அமலாக்க பிரிவுக்கு ஒரு வெளிப்படையான சவால்!

வட்டி முதலைகளைப் பற்றி புகார்கள் ஆயிரக் கணக்கில் செய்தாயிற்று. கடன் வாங்குபவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் தொல்லைகள் எண்ணில் அடங்கா. இந்த முதலைகள் ஆரம்பத்தில் தெரிந்தவர்களிடம் வாய் வழி விளம்பரம் செய்தார்கள். அடுத்தது அறிமுக அட்டையைப் (business card) பயன்படுத்தினார்கள். பின்பு சின்ன அளவில் துண்டு விளம்பரம் விநியோகித்தனர். பிறகு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தங்களின் அழைப்பு எண்ணை ஒட்டி வைத்தனர்.

ஆனால், இன்றோ அவர்களின் விளம்பரம் இல்லாத தெரு கிடையாது. இதில் மிகவும் வெட்கக்கேடான விடயம் என்னவென்றால், பொது சொத்தை நாசமாக்கினால் நிச்சயம் தண்டனை உண்டு என்று மிரட்டும் காவல்துறை, அதே பொது சொத்தின் மேல் தங்களின் தொடர்பு எண்களுடன் தாறுமாறாக ஒட்டிவைக்கப் பட்டிருக்கும் வட்டிமுதலைகள்  மேல் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை என்பதற்கு வட்டி முதலைகளின் அத்து மீறல்களே ஆதாரங்கள்.

சாலை விளம்பரப் பலகைகள், விளக்குத் தூண்கள், சுவர்கள், காலி வீடுகள், கடைகள் என்று இப்படியேப்போய் கூடிய விரைவில், மக்களின் வசிப்பிட எல்லை சுவர்கள், காலியாக இருக்கும் கடைகள் (இப்பொழுதுக் கூட சிலக் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது) அரசாங்க கட்டிடங்கள், காவல் நிலைய எல்லை சுவர்கள் என்று விரிவடைந்தாலும் ஆச்சரியப் படுவதற்கொன்றுமில்லை.
கடன் முதலைகளின் விளம்பரங்கள் போக புதியதாக சில விளம்பரங்கள் முளைத்து விட்டிருக்கின்றன.

1. URUT UNTUK BATIN LELAKI
2. UBAT KUAT UNTUK LELAKI
3. UBAT UNTUK TAHAN LAMA
4. SEKS TOYS
5. ANDA SUNYI PANGGIL SAYA
6. DO YOU WANT HEAVEN I AM AVAILABLE

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விளம்பரங்களிலும் தொடர்பு எண்கள் உண்டு. சம்பந்தப்பட்ட எண்ணுடன் தொடர்புக் கொண்டபோது பதில் பெண்களிடமிருந்தே வருவது நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கின்றது. முதல் சேவைக்கு ரி.ம. 30லிருநது 80வரையும், இரண்டும் மூன்றும் மருந்து என்பதால் ரி.ம. 10லிருந்து 300வரை உண்டு.

நான்காவது பாலுணர்ச்சியைத் தூண்டக் கூடிய பொருட்களும் ரி.ம. 500 வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஐந்தும் ஆறுக்கும் விளக்கம் தேவையில்லை புரிந்துக் கொள்ளலாம். இதன் அர்த்தம் என்ன என்று வினவும் நம் பிள்ளைகளிடம் விளக்கம் சொல்ல பல பொய்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நண்பர் ஒருவரிடம் இதைப் பற்றி கலந்துரையாடியப்போது, பள்ளியிலேயே பாலியல் கல்வி வந்தப் பிறகு இதைப் பற்றி பிள்ளைகளிடம் மூடி மறைத்து என்ன பயன் என்று மடக்கினார்.

“அப்பா உங்களுக்குதான் உடம்பு முடியல்லையே இந்த மருந்தை வாங்கி சாப்பிடுங்களேன்” என்று அப்பாவித்தனமாக சொல்லும் வயதுக்கு வந்த மகளிடம் எப்படிப் பட்ட மருந்து அது என்று விளக்கம் கூற முடியுமா? பொதுவாக எல்லோரும் குடிக்கும் குழம்பிக்கு ஏன் KOPI JANTAN என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றக் கேள்விக்கும் பதில் தடுமாறுகிறது. இடுப்பு வலிக்கும், உடல் சுறுசுறுப்புக்கும் தொங்காட் அலி காப்பியைக் குடியுங்கள் என்ற விளம்பரத்தின் அர்த்தம் வேறு மாதிரிதானே நம் மண்டைக்கு ஏறுகிறது.

வட்டி முதலைகளின் விளம்பரங்களினால் இன்று பலக் குடும்பங்கள் சீரழிவுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.  அது போல இன்று தெருவில் பவனி வரும் இது போன்ற புதிய விளம்பரங்களில் கூடிய விரைவில் ஆபாசப் படங்களும் வெளிப்படையாக தொங்கவிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம் இவர்களுக்குத் தெரியும் மாவட்ட இலாகாவும், காவல் துறையும் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று. பகிங்கரமாக நடை பெரும் இந்த வியாபாரத்திற்கு ஏன் தடைவிதிப்பதில்லை என்றுக் கேட்டால் காரணம் இல்லாமல் எலி அம்மணமாக ஒடுமா என்று வெறுப்புக் கொள்கிறார்கள்.

இளையோரிடம் தான் இப்பொழுது கைத் தொலைப்பேசி உள்ளதே. இதில் இன்னும் மோசமானப் படங்களையெல்லாம் பார்க்கலாமே என்ற வாதமும் உண்டு. உண்மைதான். மறைவில் பார்ப்பதற்கும், தெருவில் பார்ப்பதற்கும் எற்படும் பலன்கள் ஒரே மாதிரியானவை அல்ல.

இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தெரு விளம்பரங்கள் எல்லைகளை மீறுவது ஏன்?.

1. பொதுமக்களிடமிருந்துக் கிடைக்கும் ஆச்சரியப்பட வைக்கும் ஆதரவு

2. அமலாக்க அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்.

3. மிகவும் குறைந்த முதலீட்டில் வரியின்றி இலாபமாகக் கிடைக்கும் பல மில்லியன் ரிங்கிட்.
குற்றங்களைக் குறைக்க வழிக் காணமுடியாமல் சிறைசாலைகளைப் பெருக்கிக்கொண்டு இருக்கின்றோம். கள்ளக் குடியேறிகளைக் கள்ளமற்றவர்கள் என்று அங்கீகரிக்கின்றோம்.
திருட்டு மோட்டார் ரேசிங் ஓடியவர்களுக்கு, புதிய ஓடு தளம் அமைத்துக் கொடுக்கின்றோம்.
திருந்தாத போதைப் பித்தர்களுக்கு நெடுந்தூரம் செல்லும் பேருந்தை ஓட்ட அனுமதியளிக்கின்றோம்.
தகுதி இல்லாதத் தலைவர்களித் தேர்ந்து எடுக்கின்றோம்.

பிரச்சனை வந்தப் பிறகு குய்யோ முய்யோ என்றுக் கத்துகின்றோம். சாலையிலிருந்து, பொது இடங்கள் வரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த மோசமான விளம்பரங்களை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறினால் குடும்பத்தோடு தெருவில் நடக்க கூச்சப்பட வேண்டியிருக்கும்.. ஆனால் ஒன்று மட்டும் புரிகின்றது. அமலாக்க அதிகாரிகள், அ(டங்கி)டக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று.

அரோகரா……

கா.கலைமணி
[email protected]

TAGS: