சிவகுமாரின் சபதம்

நடிகர்     ஹிப்ஹாப் தமிழா ஆதி

நடிகை    மாதுரி

இயக்குனர் ஹிப்ஹாப் தமிழா ஆதி

இசை     ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஓளிப்பதிவு     அர்ஜுன் ராஜா

காஞ்சிபுரத்தில் பட்டு செய்வதில் சிறந்தவர் வரதராஜன். இவர்கள் குடும்பம் பாரம்பரியமாக பட்டு செய்து வருகிறார்கள். இவருடன் வேலை பார்த்து வந்த சந்திரசேகர் சூழ்ச்சி செய்து சென்னையில் பெரிய துணிக்கடை ஆரம்பித்து விடுகிறார். வரதராஜனின் மகன் முருகன், சந்திரசேகர் பெண்ணை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாகிறார்.

ஒரு பிரச்சனையில் முருகனை, சந்திரசேகர் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். இவருடன் இருக்கும் வரதராஜனின் பேரன் சிவகுமார், சந்திரசேகருக்கு சபதம் போடுகிறார். இறுதியில் சிவகுமார் போட்ட சபதம் என்ன? அதை சிவகுமார் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக சிவகுமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. வழக்கமாக குறும்பு தனம் செய்து ஜாலியாக இருக்கும் ஆதியை இப்படத்திலும் பார்க்க முடிகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இத்தனை பொறுப்புகளை ஏற்று இருப்பதால், சரியாக எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்திருக்கிறார் போல…

காஞ்சிபுரம் பட்டின் பெருமை, தறி செய்யும் தொழிலாளர்கள் என்று நல்ல கதையை எடுத்துக் கொண்ட ஆதி, அதைப்பற்றி ஆழமாக சொல்லாமல் சென்றது வருத்தம். முதல் பாதியின் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியில் தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் ஏமாற்றம் தான். நிறைய தத்துவங்கள் பேசுவதை குறைத்து இருக்கலாம். முதல் பாதியில் அடுத்தடுத்து நான்கு பாடல்கள் வருகிறது. அவை அனைத்தும் பெரிதாக கவரவில்லை. இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருக்கிறார் ஆதி. ஆனால், காமெடி அதிகமாக கைகொடுக்கவில்லை. ஒரு காட்சி மிகவும் சீரியசான என்று நினைத்தால் அது காமெடியாக இருக்கிறது. காமெடியான காட்சிகள் சீரியசாக இருக்கிறது. படம் பார்க்கும் போது அதிக குழப்பம் ஏற்படுகிறது. நடனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் கவர்ந்திருக்கிறார் ஆதி.

நாயகியாக வரும் மாதுரி கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். முருகன் சித்தப்பாவாக வரும் பிராங்ஸ்டர் ராகுல், ஒரு சில இடங்களில் சிரிக்கவும், கடுப்பேற்றவும் செய்திருக்கிறார். ஆதியின் நண்பராக வரும் கதிர், ரசிக்கும் படியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல இடங்களில் காட்சிகள் தெளிவாக அமைந்துள்ளது.

maalaimalar