நடிகர் பிரபுதேவா
நடிகை சம்யுக்தா ஹெக்டே
இயக்குனர் ஹரிகுமார்
இசை சத்யா
ஓளிப்பதிவு விக்னேஷ் வாசு
சென்னையில் வட்டிக்கு பணம் வாங்கி, அதை செலுத்தாதவர்களை அடித்து உதைத்து பணம் வாங்கும் அடியாள் வேலையை பார்க்கிறார் பிரபுதேவா. ஆதரவற்றவரான பிரபுதேவாவை சந்திக்கும் ஈஸ்வரி ராவ், நான்தான் உனது தாய் என்று கூறுகிறார். கோபத்தில் ஈஸ்வரி ராவை அடித்து உதைத்து அனுப்பும் பிரபுதேவா, ஒரு கட்டத்தில் தாய் மீது பாசம் ஏற்பட்டு அவரை சேர்த்துக் கொள்கிறார்.
இந்நிலையில், ஒரு ஈஸ்வரி ராவை மர்ம நபர்கள் கடத்துகிறார்கள். தாயை தேட ஆரம்பிக்கும் பிரபுதேவா, இறுதியில் ஈஸ்வரி ராவை கண்டுபிடித்தாரா? இல்லையா? கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, அடியாள் தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத இவருடைய நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. அடியாளாகவும், பாசக்காரனாகவும் நடித்து மனதில் பதிகிறார் பிரபுதேவா.
நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா ஹெக்டே, படத்தில் வந்து சென்றிருக்கிறார். பெரிதாக வேலை இல்லை. இவருடன் பயணிக்கும் யோகி பாபு அதிகம் சிரிக்க வைக்கவில்லை. பாசம் காண்பித்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார் நடிகை ஈஸ்வரி ராவ். இவருடைய நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
தாய், மகன் பாசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரிகுமார். படத்திற்கு பாசம் மட்டுமே போதும் என்று நினைத்துவிட்டதால், அதிகமாக ரசிகர்களை கவரவில்லை.
சத்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக தாய்ப்பாசப் பாடல் சிறப்பு. பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதி படத்திற்கு பலம். கதைக்களத்தை உணர்ந்து வேலை செய்திருக்கிறார்.
maalaimalar