தலிபானை வாழ்த்தியது அரசியல் முதிர்ச்சியின்மை! – இராகவன் கருப்பையா

கடந்த 20 ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தான் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அரணாக இருந்த அமெரிக்கா தனது கூட்டுப் படைகளுடன் அந்தாட்டை விட்டு வெளியேறியது ஒரு சோகமான நிகழ்வு.

அமெரிக்கத் துருப்புகள் வெளியான மறு கணமே தலிபான் தீவிரவாதிகள் நாட்டைக் கைப்பற்றியதால்  சுதந்திரமாக, உல்லாசமான வாழ்க்கையை அனுபவித்து வந்த அந்நாட்டு மக்களின் வாழ்வில் மீண்டும் இருள் சூழ்ந்துவிட்டது.

சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிர்மறையான, குறிப்பாக பெண்களுக்கு எதிரான அந்தக் கும்பலின் அநீதிகளையும் அராஜகங்களையும் காலங்காலமாக உலக நாடுகள் கண்டித்துள்ளன.

அவர்களுடைய கடந்த கால ஆட்சியின் போது சிறிய தவறுகளுக்கெல்லாம் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் நடுத் தெருவில் தூக்கிலிடப்படுவது, சுட்டுக் கொல்லப்படுவது மற்றும் கற்களால் அடித்துக் கொல்லப்படுவது போன்றக் கொடூரங்களை உலக மக்கள் அறிவார்கள்.

கடந்த 15ஆம் தேதியன்று தலைநகர் காபூலைக் கைப்பற்றிய அக்கும்பல் தற்போது அதிகாரப்பூர்வமாக நாட்டை எடுத்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஐக்கிய நாட்டு சபை மட்டுமின்றி எந்த உலக நாடும் இதுவரையில் அந்தத் தீவிரவாதக் கும்பலை ஒரு அரசாங்கமாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யேமன் நாட்டிலுள்ள அல்-கய்டா பயங்கரவாதக் கும்பல் மட்டுமே கடந்த வாரம் அவர்களுக்கு வாழ்த்துக் கூறியது.

இந்நிலையில் மலேசியாவின் ஆளும் கூட்டணியில் உள்ள பாஸ் கட்சி அவர்களுக்கு வாழ்த்துக் கூறியது விவேகமற்ற, அரசியல் முதிர்ச்சியற்ற ஒரு செயல் என்று சொல்வதை விட வேறு எப்படிதான் வர்ணிப்பது என்று தெரியவில்லை.

இனி தங்களுடைய அன்றாட வாழ்க்கை எந்த அளவுக்குக் கொடூரமாக இருக்கப் போகிறதோ என ஆஃப்கான் மக்கள் குலை நடுங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பாஸ் கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான செயற்குழுவின் தலைவர் முஹமட் காலில் அந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திரெங்கானு மாநில பத்து பூரோக் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முஹமட் காலில் பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் ஹாடி அவாங்கின் புதல்வராவார்.

காட்டார் நாட்டைத் தளமாகக் கொண்ட ஒரு அனைத்துலக முஸ்லிம் இயக்கத்தை சவூதி அரேபியா உள்பட பல மத்தியக் கிழக்கு நாடுகள் ஒரு பயங்கரவாத இயக்கமாக முத்திரைக் குத்தியுள்ளன. அதனால் அந்த இயக்கத்தின் 4 உதவித் தலைவர்களில் ஒருவரான ஹாடியையும் அந்த வட்டாரத்தில் உள்ள  சில நாடுகள் பயங்கரவாதியாகக் கருதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னைய அரசாங்கத்தில் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதராக ஹாடி நியமனம் பெற்றிருந்தார். ஆனால் இவ்வாண்டு முற்பகுதியில் மஹியாடின் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு சவூதி அரேபியா சென்ற போது அவருடன் ஹாடி செல்ல இயலவில்லை என்பதையும் நாம் இங்கு நினைவுக்கூற வேண்டும்.

இந்நிலையில் தலிபானுக்கான காலிலின் வாழ்த்தறிக்கை நம் நாட்டுக்கு எவ்வகையிலும் நன்மை பயக்கும் ஒன்றாக அமையாது என்பதில் மாறுபட்ட கருத்த இருக்கவே முடியாது.

அனைத்துலக அரசியலை ஆழமாக புரிந்து கொள்ளாமல் ‘வறட்டு பந்தா’வுக்காக ‘நானும் பேசிவிட்டேன்’ என்று வெறுமனே உளறிவைப்பதை இவர்கள் நிறுத்த வேண்டும்.

பாஸ் கட்சியினால் நாட்டுக்கு நன்மை ஏற்படாவிட்டாலும் பரவாயில்லை இதுபோன்ற ஆற்றலில்லாத அனுபவமில்லா அரசியல்வாதிகளினால் பாதகம் ஏற்படாமல் இருப்பதை பிரதமர் இஸ்மாய்ல் தலைமையிலான புதிய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

இந்த இலட்சணத்தில் ஆஃப்கான் பெண்களின் ஆளுமையை மேம்படுத்த உதவும் பொருட்டு அந்நாட்டுக்கு செல்ல தாம் தயாராய் இருப்பதாக முன்னாள் ஊராட்சி வீடமைப்புத்துறை அமைச்சர் ஸுரைடா கூறியுள்ளது அனாவசியமான மலிவு விளம்பரம் போலவேத் தெரிகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறையான நிர்வாகமில்லாமல் சீர்குலைந்து கிடக்கும் நம் நாட்டை மேம்படுத்துவதற்கே இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்று தெரியாத நிலையில் இவர் ஆஃப்கான் நாட்டுக்கு உதவத் துடிப்பது வேடிக்கையான விசயம்தான்.

ஆக இது போன்ற அதிகப்பிரசங்கித்தனமான அறிக்கைகள் எல்லாமே இவர்களுடைய அரசியல் முதிர்ச்சியின்மையைத்தான்  காட்டுகிறது.

இவர்களுடைய தேவையற்ற வாய்க்கொழுப்பினால், ‘வழியில் கிடந்த கோடரியைக் காலில் பொட்டுக் கொண்ட கதை’யாகிவிடக் கூடாது நாட்டின் நிலைமை.

ஏற்கெனவே பாகிஸ்தான், ஈரான், துருக்கி முதலிய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான உலக வல்லரசுகளின் தீவிர கண்காணிப்பில் உள்ளன என்பதையும் நாம் உணரவேண்டும்.