திருநங்கைகள் வாழ்க்கை – ‘பில்டர் கோல்ட்’ சினிமா விமர்சனம்

நடிகர்: விஜயபாஸ்கர் நடிகை: நாயகி இல்லை டைரக்ஷன்: விஜயபாஸ்கர் இசை : ஹூமர் எழிலன் ஒளிப்பதிவு : பரணிக்குமார்‘திருநங்கைகளும், திடுக்கிட வைக்கும் கொலைகளும்…’ இதுதான் இந்த படத்தின் ஒரு வரி கதை.

அதற்கும், ‘பில்டர் கோல்ட்’ என்ற டைட்டிலுக்கும் எந்த வகையில் பொருத்தம் என்று தெரியவில்லை. கதையின் நாயகனும் அவர்களே…வில்லனும் அவர்களே…நகைச்சுவை நாயகர்களும் அவர்களே…ஒன்றிரண்டு பேர்களை தவிர, பெரும்பாலான கதாபாத்திரங்களில் திருநங்கைகளே நடித்து இருக்கிறார்கள்.

திருநங்கைகள் விஜி, சாந்தி, டோரா ஆகிய மூன்று பேரும் நண்பர்கள் அல்லது தோழிகள். இவர்களில் விஜி கொலைக்கு அஞ்சாதவர். திருநங்கைகளுக்கு ஒரு அவமானம் என்றால் அவர்களுக்கு முன்னால் நின்று தண்டனை கொடுக்கிறார்.

தச்சு தொழில் நடத்தும் ஒருவர் கொடுக்கும் கூலிக்கு கொலை செய்வதை விஜி தொழிலாக செய்து வருகிறார். அதன் விளைவுகளே மீதி கதை.

விஜி கதாபாத்திரத்தில் நடித்து டைரக்டு செய்து இருக்கிறார், விஜயபாஸ்கர். முகத்திலேயே கொலை வெறியை காட்டுகிறார். கூலியை வாங்கிக்கொண்டு கொலை செய்ய அவர் ‘பைக்’கில் புறப்படும்போதும், கொலையை செய்து முடித்ததும் அதை சக திருநங்கைகளுடன் கொண்டாடும்போதும், தியேட்டர் முழுவதும் பயத்தில் உறைந்து போவது, நிஜம்.

டோராவாக வரும் டோராஸ்ரீ, சாந்தியாக வரும் சுகுமார் சண்முகம், தச்சு தொழில் அதிபராக வரும் சிவஇளங்கோ ஆகியோர் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.

குமார் எழிலனின் மிரட்டலான பின்னணி இசையும், பரணிகுமாரின் கேமரா காட்சிகளை பதிவு செய்திருக்கும் விதமும், படத்துக்கு கூடுதல் அம்சங்கள். படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை கொலைகளும், ரத்த சேதாரமும் அதிகம். இறுதி காட்சிகள் திக்..திக்…என்று திகிலான கதையோட்டம். திருநங்கைகள் என்றாலே கொடூரமான குற்றங்களை செய்பவர்கள் என்று நம்பும்படியான காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

dailythanthi