நண்பர்களின் சண்டை- ‘எனிமி’ சினிமா விமர்சனம்

நடிகர்: விஷால் நடிகை: மிருநாளினி டைரக்ஷன்: ஆனந்த் சங்கர் இசை : தமன் ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்சிங்கப்பூர் போய் வேலை செய்து பிழைக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை ஒரு தமிழ் இளைஞர் (விஷால்) காப்பாற்ற போராடுகிறார். இன்னொரு தமிழ் இளைஞர் (ஆர்யா) அவர்களின் வாழ்க்கையை அழிக்க முயற்சிக்கிறார். இருதரப்பினருக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை.

விஷாலும், ஆர்யாவும் சிறுவர்களாக இருக்கும்போதே கதை தொடங்குகிறது. ஆர்யாவின் அப்பா பிரகாஷ்ராஜ், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. மகனுக்கு நல்ல அறிவுரைகளை கற்றுக்கொடுத்து கட்டுக்கோப்பாக வளர்க்கிறார். அப்போது பக்கத்து வீட்டு சிறுவன் (விஷால்) தன் மகனை விட புத்திக்கூர்மையாக – திறமைசாலியாக இருப்பதை பார்த்து, அவனை சகலகலா வல்லவனாக உருவாக்குகிறார்.

அப்பாவை கொலை செய்துவிட்டு ஆர்யா தலைமறைவாகிறார். விஷால், சிங்கப்பூரில் மளிகை கடை நடத்துகிறார். அப்போது அங்கே அப்பாவி தமிழர்கள் 11 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி ஆர்யா என்பதை விஷால் கண்டுபிடிக்கிறார். இருவருக்கும் இடையே நடக்கும் நீயா, நானா? யுத்தத்தில் ஜெயிப்பது யார்? என்பது ‘கிளைமாக்ஸ்.’

விஷால், ஆர்யா இருவரும் ‘அவன் இவன்’ படத்துக்கு பின், மீண்டும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இருவரும் பெரியவர்கள் ஆனபின், எதிரும் புதிருமாக சந்தித்துக்கொள்ளும் காட்சியும், உச்சக்கட்ட சண்டை காட்சியும் மிரட்டல்.

விஷாலுக்கு அடுத்தடுத்து 2 பாடல் காட்சிகள், சிங்கப்பூர் வீதிகளில் ஆடுவது போல்… 2 பாடல்களுமே வேகத்தடைகள்.

கதாநாயகிகள் மம்தா மோகன்தாஸ், மிர்னாளினி ரவி ஆகிய இரண்டு பேருக்கும் நடிக்க சந்தர்ப்பம் உள்ள கதாபாத்திரங்கள். அதை மம்தா மோகன்தாஸ் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். நகைச்சுவைக்கு கருணாகரன் வேஸ்ட்.

அப்பா கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், தம்பிராமையா. ஆரம்ப காட்சிகளில் பிரகாஷ்ராஜும், இறுதி காட்சியில் தம்பிராமையாவும் நெகிழவைக்கிறார்கள்.

சிங்கப்பூர் தொடர்பான காட்சிகளில் ஆர்.டி.ராஜசேகரின் கேமரா பிரமிப்பூட்டுகிறது. தமன் இசையில், ஒரே ஒரு பாடல் கண்களுக்கும், காதுகளுக்கும் தீபாவளி விருந்து. சாம் சி.எஸ்.சின் பின்னணி இசையில், வாத்தியங்கள் அலறுகின்றன.

டைரக்டர் ஆனந்த் சங்கர் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார். படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

dailythanthi