நதியே நஞ்சாக மாறி நிற்பது பெருங்கவலை: சீமான்

சென்னை: பாலாற்றில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், நதியே நஞ்சாக மாறி நிற்கும் நிலை கவலை அளிப்பதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விசாரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காது பாலாற்றில் கலந்துவிடும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். தோல் பதனிடுதல், சாயத் தொழில், சர்க்கரைத் தொழில்கள் போன்ற நீர் சார்ந்த தொழில்கள் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பாலாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. இவற்றில் உருவாகும் ரசாயன கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, தொழிற்சாலையின் மறுபயன்பாட்டிற்கு உகந்த வகையில் சுத்திகரிக்கப்படவேண்டும்.

ஆனால், தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத அல்லது ஓரளவு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை அதிக அளவில் ஆற்றிலே விடப்படுகிறது. பாலாற்றில் கலக்கப்படும் ரசாயனக் கழிவுகளால் அப்பகுதியின் நிலத்தடி நீர் முற்றாக மாசடைந்து மக்களின் குடிநீருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, பாலாற்று நீரை அருந்தும் கால்நடைகளும் உயிரிழக்கும் துயரங்கள் நேர்வது பெரும் வேதனையைத் தருகிறது. அளவுக்கதிகமான கழிவுநீர் கலப்பால் வேளாண்மை செய்யமுடியாத அளவிற்கு நிலம் மாசுப்பட்டு, மலட்டுத்தன்மை அடைந்துள்ளதால், அப்பகுதி விவசாயிகள் வேளாண்மையினை முழுவதுமாகக் கைவிட்டு, மாற்றுவேலைக்குச் செல்ல வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நள்ளிரவு நேரங்களில் தொழிற்சாலைகளிடமிருந்து பெறப்படும் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் தொழிற்சாலைகளுக்குத் தராமல் நேரடியாக ஆற்றிற்குச் செல்லும் ஓடையில் கழிவு நீராகவே கலப்பதால் பாலாறு முற்றுமுழுதாகத் தன்னியல்பையும், உயிரோட்டத்தையும் இழந்து, நதியே நஞ்சாக மாறி நிற்கும் நிலை பெருங்கவலையைத் தருகிறது. ஆகவே, இச்சிக்கலில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி, தொழிற்சாலைக்கழிவுகளைப் பாலாற்றில் கலக்கும் தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமாகத் தடைவிதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

(நன்றி Dinamalar)