தார்மீகம் அற்ற தமிழ் எழுத்தாளர் சங்கம் – ம. நவீன்

‘மலேசியாஇன்று’ அகப்பக்கத்தில் இன்று ஒரு கட்டுரை வந்துள்ளது. அக்கட்டுரையை முகநூலில் பகிர முடியாதபடிக்கு சிலர் புகார் கொடுத்துள்ளனர். விரும்புபவர்கள் https://malaysiaindru.my/224194 என்ற தளம் சென்று கட்டுரையைத் தேடி வாசிக்கலாம். கட்டுரையின் தலைப்பு : தமிழ் எழுத்தாளர் சங்கம் சீர்திருத்தம் பெற வேண்டும்.

அக்கட்டுரையை ஒட்டி சிலவற்றைக் கூறலாம் என நினைக்கிறேன்.

பலருக்கும் மனதில் மலேசிய எழுத்தாளர் சங்கம் என்பது மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் அனைவருக்கும் தலைமை தாங்கும் அமைப்பு எனும் எண்ணம் உள்ளது. அது தவறு. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்பது ஓர் அரசு சாரா அமைப்பு. அவ்வளவுதான். நாளையே ஒரு குழு நினைத்தால் மலேசிய நவீன தமிழ் எழுத்தாளர் சங்கம் என ஒன்றைத் தொடங்கலாம். இப்படி இந்நாட்டில் ஏராளமான சங்கங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இது.

மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சிறப்பு என்ன? முதலில் அது பழமையான அமைப்பு. இரண்டாவது அதன் தொடக்கக் கால தலைவர்கள் ஆளுமை மிக்கவர்கள். எப்போதுமே ஓர் அமைப்பு அதை முன்னெடுக்கும் ஆளுமைகளால் அடையாளம் காணப்படுகிறது. எனவே தமிழ் எழுத்தாளர் சங்கம் அவர்கள் வழியாகவே அனைவராலும் அறியப்பட்டுள்ளது.

இன்று எழுத்தாளர் சங்கத்தை விமர்சிக்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை. ஏன்? சுய சிந்தனை கொண்டு அறிவார்ந்த இளைஞர்கள் யாரும் அதன் பக்கம் செல்வதில்லை. அவர்கள் கொடுக்கும் விருதுகளைப் பெறுவதில்லை.

60 ஆண்டுகள் பழமையான ஓர் அமைப்பு தன் திறனின் நிலைக்காமல் இன்னமும் அரசியல்வாதிகளை நத்திப்பிழைப்பதைக் கொண்டே அதன் வீழ்ச்சியை அனைவரும் அறிந்துள்ளனர். கிட்டத்தட்ட மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகலாவில் பிரதிநிதிக்கும் எவரும் அண்டிச்செல்லாத இயக்கமாகிவிட்டது தமிழ் எழுத்தாளர் சங்கம்.

முன்பு பலராலும் ரசிக்கப்பட்ட அழகி ஒருத்தி கிழவியான பிறகு செய்துக்கொள்ளும் அதீத ஒப்பனைப் போல இவ்வமைப்பின் பாவனைகள் அமைந்துள்ளன. அது அருவருக்கத் தக்கது என இலக்கியம் அறிவோர்க்குத் தெரியும்.

இன்று புதிதாக எழுத வரும் அறிவார்ந்த இளைஞர்களுக்கு தன் தோளில் விழும் மாலையும் கிடைக்கும் பாராட்டும் அத்துறையில் அறிவார்ந்தவர்களிடமிருந்து இருந்து விழ வேண்டுமே தவிர அரசியல்வாதிகளிடம் இருந்து அல்ல என அறிந்துள்ளனர்.

அப்படியான எந்த அமைப்பையும் புறக்கணிக்க அவர்கள் தயாராகவே உள்ளனர். மற்றபடி இரண்டு கதை எழுதிவிட்டு இரண்டு விருதுக்காக அலைபவர்களுக்கும் இலக்கியத்தை விளம்பர அடையாளத்துக்காகப் பயன்படுத்திக்கொள்பவர்களுக்கும் இவ்வமைப்பு இன்னும் தேவையாக உள்ளது.

ஒரு மனிதன் வாழும்போதே மறக்கப்பட்டு இறப்பது எத்தனை கொடுமையோ அந்த அவல நிலைதான் எழுத்தாளர் சங்கத்துக்கும். அதை தன் சுயநலத்தால் புதைகுழியில் தள்ளிவிட்டது யாரென அனைவரும் அறிவர்.

இந்நிலையில் இக்கட்டுரை ஓர் அரசு சாரா அமைப்பு கொண்டிருக்க வேண்டிய தார்மீகத்தை ஒட்டி பேசுகிறது. அமைப்பிடம் தார்மீகம் இருக்கும். வணிக நிறுவனங்களிடம் அதை தேடிக்கண்டடைவது சிரமம்.