மலேஷியா டூ அம்னீஷியா

நடிகர்     வைபவ்

நடிகை    வாணி போஜன்

இயக்குனர் ராதாமோகன்

இசை     பிரேம்ஜி

ஓளிப்பதிவு     மகேஷ் முத்துசாமி

வைபவ்வும் வாணி போஜனும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வைபவ்வுக்கு பெங்களூருவில் ரகசிய காதலியாக ரியா சுமன் இருக்கிறார். மலேசியாவுக்கு அலுவலக வேலையாக செல்வதாக சொல்லி பெங்களூருக்கு ரியாவை பார்க்க வைபவ் செல்கிறார். அவர் செல்வதாக சொன்ன மலேசிய விமானம் மாயமானதாக செய்தி வருகிறது. பெங்களூருவில் இருந்து வரும் வைபவ் நண்பன் கருணாகரன் உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

வைபவ்வுக்கு அனைத்து உணர்வுகளையும் காட்ட வேண்டிய கதாபாத்திரம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரை பார்த்து டாங்லீ என்று சொல்லும்போது எல்லாம் கைதட்டி சிரிக்க வைக்கிறார். கருணாகரன் யோசனைப்படி அம்னீசியா வந்தவராக நடிக்கும் காட்சிகளில் எல்லாம் வைபவ் வெளுத்து வாங்குகிறார். வாணி போஜனின் அன்பை பார்த்து தன் தவறை உணரும் காட்சியில் நெகிழ்ச்சியான நடிப்பு.

வைபவ்வுக்கு இணையான கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர். துப்பறியும் நிபுணராக வைபவ், கருணாகரன் கூட்டணி மீது சந்தேகபடும் காட்சிகளில் அனுபவ நடிப்பு. அந்த இறுதிக்காட்சி திருப்பத்தில் அபார நடிப்பு. அப்பாவி மனைவியாக வாணி போஜன் கணவருக்காக உருகும் இடங்களில் அசத்துகிறார்.

எம்.எஸ்.பாஸ்கரிடம் கோபம் கொள்ளும் கடைசிக் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். கருணாகரன் வைபவ்வுக்கான மூளையாக செயல்பட்டு கதையை கலகலப்பாக நகர்த்துகிறார். ஆங்காங்கே இவர் அடிக்கும் ஒன்லைன் பஞ்ச் வசனங்கள் வெடி சிரிப்பு.

மொழி, அபியும் நானும், காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலந்த உணர்வுபூர்வமான படங்களை இயக்கி புகழ்பெற்ற ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் அப்படி ஒரு படைப்பு. இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பிரேம்ஜி அமரனின் இசையில் பாடலும் பிண்ணனி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் உயர்தர வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வருகிறார்.

குடும்பத்துடன் பார்த்து ரசித்து சிரித்து மகிழும் வகையில் ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மலேசியா டூ அம்னீசியா’ காமெடி டூர்.

maalaimalar