பது எத்தகைய அர்த்தத்தைக் கொண்டுள்ளதோ அதுபோல், இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் அழிந்தால் தமிழோடு நாமும் அழிந்துப் போவோம் என்பதைத் தமிழ் சோறு போடுமா எனக் கேட்கும் முட்டாள் கூட்டங்கள் உணர வேண்டும்.
தமிழ்ப்பள்ளியும் தமிழ் மொழியும் சோறு போடதான் வேண்டுமானால், அப்படி உரைக்கும் எவனும், இங்கு மனிதனாகக் கூட வாழ தகுதியற்றவன். உலகின் எத்தனையோ நாடுகளில் தாய்மொழி பள்ளிகள் இல்லை, அங்கு தாய்மொழி மறந்தும் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் சோறு இல்லாமல் செத்தா போனார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் அடையாளம் தொலைத்து நடைபிணமாய்தான் வாழ்கிறார்கள். வயிற்று பிழைப்புக்குத் தாய்மொழி வேண்டாம். ஆனால், வாழ்வியல் அடையாளத்திற்குத் தாய்மொழிதான் சான்று. இதை உணராமல் போனால், மலேசியாவிலும் தமிழர்கள் இருப்பார்கள், தமிழ் இருக்காது.
இன்று தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் முழக்கம் ஒருசில போலிகளால் மாசுபடிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த முழக்கம் நாட்டின் ஒலிக்கத் தொடங்கியது முதல் இன்று வரை, சில போலி உணர்வாளர்களாலும் அரசியல், இயக்கவாதிகளாலும் அதன் உன்னதம் வெறும் வெற்று கூச்சலாக மாறிபோய்விட்டது. தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என முழக்கம் இட்ட எத்தனை அரசியல்வாதிகளின் பிள்ளைகள், அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், இயக்கவாதிகள், அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் பிள்ளைகள் தத்தம் ஆரம்பக்கல்வியைத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கியுள்ளனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்ட முன் வருவார்களா?
அரசியல்வாதிகளில் ஒருசிலரை நாம் பெருமிதமாக கூறலாம் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் படிக்கிறார்கள், படித்தார்கள் என்று. இன்று தமிழ்ப்பள்ளியின் காவலர்கள் போல் காட்டிக்கொள்ளும் எத்தனையோ பேரின் பிள்ளைகளும் அவர்களைச் சார்ந்தவர்களின் பிள்ளைகளும் இன்றைக்கும் அன்றைக்கும் மழைக்காககூட தமிழ்ப்பள்ளி பக்கம் ஒதுங்காதவர்கள் தான். இது அரசியல், பொது அமைப்பு என எல்லாம் நிலையிலும் தமிழுக்காகவும் தமிழ்ப்பள்ளிகளுக்காகவும் பேசும் வீணர்களைக் குறிக்கிறேன்.
அதுபோலவே, இன்றைக்கும் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் ஆகியோரின் பிள்ளைகள் பிற மொழிப்பள்ளிகளில் தங்களின் ஆரம்பக்கல்வியைத் தொடங்கியுள்ளதைக் காணவே முடிகிறது. இவர்களுக்கேத் தமிழ்ப்பள்ளிகள் மீது நம்பிக்கையும் அக்கறையும் இல்லாதபோது சாமானிய மக்களை என்னவென்று சொல்ல…. பிழைப்பிற்குத் தமிழும் தமிழ்ப்பள்ளியும் வேண்டும். ஆனால், தம் வீட்டுப்பிள்ளை மட்டும் பிறமொழி பள்ளியில் தான் படிப்பான் என்பது எந்தவகையில் நியாயம். இதைச் சம்மந்தப்பட்டவர்கள் உணர்வார்களா?
இதற்கிடையில்,மற்றுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். அதாவது, தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனத் தமிழ்ப்பள்ளி உரிமை பேசும் பத்திரிக்கையில் அறிக்கை விடுபவர்களும், பத்திரிக்கையைச் சார்ந்தவர்களும் எத்தனை பேர் தத்தம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பியுள்ளனர் என கேள்வி எழுப்பினால் கூட அவர்களுக்கு வலிக்கிறதோ இல்லையோ நமக்கு வலிக்கத்தான் செய்யும். பத்திரிக்கை துறையைச் சார்ந்த எத்தனையோ பேரின் வீட்டுப்பிள்ளைகள் மாற்றான் பள்ளியில் கற்க, இங்கு பத்திரிக்கையில் அவர்களோ தமிழ்ப்பள்ளி நமது தேர்வு எனப் போலியாய் முழங்கிக்கொண்டுதான் இருந்தார்கள்.
ஒரு தமிழ்ப்பள்ளி மூடப்படும் போதும், தமிழ்ப்பள்ளிக்கு ஏதும் சிக்கல் வரும் போதும் பத்திரிக்கையில் அறிக்கை விடும் அறிக்கைவாதிகாளில் எத்தனை பேர் தத்தம் வீட்டுப்பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பினார்கள் என ஒரு நிருபராவது கேள்வி எழுப்பியிருந்தால், வெற்று அறிக்கைகளுக்கு இங்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கலாம். செய்தி வேண்டும் என்பதற்காக மனசாட்சியே இல்லாமல் சில வேளைகளில் அதையும் எழுததானே வேண்டியுள்ளது.
