உலக மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1945-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950-ம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் நாள் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை.
ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், மக்களின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநிறுத்தல் என்பவற்றுக்கு மனித உரிமை என்பது அத்தியாவசியம் மிக்க ஒன்றாக இருக்கின்றது. ஆனால், ஜனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பெரும்பாலும் மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன என்பதை ஊடகங்கள் வழியாக நாம் அறிகின்றோம்.
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 30 உறுப்புரைகளைக் கொண்டது. அதாவது சகல இன மக்களும் தத்தமது சாதனை இலக்கின் பொது நியமமாக கொள்ளத்தக்கதாக இந்த அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் அமைந்துள்ளது.
சமூகத்தின் ஒவ்வொரு மனிதனும் இப்பிரகடனத்தைக் கற்றறிந்து கொள்வதோடு அந்த உரிமைகளை மனதிலிருத்தி சுதந்திரங்களுக்கான மதிப்பினை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாக உள்ளது.
உறுப்புரை – 01-ல் “மனிதப் பிறவியினர் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவரோடொருவர் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் உறுப்புரையே மனித உரிமைக்கு பூரண அர்த்தத்தைக் கொடுக்கின்றதல்லவா?
ஒரு நாட்டின் அரசினால் இந்த உரிமை பாதுகாக்கப்படுமாயின் ஏனைய உரிமைகள் தாமாகவே அந்நாட்டு மக்களுக்குக் கிடைத்து விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஒருவரோடொருவர் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நியதி ஒரு நாட்டில் இருக்குமானால் அந்நாட்டில் சகலரது உரிமைகளும் பாதுகாக்கப்படுவதோடு அனைவரும் உரிமைகளை அனுபவிக்கும் நிலையும் நிச்சயமாகத் தோன்றக் கூடும்.
அந்நியர் ஆட்சியிலிருந்து இன்று வரை சிறுபான்மையினர் உரிமைகளை அனுப்பவிப்பதென்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்பது முழு உலகமுமே அறிந்த உண்மை.
அதாவது, ‘சிறுபான்மையினருக்கு உரிமைகள்’ என்பது ஆவண ரீதியில் காணப்பட்ட போதும் அவை நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருப்பதையும் காணக் கூடியதாகவே உள்ளது. இவர்களுக்கு மனித உரிமை என்பது ஏதோ ஒரு கட்டுபாட்டுக்குட்பட்டதாகவே அன்றும் இன்றும் காணப்படுகின்றது.
மனிதப் படுகொலைகள், பாலியல் பலாத்காரம், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்டது. மனித உரிமைகள் நாளை அனுஷ்டிப்பதை விட மனித உரிமைகள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் நமது உரிமைகளைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நிறைவாக, மனித உரிமைகள் மீறப்படும் போது இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் இனிமேலாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மனித உரிமைக்காக செயற்படுவார்களா?
-எம்.டி. லூசியஸ் / வீரகேசரி