‘தீர்ப்புகள் விற்கப்படும்’ சினிமா விமர்சனம்

பெண்களுக்கெதிரான குற்றங்களை செய்பவர்களுக்கு தண்டனை- ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ சினிமா விமர்சனம்

நடிகர்: சத்யராஜ் நடிகை: ஸ்மிருதி வெங்கட் டைரக்ஷன்: தீரன் இசை : பிரசாத் எஸ்.என் ஒளிப்பதிவு : கருட வேகா ஆஞ்சிபெண்களை பெற்றவர்கள் மட்டுமின்றி ஆண்களை பெற்றவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளது. பெண்களுக்கெதிரான குற்றச்செயல்களுக்கான தண்டனை குறித்து விவாதிக்கும் படம்.

சத்யராஜ் ஒரு டாக்டர். அவருடைய மகள் ஸ்மிருதி வெங்கட். இவருக்கும், சார்லியின் மகன் யுவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஸ்மிருதியை 3 இளைஞர்கள் கெடுத்து விடுகிறார்கள். அவர்கள் மூன்று பேரும் ஆள் பலம், அதிகார பலம் மிகுந்த செல்வந்தர்களின் பிள்ளைகள். அவர்களை சத்யராஜ் புத்திசாலித்தனமாக எப்படி பழிவாங்குகிறார்? என்பது மீதி கதை.

இதில் செல்வாக்கு மிகுந்த பணக்கார வில்லனாக வருகிறார், மதுசூதனன். மூன்று குற்றவாளிகளில், இவருடைய மகனும் ஒருவர். அவரது ஆண் உறுப்பை ‘ஆபரேசன்’ செய்வது போல் அகற்றி விடுகிறார் சத்யராஜ். அதை மீட்பதற்காக மதுசூதனன் பேரம் பேசுவதும், அவரை வைத்தே சத்யராஜ் ஒவ்வொரு குற்றவாளியையும் தண்டிப்பதும், விறுவிறுப்பான திக்..திக்.. காட்சிகள். குற்றவாளிகள் அத்தனை பேரையும் தண்டித்துவிட்ட திருப்தியில், சத்யராஜ் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு பறக்கும் ‘கிளைமாக்ஸ்’ சூப்பரான முடிவு.

சத்யராஜுக்கு டாக்டர் வேடம் புதுசு அல்ல. பழிவாங்கும் டாக்டர் வேடம், புதுசு. மகளுக்கு நடந்த கொடுமையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போவது; சுதாரித்துக் கொண்டு பழிவாங்கலை தொடங்குவது, தனது நோக்கம் முழுவதும் நிறைவேறிவிட்ட திருப்தியில், வில்லனிடம் அடிவாங்குவது என படம் முழுக்க சத்யராஜின் நடிப்பு முத்திரைகள்.

ஸ்மிருதிக்கும், யுவனுக்கும் அதிக வேலை இல்லை. மதுசூதனன், ஹரீஸ் உத்தமன், சார்லி, ஸ்ரீரஞ்சனி, ஜார்ஜ் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் ஒன்றி நடித்து இருக்கிறார்கள். டைரக்டர் தீரன் விறுவிறுப்பாக கதை சொல்லி இருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு படத்தின் சாயல், இந்த படத்தில் நிறையவே இருக்கிறது.

dailythanthi