நடிகர்: நிவின் கார்த்திக் நடிகை: மியா ஸ்ரீ டைரக்ஷன்: சுனில் டிக்ஸன் இசை : கலையரசன் ஒளிப்பதிவு : கலேஷ், அலன்அமானுஷ்ய கதைகள் என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அப்படியான கொண்டாட்டங்களை ஏற்படுத்தவே தூநேரி படம் முயற்சி செய்திருக்கிறது.
சென்னையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் நிவின் கார்த்திக் ஊட்டி அருகில் உள்ள கிராமத்துக்கு மாற்றலாகி சென்று மனைவி, குழந்தைகளுடன் காட்டுப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தங்குகிறார். அருகில் கல்லறைகள் இருப்பதால் அவர்கள் வீட்டுக்குள் அமானுஷ்யங்கள் நடக்கின்றன. கிராமத்தில் அடுத்தடுத்து மர்ம மரணங்களும் நடக்கிறது.
ஊரில் காவல்காரனாக இருந்து திருடனாக மாறியதால் அடித்துக்கொல்லப்பட்ட கருப்பசாமி பேயாக வந்து பழிவாங்குவதாக கிராமத்தினர் பேசுகின்றனர். கிராமம் முழுவதும் பேய் அச்சம் நிலவுகிறது. கொலைகள் எப்படி நடக்கின்றன. பேய் அடித்துத்தான் மக்கள் சாகிறார்களா? அமானுஷ்ய பிடியில் இருந்து நிவின் கார்த்திக் குடும்பத்தினர் தப்பினார்களா? என்பது மீதி கதை.
நிவின் கார்த்திக் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார். சித்தி கொடுமையில் சிக்கிய சிறுமியை காப்பாற்ற களம் இறங்கும் ஆரம்ப காட்சியிலேயே கதாபாத்திரத்தில் உயிர் சேர்க்கிறார். கிராமத்தில் நடக்கும் கொலைக்கான காரணத்தை துப்பறியும் காட்சிகளில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஜான் விஜய் பயமுறுத்துகிறார். அவரது இன்னொரு முகம் அனுதாபப்பட வைக்கிறது. மியாஶ்ரீ உடலில் பேய் புகுந்த நிலையில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
குழந்தை நட்சத்திரங்களாக வரும் அஷ்மிதா, ரகுல், அபிஜித் ஆகியோர் கதாபாத்திரங்களில் நிறைவு. கிளைமாக்சில் 2 பேய்களுக்குள் நடக்கும் மோதல் திகிலூட்டுகின்றன. ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் கிராமத்துக்குள் கதை நகர்ந்த பிறகு வேகம். பேய் கதையை சஸ்பென்ஸ் திகிலுடன் விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் சுனில் டிக்ஸன். கலையரசன் இசையும், அலன் ஒளிப்பதிவும் திகிலுக்கு வலு சேர்த்துள்ளன.