சிண்ட்ரெல்லா

நடிகர்     நடிகர் இல்லை

நடிகை    ராய் லட்சுமி

இயக்குனர் வினோ வெங்கடேஷ்

இசை     அஸ்வமித்ரா

ஓளிப்பதிவு     ரம்மி

சென்னையில் சவுண்ட் இன்ஜினியராக இருக்கும் ராய் லட்சுமி, பறவைகளின் சத்தத்தை பதிவு செய்ய நண்பர்களுடன் கொடைக்கானல் பகுதிக்கு சென்று காட்டு பங்களாவில் தங்குகிறார். அந்த பங்களாவில் அமானுஷ்ய சக்தி இருப்பதை ராய்லட்சுமி உணருகிறார்.

அதேசமயம் அந்த ஊரில் இரண்டு மர்மக் கொலைகள் நடக்கிறது. இதற்கு காரணம் ராய் லட்சுமிதான் என்று போலீசார் அவரை கைது செய்கின்றனர். இறுதியில் அந்தக் கொலைகளை செய்தது யார் ? எதற்காக செய்தார்கள்? அந்த பங்களாவில் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. மாடர்ன் பெண்ணாகவும், வெகுளித்தனமான பெண்ணாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். வேலை பெண்ணாக பணிவிடை செய்வது, ஆடைக்காக பணம் சேர்ப்பது, நடனம் ஆடுவது என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார்.

மற்றொரு நாயகியாக வரும் சாக்ஷி அகர்வால் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். காதல், வெறுப்பு, கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். பேய்க்கு பயப்படும் போது பரிதாபத்தையும், ராய் லட்சுமியை திட்டும்போது கோபத்தையும் ஏற்படுத்துகிறார். வில்லி கதாபாத்திரம் சாக்ஷி அகர்வாலுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

ரோபோ சங்கர் இரண்டு காட்சிகளில் மட்டும் வந்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். கல்லூரி வினோத் மற்றும் நண்பர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

பேய் கதைகளில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் வினோ வெங்கடேஷ். முதல் பாதி விறுவிறுப்பாகவும், திகிலாகவும் நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் மெதுவாகவும், சுவாரஸ்யம் இல்லாமலும் நகர்கிறது. திகில் காட்சிகள் கைகொடுத்த அளவுவிற்கு காமெடி காட்சிகள் கைகொடுக்கவில்லை.

அஸ்வமித்ராவின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். முதல் பாதியில் பல காட்சிகளில் இவருடைய பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. அதுபோல் ரம்மியின் ஒளிப்பதிவு, கொடைக்கானல் பகுதியை அழகாக படம் பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் சிண்ட்ரெல்லா மிரட்டல்.

maalaimalar