நடிகர் ஆறு ராஜா
நடிகை ஸ்வேதா ஜோயல்
இயக்குனர் ஆறு ராஜா
இசை ஷியாம் மோகன்
ஓளிப்பதிவு சி.டி.அருள் செல்வன்
நாயகன் ஆறு ராஜா தனது தாய் மற்றும் தங்கையுடன் கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். தங்கையின் தோழியான ஸ்வேதா ஜோயல், ஆறு ராஜாவை காதலித்து வருகிறார். முதலில் ஸ்வேதா ஜோயல் காதலை மறுக்கும் ஆறு ராஜா ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக் கொள்கிறார்.
ஒரு நாள் ஆறு ராஜா தங்கையின் வீடியோ ஒன்று இளைஞர்களிடம் கிடைக்கிறது. இதை வைத்து ஆறு ராஜா தங்கை சௌமியாவை பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இதை அண்ணனுக்கு தெரியாமல் மறைத்து அவர்களிடம் பணம் கொடுக்க செல்கிறார். அப்போது சௌமியாவை அவர்கள் கடத்த எதிர்பாராத விதமாக அந்த வாகனம் விபத்தில் சிக்குகிறது.
இதில் கோமா நிலைக்கு செல்லும் சௌமியா உயிர் பிழைத்தாரா? தங்கையை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தவர்களை ஆறு ராஜா கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆறு ராஜா, அவரே இப்படத்தை இயக்கியும் இருக்கிறார். முதல் பாதி, கதை எங்கு செல்கிறது என்று தத்தளிக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கரை சேர்கிறது. பட்டாம்பூச்சியை வைத்து சொல்லும் கதை, கேட்கவும் பார்க்கவும் அருமை.
ஆறு ராஜா இயக்கத்தில் செலுத்திய கவனத்தை நடிப்பிலும் செலுத்தி இருக்கலாம். கொஞ்சம் நடிக்க தெரிந்தவர்களை நடிக்க வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா ஜோயல், தங்கையாக வரும் சௌமியா, அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஷ்யாம் மோகன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. அருள்செல்வன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘பாப்பிலோன்’ பார்க்கலாம்.
maalaimalar