குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் மஇகா!

இராகவன் கருப்பையா – நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அதன் அரசியல் வரலாற்றில் காலங்காலமாக இந்தியர்கள் என்றால் ம.இ.கா.தான் என்ற நிலைமாறி நீண்டநாள்களாகிவிட்டன.

கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணி அக்கட்சிக்கு ஏறக்குறைய சாவுமணியடித்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அதற்கடுத்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவிய ம.இ.கா. முடங்கிப்போனது நம் எல்லாருக்குமே தெரியும்.

இடப்பட்ட காலத்தில் 2 பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள போதிலும் பழைய நிலைக்கு மீட்சிபெற இயலாமல் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதையாக இப்போது அக்கட்சிக்கு ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதிதான் உள்ளது.

இருந்த போதிலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக பிரதமர் முஹிடினின் கொல்லைப்புற அரசாங்கத்தில் அங்கம் பெற அரியதொரு வாய்ப்புக் கிடைத்ததிலிருந்து அக்கட்சி கொஞ்சம் உத்வேகம் அடைந்துள்ளதை நம்மால் உணரமுடிகிறது.

குறிப்பாக வழக்கத்திற்கு மாறாக அதன் உயர்மட்டத் தலைவர்கள் ஒருசிலரின் துணிச்சலான அறிக்கைகள் சமீபகாலமாக பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

ஆண்டாண்டு காலமாக அம்னோவுக்கு அடிமைப்பட்டு ‘ஆமாம்சாமி’ போட்டே காலத்தை நகர்த்திய ம.இ.கா. தற்போது சற்று தைரியமாக செயல்படத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

எனினும் இந்த பேச்செல்லாம் வெறும் வெந்து வேட்டாக காற்றோடு கரைந்து காணாமல் போய்விடாமல் செயல்வடிவம் பெற்றால்தான் அந்த கட்சி தனது பழைய நிலைக்கு ஓரளவாவது திரும்பி மலேசிய இந்தியர்களின் நம்பிக்கையை சம்பாதிக்க முடியும்.

ஒரு சில தினங்களுக்கு முன் ம.இ.கா.வின் உதவித் தலைவர் சிவராஜ் அம்னோ மீது சீறிப் பாய்ந்தது எல்லாருக்குமே சற்று வியப்புதான்.

சுங்ஙை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி தொடர்பான ஒரு சர்ச்சையில், அம்னோ தலைமைத்துவத்தை நோக்கி ‘திமிராக நடந்து கொள்ளவேண்டாம்’ என்று வெளுத்துக்கட்டிய அவர் சக உறுப்பு கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று எச்சரித்தார்.

நம் நினைவுக்கு எட்டிய வரையில் எந்த ஒரு ம.இ.கா. தலைவரும் அம்னோவை நேரடியாகவே இப்படி சாடியதாகத் தெரியாது.

அம்னோவைப் பொறுத்தவரையில் இதுபோன்ற மிரட்டல்களெல்லாம் வெறும் ‘கொசுக்கடிதான்’ என்ற போதிலும் ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ எனும் கூற்றை சிவராஜ் நினைவுறுத்த எண்ணுவதைப் போல் தோன்றுகிறது.

அண்மைய காலமாக அக்கட்சியின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரனும் கூட அம்னோவின் தான்தோன்றித்தனமான போக்கிற்கு எதிராக பல வேளைகளில் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார் என்பதையும் இங்கு நாம் நினைவுக்கூற வேண்டும்.

இருப்பினும் எந்த ஒரு அரசாங்கப் பதவியிலும் இல்லாத போது மட்டும்தான் இவ்வாறான துணிச்சலான வீரவசனம் வெளிப்படுமா என்ற ஐயப்பாடு மக்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

ஏனென்றால் அரசாங்க உயர் பதவியில், குறிப்பாக அமைச்சரவையில் இடம் கிடைத்தவுடன் நம்மவர்கள் எல்லாருமே கூழைக்கும்பிடு போடும் ‘மெளன சாமியார்கள்’தான் என்பது அனுபவம் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

இதற்கிடையே சிவராஜின் சீற்றத்தைத் தொடர்ந்து அம்னோவுடனான புரிந்துணர்வின்மையும் சர்ச்சையும் வலுவடையுமேயானால் முஹிடினின் பெரிக்காத்தான் கூட்டணியுடன் அக்கட்சி இணையும் சாத்தியத்தையும் நாம் நிராகரிக்க இயலாது.

எக்காரணத்தைக்கொண்டும் பாரிசானை விட்டு ம.இ.கா. விலகாது என விக்னேஸ்வரன் அண்மையில் அறிவித்த போதிலும் ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்ற சினிமா வசனம்தான் நமக்கு ஞாபகம் வருகிறது.

முஹிடின் தனது பெர்சத்து கட்சியை அம்னோவைவிட பலமிக்க ஒரு மலாய்க்கார கட்சியாக உருமாற்றும் திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் எதுவுமே சாத்தியம்தான்.

அதன் தொடர்பில் பெரிக்காத்தானை சக்திமிக்க ஒரு பல்லின கூட்டணியாக உருவாக்க அவர் எண்ணம் கொண்டிருந்தால் ம.இ.கா.வை அவர் அரவணைக்கக் கூடும்.

‘இங்கு இல்லையென்றால் அங்கு’ என்ற தைரியத்தில்தான் ம.இ.கா. தலைவர்களுக்கு தற்போது புத்துணர்ச்சி பிறந்திருக்கக் கூடும் என நாம் ஐயப்பாட்டுள்ளதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதான் தற்போதைய அரசியல்!