அண்ணன்-தங்கை பாசம் – ‘அண்ணாத்த’ சினிமா விமர்சனம்

நடிகர்: ரஜினிகாந்த், நடிகை: நயன்தாரா, டைரக்ஷன்: சிவா,  இசை : இமான்,  ஒளிப்பதிவு : வெற்றி பழனிசாமி. தங்கை மீது உயிரை வைத்திருக்கும் ஒரு அண்ணனையும், அண்ணன் மீது உயிரை வைத்திருக்கும் ஒரு தங்கையையும் பற்றிய கதை.

ரஜினிகாந்த் கவுரவமான பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய ஒரே தங்கை கீர்த்தி சுரேஷ். அண்ணன் – தங்கை இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்து இருக்கிறார்கள்.

தங்கைக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடுகிறார், அண்ணன். பிரகாஷ்ராஜின் தம்பிக்கு கீர்த்தி சுரேசை திருமணம் செய்து கொடுக்க ரஜினிகாந்த் சம்மதிக்கிறார். திருமணத்துக்கு சில மணித்துளிகளே இருக்கும்போது, கீர்த்தி சுரேஷ் காதலருடன் ஓடிப்போகிறார்.

அவருடைய காதலர் யார், ஓடிப்போனதற்கான காரணம் என்ன? என்று ரஜினிகாந்தின் காதலியும், வக்கீலுமான நயன்தாரா விசாரிக்கும்போது, கொல்கத்தாவில் உள்ள 2 கொடூரமான ரவுடிகள் பற்றி தெரியவருகிறது. அவர்களுக்கும், கீர்த்தி சுரேசுக்கும் என்ன தொடர்பு? என்பது மீதி கதை.

தங்கை மீது அதிக அன்பு கொண்ட அண்ணன் கதாபாத்திரம், ரஜினிகாந்துக்கு புதுசு அல்ல. இருப்பினும், இதுவரை இல்லாத அளவுக்கு பாசத்தை அள்ளி வழங்கியிருக்கிறார், ‘அண்ணாத்த.’ அவருடைய அறிமுக காட்சியே அமர்க்களம்.

‘‘அண்ணாத்த நம்மகிட்ட மாட்டலை…நாம்தான் அண்ணாத்த கிட்ட மாட்டிக்கிட்டோம்’’ என்று வில்லனின் அடியாள் அலற – ரஜினிகாந்த் அவருக்கே உரிய ஸ்டைலுடன் நடந்து வர – தியேட்டரில் ஆரவாரம் அடங்க வெகுநேரம் ஆகிறது. ‘‘என் தங்கை கேட்டிருந்தால் நான் என் மூச்சுக்காற்றைக்கூட கொடுத்திருப்பேனே….’’ என்று அவர் குஷ்புவிடம் கண்கலங்கும்போது, ரசிகர்களும் கலங்குகிறார்கள்.

கீர்த்தி சுரேசிடம் தப்பாக கைநீட்டிய வில்லனின் கைகளை ரத்தசகதியாகும்வரை அடித்து நொறுக்கும்போது, ஆக்ரோஷம். முறைப்பெண்கள் குஷ்பு, மீனா இருவரிடமும் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது, தமாஷ்…என எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்கிறார், ரஜினிகாந்த். அவருக்கு பக்கவாத்தியமாக ‘பச்சைக்கிளி’ பாத்திரத்தில், சூரி கலகலப்பூட்டுகிறார்.

நயன்தாராவின் தோற்றத்திலும், நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது. குஷ்புவும், மீனாவும் அளவோடு பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் தங்கை வேடத்தில், உருக வைக்கிறார். குஷ்பு – மீனாவின் கணவர்களாக பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் இருவரும் கூட்டத்தில் காணாமல் போகிறார்கள். பிரகாஷ்ராஜ் வலுவான வில்லனாக வந்து படத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். ஜெகபதிபாபுவும், அபிமன்யுசிங்கும் கொடூரமான வில்லன்களாக பதற்றம் கூட்டுகிறார்கள்.

கொல்கத்தாவின் இரவு நேர அழகையும், ஆபத்தையும் நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார், ஒளிப்பதிவாளர் வெற்றி. டி.இமான் இசையில் பாடல்களை விட, பின்னணி இசைக்கு கூடுதல் மார்க் கொடுக்கலாம்.

சிவா டைரக்டு செய்து இருக்கிறார். கதையும், காட்சிகளும் ‘முள்ளும் மலரும்’ உள்பட சில பழைய படங்களையும், இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரையும் நினைவூட்டுகிறது. ரஜினிகாந்தின் நடிப்பும், ‘பஞ்ச்’ வசனங்களும் படத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன.

dailythanthi