மொர்டல் காம்பட்

நடிகர்     லீவிஸ்டன்

நடிகை    ஜெசிகா

இயக்குனர் சைமன் மெகாய்டு

இசை     பெஞ்சமின்

ஓளிப்பதிவு     ஜெர்மைன் மெக்மைகிங், பீட்டர் மெக்காப்ரே

உலகத்தை சேர்ந்த குறிப்பிட்ட சக்திவாய்ந்தவர்கள் அடங்கிய குழுவுக்கும், வேற்று உலகை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் மொர்டல் காம்பட். உலகத்தில் பிறக்கும் போதே, உடலில் டிராகன் வடிவிலான குறியீட்டுடன் பிறப்பவர்கள் இந்த சண்டைக்கு தகுதி உடையவர்களாக கருதப்படுகிறார்கள்.

வேற்று உலகத்தை சேர்ந்த கும்பல், உலகத்தை கைப்பற்ற பார்க்கிறார்கள். இதற்காக உலகத்தை சேர்ந்த சக்திவாய்ந்தவர்கள் அடங்கிய குழுவுடன் அவர்கள் மோத வேண்டும். இதில் வெற்றியடைந்தால் மட்டுமே அவர்களால் உலகத்தை கைப்பற்ற முடியும். ஆனால் சதித் திட்டம் தீட்டும் வேற்று உலக கும்பல், சண்டைக்கு முன்பே உலகத்தை சேர்ந்த சக்திவாய்ந்தவர்கள் அடங்கிய குழுவைச் சேர்ந்தவர்களை கொல்ல முயற்சிக்கிறார்கள்.

அதேபோல் மறுபுறம் வெவ்வேறு இடங்களில் இருக்கும் உலகத்தை சேர்ந்த சக்திவாய்ந்த குழுவினரை ஒன்று சேர்த்து பயிற்சி அளிக்கும் முயற்சியும் நடக்கிறது. அந்தவகையில் தனக்குள் இருக்கும் சக்தியை அறியாமல் வாழ்ந்து வரும் நாயகனை, அழைத்து பயிற்சி கொடுக்கின்றனர். பயிற்சிக்கு பின்னரும் அவரால் சூப்பர் பவரை வெளிக்கொண்டு வர முடியவில்லை. இதன்பின் என்ன ஆனது? வேற்று உலகத்தை சேர்ந்த கும்பலுடன் சண்டையிட்டு நாயகன் உலகத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் உள்ளன. அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். குறிப்பாக லீவிஸ்டன், ஜெசிகா, மெக்கட் புரூக்ஸ், ஜோஷ் லாஷன் ஆகியோரின் நடிப்பு அட்டகாசம்.

இயக்குனர் சைமன் மெகாய்டு, படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், திறம்பட கையாண்டுள்ளார். படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது ஆக்‌ஷன் காட்சிகள் தான். குறிப்பாக கடைசி அரைமணி நேரம் ஆக்‌ஷன் அதகளம் என்றே சொல்லலாம். படத்தில் சில காட்சிகளை ஜவ்வாக இழுத்திருப்பது பின்னடைவாக தெரிகிறது. குறிப்பாக நாயகன் பயிற்சி எடுக்கும் காட்சி ரொம்பவே நீளம்.

பெஞ்சமினின் பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கின்றன. ஜெர்மைன் மெக்மைகிங், பீட்டர் மெக்காப்ரே ஆகியோரில் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மொர்டல் காம்பட்’ ஆக்‌ஷன் விருந்து.

maalaimalar