நடிகர் மாஸ்டர் தினேஷ்
நடிகை ஐஸ்வர்யா
இயக்குனர் சக்தி வாசன்
இசை என்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு நிரன் சந்தர்
நாயகன் தினேஷ், திருமணமாகி முதலிரவுக்கு காத்திருக்கும் சமயத்தில் மனைவி ஓடிப்போய் விடுகிறார். இதனால் விரக்தி அடையும் தினேஷ், நண்பர்கள் முருகதாஸ், ரோகேஷ், கிருஷுடன் சேர்ந்து விலை உயர்ந்த நாய்களை கடத்தி விற்கும் தொழிலில் இறங்குகிறார். அப்படி ஒரு நாயை கடத்தும்போது அதை கண்டுபிடித்து கொடுத்தால் 5 லட்சம் தர அதன் உரிமையாளரான புச்சிபாபு முன்வருகிறார்.
அதன்படி 5 லட்சம் பெற்றுக்கொள்கிறார்கள். நாயை கடத்தினாலே 5 லட்சம் தருகிறார். புச்சிபாபு பெண்ணான ஐஸ்வர்யாவை கடத்தினால்? என்று விபரீத யோசனை எழுகிறது. அதன்படி கடத்தினால் அங்கே ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. நான்கு பேரும் பேயிடம் சிக்கிக்கொள்கிறார்கள். ஐஸ்வர்யா ஏன் பேயாகிறார்? பேயிடம் காதலில் விழும் தினேஷ் என்ன ஆகிறார்? போன்ற கேள்விகளுக்கு சுவாரசியமாக விடை தருகிறது படம்.
ஒரு குப்பை கதை படம் மூலம் நடிப்புக்கு பாராட்டுகளை பெற்ற தினேஷ் மாஸ்டர், இந்தப் படம் மூலம் பி, சி ரசிகர்களை எளிதில் சென்றடைவார். மனைவி ஓடிப்போன விரக்தியில் இருக்கும் கதாபாத்திரத்தை நன்றாக பிரதிபலித்துள்ளார். காமெடி, காதல், செண்டிமெண்ட் என நடிப்பால் கவர்கிறார்.
நாயகி ஐஸ்வர்யாவுக்கு கதையில் கனமான பாத்திரம். பந்தயம் கட்டி அவர் செய்யும் சாகச செயல்கள் ரசிக்க வைக்கின்றன. அதனாலேயே அவருக்கு ஏற்படும் சோகம் கலங்க வைக்கிறது. பேயான பிறகு அவர் அடிக்கும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன.
நண்பர்களாக வரும் ஆடுகளம் முருகதாஸ், ரோகேஷ், கிருஷ் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பு. முருகதாஸ் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார். செண்டிமெண்ட் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
மக்கள் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் இந்த சூழலில் சிரித்து ரசித்து மகிழும்படி ஒரு படத்தை கொடுத்த எடிட்டர் கோபிகிருஷ்ணாவுக்கும் இயக்குனர் சக்திவாசனுக்கும் பாராட்டுகள். படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை சிரிக்க வைத்து கடைசி காட்சியில் மட்டும் கலங்க வைக்கிறது.
என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை கமர்சியல் படமாக்குகிறது. நிரன் சந்தரின் ஒளிப்பதிவும் கோபிகிருஷ்ணாவின் படத்தொகுப்பும் படத்துக்கு பலம். லாஜிக் பார்க்காமல் இரண்டு மணி நேரம் ஜாலியாக ரசித்து பொழுதை போக்க ஏற்ற படமாக நாயே பேயே அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘நாயே பேயே’ காமெடி கலாட்டா.
maalaimalar