இராகவன் கருப்பையா – ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது அவருடைய குடும்பத்தினரும் உற்றார் உறவினர்களும் நண்பர்களும் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகின்றனர். ஏனெனில் மனிதனாய் பிறந்த அத்தனை பேருக்கும் நெருக்கமான ஒருவரின் மரணத்தினால் ஏற்படும் சோகத்தைவிட வேறொரு துயரம் இருக்க முடியாது.
எனவே மரணம் எனும் ஒரு சம்பவம் நல்ல விஷயம் அல்ல என்பது யாருக்குமே சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்பதும் நிதர்சனமான உண்மை.
ஆக ஒருவர் மரணத்தைத் தழுவும் போது அவர் நல்ல நேரத்தில் இறந்தார் என்றோ கெட்ட நேரத்தில் இயற்கை எய்தினார் என்று சொல்வதோ முற்றிலும் அறிவிலித்தனமான ஒரு செயலாகும்.
கடவுளின் விதிப்படி அவர் மறைந்தார் எனும் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றவாறு காரியங்களை செய்து அவருக்கு செய்ய வேண்டிய சகல இறுதி மரியாதைகளையும் செய்வதே சாலச்சிறந்தது.
நிலைமை இவ்வாறு இருக்க அண்மைய காலமாக மரணத்தினால் துயருற்றிருக்கும் குடும்பங்களை சில பூசாரிகள் குழப்பி தோஷம் எனும் பெயரில் தேவையில்லாமல் அவர்களை அச்சுறுத்தி சோகத்தை நீட்டிக்கச் செய்து மேலும் அதிகமான இன்னல்களுக்கு இட்டுச் செல்வது வேதனையான விஷயம்.
ஒருவரின் இறப்பில் நல்ல நேரம், கெட்ட நேரம் என்றெல்லாம் சமீப காலமாகத்தான் அதிகமாக பேசப்படுகிறது. தமிழகத்தில் இருந்து பிழைப்புத் தேடி இங்கு வந்திருக்கும் ஒரு சிலரால்தான் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.
உதாரணத்திற்கு ஒரு இளைஞர் பயங்கர சாலை விபத்து ஒன்றில் கோர மரணமடைந்திருந்தால் இவர்கள் கூற்றுப்படி அது என்ன நேரமாக இருக்கும்? பஞ்சாங்கத்தையோ நாள்காட்டியையோ பார்த்து, அவர் நல்ல நேரத்தில் மடிந்துள்ளார் என்று சொல்வதற்கு யாருக்காவது துணிச்சல் இருக்குமா? அப்படி சொன்னாலும் அது ஏற்புடையதாக இருக்குமா?
அண்மையில் தலைநகரில் இறப்பு ஏற்பட்டிருந்த ஒரு இல்லத்தில் நடந்த உண்மைச் சம்பவம்:ஐம்பது வயதுக்கும் குறைவான ஒரு குடும்பத் தலைவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.ஆழ்ந்த துயரில் மூழ்கியிருந்த அவருடைய மனைவியும் பிள்ளைகளும் கதறி அழுதுக் கொண்டிருந்த வேளையில் வெளியே பந்தலில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுடைய ஒருவர், “இவர் நல்ல நேரத்தில் இறந்துள்ளார். இவருடைய இறப்பு நல்லதொரு மரணம்” என்று கூறினார்.
மறுகணமே மிகுந்த சினமடைந்த மற்றொரு நபர் வெகுண்டெழுந்து அவரை தாக்காத குறையாக அவ்விடத்திலிருந்து விரட்டியடித்தார். முட்டாள்தனமான கருத்துகளுக்கு இதுதான் யதார்த்தம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் தகனம் செய்யப்பட்டு கடலிலோ ஆற்றிலோ அஸ்தியை கரைத்த பின்னரும் ‘கெட்ட நேரம்’ எனும் பெயரில் இறந்தவருக்கு தோஷம் கழிக்க முற்படுவது ஏற்புடையதாக இல்லை.
துயரில் மூழ்கியிருக்கும் சம்பந்தப்பட்ட அந்த குடும்பத்தினரை பயமுறுத்தி இன்னும் சில ஆயிரம் ரிங்கிட் செலவாகும் வகையில் நிலைமை மோசமாக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் வறுமையான குடும்பங்களின் நிலை என்னவாகும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அளவு கடந்த மூட நம்பிக்கையில் நாம் மூழ்கிக் கிடப்போமேயானால் நமது பலவீனத்தை மற்றவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிக்க நாமே இடமளிக்கிறோம் என்றுதான் பொருள்படும்.
ஏனெனில் தோஷம் கழிக்காவிட்டால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்துவிடும் எனும் அச்சத்தில் நாமும் அதற்கு உடந்தையாகிவிடுகிறோம்.
மறைந்த நம் ரத்த பந்தத்தினால் நமக்கு எப்படி தோஷமோ கெட்ட சகுனமோ துரதிர்ஷ்டமோ ஏற்படும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.