நடிகர்: முத்து நடிகை: சரண்யா ரவிச்சந்திரன் டைரக்ஷன்: சத்தியபதி இசை : நிஜில் தினகரன் ஒளிப்பதிவு : சத்தியபதிசென்னையில் வசிக்கும் கட்டிட தொழிலாளர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் படம்.
கட்டிட தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவர்களின் வாழ்வு மற்றும் தொழில் சார்ந்த நிகழ்வுகளையும் யதார்த்தமாக படம் பிடித்து இருக்கிறார்கள்.
கட்டிட தொழிலில் மேஸ்திரியாக வேலை செய்யும் கதைநாயகன் தன் மகனை என்ஜினீயருக்கு படிக்க வைக்கிறார். இதற்காக நிறைய பேர்களிடம் கடன் வாங்குகிறார். இன்னொரு பக்கம், மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கடமை காத்திருக்கிறது. இதற்காக ஏல சீட்டு நடத்தும் தம்பதியிடம் பணம் கட்டுகிறார்.
அந்த தம்பதிகள் சினிமா படம் தயாரிக்க விரும்புகிறார்கள். ஏல சீட்டின் மூலம் வசூலான தொகை முழுவதையும் சினிமாவில் முதலீடு செய்கிறார்கள். இதனால் அவர்களால் சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் போகிறது.
அதே கட்டிடத்தில், கொத்தனாராக வேலை செய்கிற முத்துவும், சரண்யாவும் கணவன்-மனைவி. முத்து குடிகாரர். கணவர் திருந்தாதை எண்ணி சரண்யா கவலைப்படுகிறார். இந்த நிலையில், முத்து தலையில் அடிபட்டு இறந்து போகிறார்.
கணவரை இழந்த சரண்யாவும், வட மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெள்ளையும் வாழ்க்கையில் இணைகிறார்கள். இருவரும் கைகோர்த்தபடி செல்வது போல், படம் முடிகிறது.
யோகி பாபுவை போல் இருக்கும் ஒருவரை தேடிப்பிடித்து கதைநாயகன் ஆக்கியிருக்கிறார்கள். அவர் மகனின் படிப்புக்காக ஒவ்வொருவரிடமும் சென்று கடன் கேட்பது, கணவன் குடித்துவிட்டு வந்ததைப் பார்த்து சரண்யா ரவிச்சந்திரன் அழுது புலம்புவது, திருநங்கை பட்ரோஸ் அடிவாங்குவது ஆகிய காட்சிகள் உருகவைக்கும் சோகங்கள்.
கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை இயல்பாக படமாக்கியிருப்பதற்காக டைரக்டர் சத்தியபதியை பாராட்டலாம். கதையும், காட்சிகளும் மெதுவாக நகர்வதை தவிர்த்து, விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.