இதையெல்லாம் சொல்வதாலும் எழுதுவதாலும் என் மீது அவர்களின் கோபம் திரும்பலாம். என்ன செய்வது சொல்லத்தானே வேண்டும். நாட்டிலுள்ள அரசியல்வாதிகள், பொது இயக்கத்தினர், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், தமிழ்ப்பத்திரிக்கை துறை, இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள், தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என முழங்கும் உணர்வார்கள் என அனைவரும் துணிந்து தத்தம் பிள்ளைகளும் தங்களைச் சார்ந்தவர்களின் பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளியில் தான் படிக்கிறார்கள், படித்தார்கள் எனத் துணிந்து வெளிப்படையாக அறிவிக்க முன் வருவார்களா?
மேலும், தற்போதைய சூழலில் மலாய்ப்பள்ளியிலும் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வருவதால் எந்தப் பள்ளியில் படித்தாலும் தன் பிள்ளை தாய்மொழியைக் கற்றுக் கொள்ள முடியும் எனும் வாதத்தைச் சில பெற்றோர்கள் முன் வைப்பதையும் அறியவே முடிகிறது. ஆனால், தாய்பாலுக்கும் புட்டிப்பாலுக்கும் வேற்றுமை இருப்பதை அவர்கள் உணர வேண்டும். மலாய்ப்பள்ளியில் தமிழ் மொழியும் கற்பிக்க அப்போதைய கல்வி அமைச்சு எடுத்த முடிவை அன்றைக்கு அரசுக்கு ஒத்து ஊதியவர்களும் தடுக்கவில்லை, அஃது எதிர்காலத்தில் நம் கழுத்தை நெரிக்கும் என நாமும் சிந்திக்கவில்லை.
நாம் எப்போதும் கண்கெட்ட பின்னர் சூரிய வணக்கம் செய்யும் கூட்டம் தானே. தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்பது இன்னமும் அதன் இலக்கை எட்டவில்லைதான். அதற்கு முதன்மை காரணியம் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் போலி முகங்கள் தான். அஃது அதன் உண்மை தன்மையைத் தொலைத்து வெறும் வெற்று முழக்கமாக இருப்பதும் அதற்கு ஒரு காரணம் எனலாம்.
போதிய வசதிகள் இல்லாவிட்டாலும் கற்றல் கற்பித்தலிலும் மட்டுமின்றி பல்வேறு நிலைகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகளும் ஆசிரியர்களின் வெற்றிகளும் இலக்கும் நனிசிறப்பாகவே இருக்கிறது. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகள் தமிழ்ப்பள்ளியோடு நின்றுவிடாமல் பல்கலைக்கழகம் வரை தொடர்வதை நாம் எல்லா காலக்கட்டத்திலும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இங்குத் தமிழ்ப்பள்ளியில் கண்ணுக்குத் தெரியாத பிழைகளைப் பேசும் நம்மவர்கள், அங்கு பெருமிதம் பேசும் அளவிற்குக் குவிந்துக்கிடக்கும் சாதனைகளைப் பேசுவதில்லை.
பிற மொழிகளில் தன் வீட்டுப்பிள்ளைகள் பேசுவதைக் கண்டு பெருமைப்படும் பெற்றோர்களே, அஃது பெருமையில்லை. தாய்மொழி தெரியாமல் போனால் தான் வெட்கப்பட வேண்டும். தாய்மொழி பேசாதவன், தாய்மொழியில் எழுத, படிக்கத் தெரியாதவன் இந்தத் தரணியில் வாழ அருகதையற்றவன். அவன் செத்து மடிவதே மேல். ஆங்கிலம் என்பது மொழிதான். அஃது அறிவல்ல. அதுபோல், தமிழ்மொழி வெறும் மொழியும் அல்ல, தமிழ்ப்பள்ளி வெறும் பள்ளிக்கூடம் மட்டுமில்லை. அவை இரண்டும் இந்நாட்டில் ஓர் இனத்தின் வரலாறு. அந்த இனத்தின் அடையாளம். அந்த இனத்தின் உயிர் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு இனியும் வெற்று முழக்கமாக இல்லாமல், உன்னதமானதாகவும் உண்மையானதாகவும் இருந்தால் அதன் இலக்கு வெற்றியை நோக்கி முன்னேறும். இல்லையெனில், வழக்கம் போல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு குறித்தும் சரிவு குறித்தும் ஒரு செய்தியாகப் பத்திரிக்கையில் வெட்டியாகப் பேசிக்கொண்டுதான் இருப்போம்.
இந்தக் கட்டுரை யாரையும் காயப்படுத்த அல்ல. நாமும் நம் வரலாற்று அடையாளமும் தொலைந்து போய்விடக்கூடாது என்பதற்காக.
தமிழ் பள்ளியே நமது தேர்வு, நண்பர் சிவாலெனின் பதிவுக்கு வாழ்த்துகள். நண்பர் பதிவு செய்த கருத்துகள் முற்றிலும் உண்மை. இன்று நமது முதன்மை பிரச்சனையும் உடன் தீர்வு காண வேண்டிய பிரச்சனையும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் பற்றாக்குறை என்பதே! இதற்கான தீர்வுதான் என்ன?
அ. தமிழ்ப்பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள். ஆகவே, அரசு ஆதரவோடும் ஒத்துழைப்போடும் தோட்டபுறத்தில் உள்ள பளளிகள், இடமாற்றம் காணப்பட வேண்டும்; மாறாக, மூடிவிடுவோம் என பயமுறுத்துதல் அல்ல; கைகழுவுதல் அல்ல;
நாட்டு மக்கள் மீது அக்கரையுள்ள அரசு, மக்களின் உரிமை, தேவைகளை அறிந்து செயல்படுதல்தான்.