விருமன்

இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், மனோஜ், ‘மைனா’ நந்தினி, வசுமித்ரா, அருந்ததி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – S.K.செல்வகுமார்

‘விருமன்’ என்பது ஒரு குலத்தினர் கும்பிடும் அவர்களது குலசாமியின் பெயர். தேனி மாவட்டப் பகுதிகளில் ‘விருமன்’என்றால் ‘பிரம்மன்’ என்றும் சொல்வார்கள்.

வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள்தான். அந்தத் தவறுகளை, தவறு செய்தவரின் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் சுட்டிக் காட்ட வேண்டும். அது அவர்களுக்கு நிச்சயமாக நல்லது செய்யும். நாம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் அந்த உறவுதான் நல்ல உறவு. அப்படியொரு உறவுதான் இந்தப் படத்தின் ஹீரோவான ‘விருமன்’.

சென்ற தலைமுறைகளில் நம் தலைமுறைகள் எப்படி குடும்பமாக இருந்தார்களோ  இன்றைக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்பவன்தான் இந்த ‘விருமன்’. உறவுகள் சூழ ஒற்றுமையோடு இருந்து, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தயங்காமல் முன்னால் போய் நிற்பவன்தான் இந்த ‘விருமன்’. இது மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச் கொண்ட கேரக்டர்தான் இந்தப் படத்தின் நாயகனான விருமன்.

ஆனால், தன் தாயின் சாவுக்குக் காரணமான தனது தந்தை மீது அழியாக் கோபத்தோடு இருக்கும் விருமன், தனது தாய் மாமனான ராஜ்கிரணால் வளர்க்கப்படுகிறான்.

அதே ஊரில் தாசில்தாராக இருக்கும் தனது தந்தையான முனியாண்டி என்ற பிரகாஷ்ராஜ் மீது அடங்காத கோபத்தில் இருக்கிறான் விருமன்.

பிரகாஷ்ராஜோ தனது மற்றைய மூன்று மகன்களுடன், அம்மாவுடனும், இரண்டு மருமகள்களுடனும் வாழ்ந்தாலும் பணம், பணம், பணம் என்று அலைந்து கொண்டிருக்கிறார்.

அப்பனை எந்தெந்த வழிகளிலெல்லாம் அவமானப்படுத்த முடியுமோ அதையெல்லாம் செய்கிறார் விருமன். இதேபோல் பிரகாஷ்ராஜூம் விருமன் மீது வெறுப்பாக இருப்பதால், இருவருக்கும் இடையே அவ்வப்போது முட்டல், மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தனது அப்பாவைத் தவிர்த்து மற்றைய பாட்டி, அண்ணன்கள், மதினிமார்களிடம் தனது பாசத்தைக் காட்டி குடும்ப உறவுகளை வளர்த்தெடுக்க நினைக்கிறான் விருமன். ஆனால், அவனது ஒவ்வொரு முயற்சியையும் அப்பா பிரகாஷ்ராஜ் கெடுத்துக் கொண்டே செல்கிறார்.

அப்பா – மகனுக்குள் என்னதான் பிரச்சினை…? இறுதியில் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா…? இல்லையா…? என்பதுதான் இந்த ‘விருமன்’ படத்தின் கதை.