தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 2

கி.சீலதாஸ் –   வரலாறு யாரால் எழுதப்படுகிறது?

வெள்ளையர்களின் ஆட்சியின்போது வெற்றி கண்ட வெள்ளையர்களே வரலாறு எழுதினார்கள். கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் பெருமையை, வரலாற்று உண்மைகளை மறைத்து பொய்மைக்கு முதலிடம் தந்தார்கள்.

இன்று உலக நாடுகள் தங்களின் உண்மையான வரலாறு என்ன என்ற ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில், சுதந்திரத்துக்கு முன்பு நாட்டின் வரலாறு காலனித்துவவாதிகளால் எழுதப்பட்டது; சுதந்திரத்திற்குப் பிறகு இனத்தேசியவாதிகளால் வரலாறு எழுதப்பட்டது, எழுதப்படுகிறது.

புது தலைவர்கள் பரந்த நோக்கத்தைக் கொண்டிராமல், வரலாற்று உண்மைகளை மக்களுக்குக் கொண்டு செல்வதை விடுத்து தங்களின் தற்பெருமையைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றால் மிகையாகாது. இந்த நிலைதான் மலேசியாவிலும் வேரூன்றி தழைத்திருக்கிறது என்பதை நாட்டின் கல்விக் கொள்கை, பொருளாதார பங்கீடு, சமுதாய மேம்பாடு போன்றவற்றைக் கண்ணுறும்போது வெளிப்படுகிறது.

கல்விக் கொள்கையின் தொடக்கம்

மலேசியாவின் வரலாறு 1963ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தாலும் அதற்கு முன்னோடியாக அமைந்திருப்பது மலாயா கூட்டரசு. இது 1957ஆம் ஆண்டு வடிவம் கண்டது. 1963ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம், 1957ஆம் ஆண்டு காணப்பெற்ற மலாயா கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தையொட்டி இருந்ததைக் கவனிக்க வேண்டும்.

அதோடு, நம் நாட்டின் கல்விக் கொள்கையை எடுத்துக்கொண்டால் அதைப் பற்றிய ஆய்வு ஐம்பதுகளில், அதாவது மலாயாவின் சுததிரத்துக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. நீண்ட கால ஆய்வுக்குப் பின் தாய்மொழிப்பள்ளிகள், அதாவது சீன, தமிழ்ப்பள்ளிகள் எப்பொழுதும் போல் இயங்குவதற்குச் சட்டம் இயற்றப்பட்டது. பொது கல்வி நடுவண் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகச் சட்டம் வந்ததும் சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசின் பொருளாதார உதவியும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

இந்த ஏற்பாட்டின் வழியாக தாய்மொழிகளுக்குப் பாதுகாப்பு, இனத்தின் பண்பாட்டுக்குப் பாதுகாப்பு என்பதோடு நின்றுவிடாமல் தாய்மொழிப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பொருளாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. பொதுவாக மலாயாவின் புது கல்விக் கொள்கைக்கு வடிவம் தந்தபோது தாய்மொழிப் பள்ளிக்கூடங்களின் ஆயுளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது தெளிவாயிற்று.

இதுதான் வரலாறு. இந்த வரலாற்றை மூடி மறைக்கலாமா? புறக்கணிக்கலாமா? உண்மையை அழித்துவிடலாமா? இவைதான் முக்கியமான கேள்வி. (தொடரும்)