அறிவார்ந்த ஆசிரியம், புதிய தலைமுறை ஆக்கம் – குமரன் வேலு

ஆசிரியர் தினச் சிறப்புக் கட்டுரை | இந்த முழக்கவரி, 21-ஆம் நூற்றாண்டுக்கு எவ்வளவு பொருத்தம் என்பதைப் பார்ப்போம்.

Berguru எனும் சொல்லாடல் ஆசிரியராக இருத்தலும் ஆசிரியரைப் பெற்றிருத்தலும் எனும் இருமைப் பண்பினைக் குறிக்கிறது.

#ஆசிரியராக இருத்தல்

ஆசிரியராக இருந்தால் தன்னிடம் இருக்கும் ஆர்ந்த அறிவின் உதவியால் புதியத் தலைமுறையை ஆக்கம் செய்ய வேண்டும்.

#புதிய தலைமுறை

பழையத் தலைமுறையை மாற்றுவது எளிதன்று. இறுகிய நம்பிக்கைகளும் மாற்ற முடியாதப் பழமைச் சிந்தனைகளும் புதியதை ஏற்காத மூட பழக்க வழக்கங்களும் நிரம்பியது பழையத் தலைமுறை என்று வைத்துக் கொள்வோம்.

புதியத் தலைமுறை என்பது அறிவியலையும் தொழில்நுட்பவியலையும் கொண்டு புதியதையும் புத்தாக்கத்தையும் கண்டுபிடிக்க வேண்டிய தலைமுறை.

இந்த வகை தலைமுறை அறிவியலை வாழ்க்கையின் அன்றாட அம்சமாக நடைமுறைப்படுத்த வேண்டும். தரவுகள் / சான்றுகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கவும், தீர்வு காணவும் ஆற்றலுள்ள புதியத் தலைமுறையாக ஆக்கம் பெறவேண்டும். ஆனால், ஆன்மீகத்துடன் சமூக ஒழுக்கத்தையும் நற்பண்பையும் கொண்டிருக்க வேண்டும். இதுதான் புதியத் தலைமுறைக்கான இன்றைய விளக்கம்.

ஆசிரியரின் வழிகாட்டுதலும் எடுத்துக்காட்டாக வாழும் வாழ்க்கையும் மாணவருக்கு உற்சாகம் ஊட்டி வெல்விளிகளை எதிர்நோக்கும் மனவலிமையையும் திட்பத்தையும் வளர்த்தெடுத்துக் கொடுக்கும்.

அதனால், ஆசிரியம் செய்யும் ஆசிரியர்கள் அறிவாண்மைக் கொண்டிருந்தால் மட்டுமே புதியத் தலைமுறையை ஆக்கம் செய்ய முடியும். மேலும், அறிவாண்மை மிக்கப் புதியத் தலைமுறையை ஆக்குவதற்கே ஒருவர் ஆசிரியராகவும் பொறுப்பேற்க வேண்டும். அதனால் அதை <em>Berguru Demi Ilmu எனலாம்.

#ஆசிரியரும் ஆசிரியரைப் பெற்றிருத்தல்

ஆசிரியர் ஒருவர் வேறு ஒருவரின் அறிவாற்றலைப் பெற்றுக்கொள்ள பலவழிகளில் முயலாம். அது முறைசார்ந்தும் முறைசாராமலும் இருக்கலாம். ஆசிரியர் ஒருவர் தனக்கும் மேலே திறமையுள்ள வேறு ஒருவரின் அறிவாண்மையைப் பெறுவதற்கும் புதியத் தலைமுறையாய் உருவாவதற்கும் தொடர்ந்து அறிவைக் மேம்படுத்திக் கொண்டுவர வேண்டும்.

அறிவுத்தேடலில் நாட்டமுள்ள ஆசிரியரே, அறிவுத்தேடலில் நாட்டமுள்ள புதியத் தலைமுறையை ஆக்கம் செய்யும் வல்லமை உள்ளவராவார்.

பள்ளிகளில் தொழில்முறை கற்றல் சமூக (Professional Learning Community – PLC) முறைகளில் ஆசிரியரிடையே கலந்துரையாடல், அறிவுப்பகிர்வு, நூலாய்வு, வாசிப்பு இப்படி பலவழிகளில் அறிவாண்மை பெறுவதற்கு அவர்கள் மேற்கொண்டிருக்கும் ஆசிரியம் உதவும். அறிவாண்மை பெறுவதற்கு அறிவுத்தேடல் மிகுந்த புதியத் தலைமுறையாக ஆசிரியர் சமூகம் ஆக வேண்டும்.

Berguru Demi Ilmu, Bina Generasi Baharu எனும் முழக்கவரி மாணவருக்காக சொல்லப்படவில்லை.

இந்த முழக்கவரி ஆசிரியருக்கானது. ஆசிரியருக்காகச் சொல்லப்பட்டது.

எனவே, ஆசிரியர்கள் இதைக் கவனமாக உள்வாங்க வேண்டும்.

#ஆசிரியம் என்பது எப்போதும் எதையும் கற்றுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ள விழையும் மாணவத் தன்மையையும் கொண்டிருக்கும் பணி. அதை ஆங்கிலத்தில் Teachers as Learns என்கின்றோம்.

ஆசிரியராக இருக்கும்போதே புதிய மாணவர் தலைமுறையை ஆக்க வேண்டும். அறிவைத் சதா தேடுவதால், தானே புதியத் தலைமுறையாய் மிளிரவும் வேண்டும்.

“Berguru Demi Ilmu, Bina Generasi Baharu”

“அறிவார்ந்த ஆசிரியம், புதியத் தலைமுறை ஆக்கம்” எனும் தமிழாக்கம், ஆழ்ந்த பொருளைக் குறிக்கிறது.

#ஆசிரியரே மாணவராக

அறிவார்ந்த ஆசிரியம் அறிவை மாணவருக்கு வழங்கி, அதன்மூலம் புதியத் தலைமுறையை ஆக்கும் கடமையை மட்டும் கொண்டிருப்பதல்ல. அறிவை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ள, தன்னைச் சுற்றி இருக்கிற கற்றல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தானே புதியத் தலைமுறையாக ஆக்கம் பெறும் தொழில்தான் ஆசிரியம்.

கற்பிப்பதும் கற்றுக்கொள்வதும் என இரண்டும் சேர்ந்ததுதான் ஆசிரியம். அதுவேப் புதியத் தலைமுறையை ஆக்கம் செய்யும் ஆற்றல் கொண்டது.

தோழர்களுக்கு ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.