உள்நாட்டின் போரினால் 1976 மற்றும் 1977 களில் அகதிகளாக வந்த வியட்னாமியர்களுக்கு, மறு குடியேற்றம் நிச்சயிக்கப்படும் வரை எல்லா வசதிகளையும் செய்துக் கொடுத்தோம். காரணம் அமெரிக்காவின் ஆதிக்கம் இருந்தது. அதன் பிறகு, வந்த போஸ்னியா, பாலஸ்தீன், மியன்மார் மக்களுக்கும், வெளிநாட்டினர் மெச்சும்படி எல்லாவசதிகளோடு பலருக்கு நிறந்தர வசிப்பிடத் தகுதி அதோடு குடியுரிமையும் வழங்கினோம்.
மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளைவிட தமிழ் இன அழிப்புப் போர் மிகப் பெரிய அளவில் இந்தியாவின் ஆதரவோடு இலங்கையில் நடந்தது; இன்னும் நடந்துக் கொண்டிருக்கின்றது. அழிந்தவர்கள் சில இலட்சமாகவும், முடமாக்கப் பட்டவர்கள் பல ஆயிரமாகவும், உளரீதியில் பாதிக்கப் பட்டவர்கள் பல இலட்சங்களும் இருக்கின்ற நிலையில், வேறு வழியின்றியும், கட்டாயப்படுத்தப்பட்டு சிறீலங்கா அரசாங்கத்தின் கைக்கூலிகள் மற்றும் இராணுவத்தின் நெருக்குதலாலும் பல நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்தத் தமிழினம் இன்று மலேசியாவில் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சிக்கல்கள் நம் நாட்டின் கொள்கைகள் மற்றும் ஐ.நா.வின் நிலை போன்றவைகள் பலம் வாய்ந்த சில நாடுகளிடம் கையைக் கட்டிக் கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையான உண்மை.
பங்சாரில் அமைந்துள்ள ஐ.நா. தூதகரத்தில் ஏறக்குறைய 4000-க்கும் மேற்பட்டோர் ஈழத்தமிழர்கள் அகதிகளாகப் பதிந்துக் கொண்டிருக்கின்றனர். சொந்த நாட்டினிலேயே நாடோடிகளாகி, வலுக்கட்டாயமான அகதிகளாகி, இங்குள்ளத் தமிழர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு இங்கு தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்களோடு, சிங்களவன் பலரும் தங்களை அகதிகளாகப் பதிவு செய்துக் கொண்டிருப்பதன் நோக்கம் நமக்கு வேறு விதமான சிந்தனையை உருவாக்குகின்றது.
இங்கு அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்கள் படும் இன்னல்கள் கொஞ்சமல்ல. பதிவுப் பெற்றவர்களில் எல்லோருக்கும் அகதிகள் தகுதிகள் இன்னும் வழங்கப்படவில்லை. தகுதிப் பெற்றவர்கள் வேறு நாட்டிற்கு குடி பெயர வாய்ப்பு இல்லை என்கிறது UNHCR, ஆகவே சம்பந்தப்பட்ட அனைவரும் வெளியேறிய நாட்டிற்கேத் திரும்பிவிடவேண்டும் என்று இவர்களுக்கு ஐ, நா.வும் மலேசிய அரசாங்கமும் மறைமுகமாக உத்தரவிடுகின்றது. உயிருக்கு உத்திரவாதமில்லாமல் தானே வெளியேறினார்கள். மீண்டும் அந்த நாட்டிற்கேத் திரும்புவது எங்ஙனம்?
இங்கே இவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வாழ்வியல் சிக்கலைப் பார்ப்போம்.
1. ஐ.நா.வின் அடையாள வெள்ளை அட்டை வைத்திருப்பதன் மூலம் அகதிகள் என்றக் காரணத்திற்காக இவர்களுக்கு வெளியில் வேலை செய்ய அனுமதியில்லை.
2. பிரசவப் பிரச்சனை, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இன்மை, கல்வி வசதியில்லை.
3. பள்ளிப்படிப்பை இடையிலேயே விட்டு வந்தவர்களுக்கு அதைத் தொடர வாய்ப்புகள் இல்லை.
4. அரசாங்க மருத்துவமனைகளில் இவர்கள் சிகிச்சைப் பெறமுடியாது. தனியார் மருத்துவமனைகளில் பணமின்றி மருத்துவம் கிடைக்காது.
5. உளரீதியில் பாதிப்புற்றிருப்பதாலும், நாளை விடிவு நிச்சயமற்ற நிலையில் இளையோரிடமும், குழந்தைகளிடமும் கலாச்சார விரிசல் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றன.
6. காரணமின்றியே மிரட்டப்படுதல், சிறைச்சாலையில் அடைக்கப்படுதல், பணம் பிடுங்கப் படுதல் போன்று நம் காவல் துறையினரிடம் எதிர்கொள்ளும் மனிதாபமற்ற செயல்கள்.
7. வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்யும் இடங்களில் பாலிய ரீதியாகப் பாதிக்கப் படுதல்.
8. செய்கின்ற வேலையில் சம்பளத்தில் ஏமாற்றுதல்.
9. வெளியிடத்தில் பயமின்றி மற்றும் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும், இவர்களுக்கு உதவிகள் கீழ்க்கண்டவழிகளில் சென்றடைகின்றன.
1. தொண்டூழிய அமைப்புகள்,
2. தனியார் நிருவனங்கள்
3. தனி பட்ட மனிதர்கள்.
4. ஊடகங்கள்.
பிரிக்பீல்டில் உள்ள கிருஸ்துவ அமைப்பு ஒன்று 60 குடும்பங்களின் நலனில் முழுநேரமும் அக்கறைக் கொண்டுள்ளதுப் போல் பலரும் உதவி வருகின்றன. இதில் சோகம் என்னவென்றால் சில அரசார்பற்ற இயக்கங்கள் இவர்களுக்கு செய்யும் உதவிகள் மூலம் சுயநலத்தோடும் இலங்கை தூதரகத்தின் கைப்பாவைகளாக நடந்துக் கொண்டு இங்கு அகதிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றனர் என்ற தவறானத் தோற்றத்தை வெளி உலகத்திற்கு பறைசாற்றுகின்றனர். அதோடு தேர்ந்தெடுக்கப் படும் சில அகதிகளை முன்னிலைப் படுத்தி அரங்கேற்றப்படும் நிகழ்ச்சிகள் வழி, அரசாங்கத்திடமிருந்தும், தனியார் நிருவனங்களிடமிருந்தும் வந்து சேரும் நிதிகள் இந்த மக்களுக்கு உதவுவதில்லை. இரத்தக் கண்ணீராகப் பெறுக்கெடுக்கும் இவர்களின் மருத்துவ சிக்கல்கள்
1. சிங்களவன் போட்ட வெடி குண்டினால் சிதறிய இரும்புத் துண்டுகள் இன்னும் உடம்பில் இருக்க அவற்றை வெளியேற்ற வேண்டும்.
2. போரினால் ஊனமுற்றோருக்கு
3. இங்கு வந்தப் பிறகு அடிபட்டு, உடல் காயம், எலும்பு முறிவு
4. குழந்தைப் பிறப்பு
5. பெண்களுக்கான உடம்பு சிக்கல்கள்
6. இறந்தவர்களுக்கான மயான சிக்கல்கள்
7. குடும்ப உறுப்பினர்கள் ஈழத்தில் இன்னும் உயிரோடு இருக்கின்றனரா என்று தெரியாத நிலை.
8. பலவிதமான துன்பங்கள் தொடர்ந்தால் பட்டியல் நீளும்
எந்த இயக்கங்கள் இவர்களுக்கு உதவுகின்றோம் என்று விளம்பரப் படுத்திக் கொள்கின்றதோ, அவர்களிடம் மருத்துவத்திற்கு உதவி கேட்டால், இந்தப் பணம் ஈழத்தில் அவதியுரும் தமிழர்களுக்காகக் கொடுக்கப்பட்டது உங்களுக்கில்லை என்று விரட்டியடிக்கப்படுகின்றனர். அதற்காக இவர்களைப் பயன்படுத்துவது முறையோ? இவர்கள் தனிபட்ட முறையில் ஐ. நா.வில் கோரிக்கை வைத்தால் கையை விரிக்கின்றது ஐ.நா, அல்லது தனிபட்டவர்களிடம் உதவிகள் கேட்டாலோ அர்த்தமில்லாமல் அலைகழிக்கப் படுகின்றனர் அல்லது அவமானப் படுத்தப் படுகின்றனர். மனிதாபிமான உதவிகள் மட்டும் பிரச்சனைகைத் தீர்க்காது. இவர்களுக்கு வேண்டியது நம்பிக்கையான எதிர்காலம்..
இதன் அடிபடையில் அகதிகளிலேயே 11 பேர் சேர்ந்து மலேசியவாழ் இலங்கை தமிழ் அகதிகள் அமைப்பு ஒன்றை நிருவியுள்ளனர். இந்த அமைப்பு கடந்த டிசம்பர் 2010-ல் அமைக்கப்பட்டு இவ்வருடம் (2011) மார்ச்சில் மலேசியாவில் இயங்கும் ஐ.நா.வால் அதிகரப்பூர்வமாக அங்கரீகப்பட்டுள்ளது.
