கடைசீல பிரியாணி

நடிகர் விஜய் ராம்

நடிகை     நாயகி இல்லை

இயக்குனர் நிஷாந்த் வர்மா

இசை நீல் செபஸ்டியன்

ஓளிப்பதிவு அசீம் முகமது

அப்பா, அம்மா மூன்று மகன்கள் இருக்கும் குடும்பத்தில், அப்பா தனது கடைசி மகனை நல்லவனாக வளர்க்க ஆசைப்பட்டு தனியாக அழைத்து சென்று வாழ்கிறார். அப்போது ரப்பர் எஸ்டேட் ஓனர் அப்பாவை கொன்று விடுகிறார். இதனால், கோபப்படும் 3 மகன்கள் ரப்பர் எஸ்டேட் ஓனரை கொலை செல்ல கிளம்புகிறார்கள்.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து செல்லும் மூன்று மகன்கள், எதிர்பாராத விதமாக வீட்டில் ஓனர் மகன் இருப்பதை கண்டு பயப்படுகிறார்கள். இறுதியில் மகன்கள் மூன்று பேரும், ஓனரை கொன்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அண்ணன் தம்பிகளாக வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் நடித்துள்ளார்கள். இவர்களின் மூத்த அண்ணனாக நடித்திருக்கும் வசந்த் செல்வம் இடைவேளை வரை தன்னுடைய பழி வாங்கல் உணர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். தினேஷ் மணிக்கு அதிக வேலையில்லை. இடைவேளைக்குப் பின் கடைசி தம்பி விஜய் ராம் படத்தின் நாயகனாக ஜொலிக்கிறார். ஓனர் மகன் ஹக்கீம் ஷாஜகான் தனது நடிப்பால் இடைவேளைக்குப் பின் அவரை கவனிக்க வைக்கிறார். போலீசை டீல் செய்யும் விதம் அருமை.

பழிக்குப் பழி வாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நிஷாந்த் வர்மா. இடைவேளை வரை பார்ப்பவர்களின் பொறுமை சோதிக்கும் திரைக்கதை, இடைவேளைக்குப் பின் கொஞ்சம் சுவாரசியமாக நகர்கிறது. சில காட்சிகளில் கைதட்டல் வாங்கும் அளவிற்கு இருக்கிறது. கதை முழுவதும் கேரளாவிலேயே நடப்பதாலும், வில்லன் ஹக்கீம் மலையாளமே பேசுவதாலும் ஒரு மலையாளப் படத்தைப் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது.

அசீம் முகமது ஒளிப்பதிவில் எஸ்டேட், மற்றும் காடு லொகேஷன் ஆகியவற்றை படமாக்கிய விதம் சிறப்பு. நீல் செபஸ்டியன் இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘கடைசீல பிரியாணி’ சுவைக்கலாம்.

maalaimalar