தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவு – சிறப்பு தபால் தலையை வெளியிட்டது மத்திய அரசு

சிறப்பு தபால் தலை

இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. புனே சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்கி தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனால் தடுப்பூசி செலுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்த துவங்கினர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி 100 கோடி டோஸ்கள் என்ற இலக்கை எட்டியது. கடந்த 7-ம் தேதி 150 கோடி டோஸ்கள் என்ற மாபெரும் இலக்கை எட்டியது.

இந்நிலையில், தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா சிறப்பு தபால் தலையை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

maalaimalar