இவர்களின் நோக்கமே மலேசியா முழுவதும் சிதறியிருக்கும் தமிழ் அகதிகளை இந்த அமைப்பின் கீழ் ஒருங்கினைத்து இவர்கள் மூலம் பிரச்சனைகளை ஐ.நாவுக்குக் கொண்டுச் செல்லும்போது இவர்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கின்றது. ஏனென்றால் ஒரு அகதிக்குதான் இன்னொரு அகதியின் வலி தெரியும். இந்த அமைப்பு மட்டும் தான் அகதிக்கான ஆதாரங்களை உண்மையாக வழங்க முடியும். பூச்சோங்கில்.அலுவலகத்தைக் கொண்டிருக்கும் இந்த அமைப்பில் இதுவரை 650க்கும் மேல் பதிந்துக் கொண்டிருக்கின்றனர். அகதிகளின் இதயத்தில் படிப்படியாக நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த அமைப்புக்கு ஒரு சில அரசுசார்பற்ற அமைப்பிடமிருந்து பல எதிர்ப்புகளை எதிர் நோக்குகின்றனர்.
என்ன காரணம்?
ஐ.நா அமைப்பு மலேசியவாழ் இலங்கை தமிழ் அகதிகள் அமைப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதால், ஏற்கனவே அகதிகளை வைத்து தனிப்பட்ட முறையில் பயனடைந்த அமைப்புகள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றன. இதனால் இந்த சுயநல அமைப்புகளுக்கு வருமானம் பாதிப்பு அடைந்துள்ளது. அதனால் எரிச்சல் அடைவது நியாயம்தானே. இருந்தும் மலேசியவாழ் இலங்கை தமிழ் அகதிகள் அமைப்பு தன் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமையை தொடர்ந்து முன்னிலைப் படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. இவர்களுக்கு உதவி செய்வோர்,அல்லது சேவையைப் பெற முயலுவோருக்கு கீழ்க்காணும் விபரங்கள் உதவலாம்.
தொடர்புக்கு,
திருமதி: சிறீரஞ்சனி (தலைவர் 016-6772075)
திரு; டெஸ்மண்ட் (துணைத் தலைவர் 016-9690536)
திரு. பாஸ்கரன் (காரியதரிசி 016-2366503)
திரு: மோகனநாதன் (துணை காரியதரிசி 017-3385829)
திரு: ரவீந்திரம் (பொருளாளர் 016-2781214)
முகவரி,
Srilankan Tamil Refugees Organization Of Malaysia (STORM)
H-03-02, JALAN PPK1,PUSAT PERNIAGAAN KINARARA 3,
TAMAN KINRARA, 47100, PUCHONG, SELANGOR.
Email: [email protected]
STROM அமைப்புக்குமட்டுமே வழங்கப்படும் சேவைகள்.
1. சொந்தக் கல்வித் திட்டம் மற்றும் உயர்நிலைப் படிப்புக்கு சிறப்பு வகுப்புகள்.
2. மாதாந்திர உணவு எற்பாடு
3. மருத்துவ உதவிகள்
4. மலேசியாவில் இயங்கும் UNHCR சேவையைப் பெற உதவுதலும் பெற்றுத் தருதலும்.
5. சட்டரீதியான உதவிகளும், பாதுகாப்பும் வழங்குதல்
6. பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் குறிப்பிட்டப் பயிற்சிகளை வழங்குவது.
7. மொழி வகுப்புகள்
8. இளையோரின் கல்வித் திட்டங்கள்
9. கலாச்சார அறிவை வளர்த்தல், போட்டி விளையாட்டில் ஊக்கப்படுதுதல் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குதல்.
10. மறு குடியேற்றத்துக்கு வழி செய்தல்
வாரம் ஒரு முறை வியாழக்கிழமை மட்டும் UNHCR அதிகாரியை நேரில் தமிழ் அகதிகளை சந்தித்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. அலுவலக சேவை அனுதினமும் உண்டு. அனைவரும் தன்னார்வ சேவையின் அடிப்படையில் வேலை செய்கின்றனர்.மெதுமெதுவாக இவர்களின் சந்திப்பும் சேவையும் மலேசியா முழுவதும் விரிவடைய நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
இவ்வளவு சோகத்திலும் இவர்களுக்கு ஆருதலான விடயம், இங்குள்ளத் தமிழர்கள் இவர்களின் கண்ணீரை ஓரளவுத் துடைத்துக் கொண்டிருப்பதுதான். மொழித்தெரியாத நாட்டில் அகதியாக அவதிப்படுவதைவிட தமிழர்கள் அதிகம் வாழும் இங்கு இருப்பது காயத்திற்கு மருந்துத் தடவுவதுப் போல் உள்ளது என்று நம்பிக்கையில் இருக்கின்றனர்.
எல்லாவற்றையும் சிங்களவன் அபகரிக்க, உயிர் பிழைத்தாலேப் போதும் என்று இருந்த மிச்சத்தையும் கொடுத்துவிட்டு இங்கு ஒரு வெளிச்சும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, ஒவ்வொரு நாளையும் தள்ளீக்கொண்டிருக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு எதிர்கால நம்பிக்கையை வளர்ப்போம்..
ஆக்கம்: கா. கலைமணி – [email protected]