எமது மூத்த தமிழ் அரசியல் தலைவர் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் ஜூன் 30, 2024 அன்று உயிர் நீத்தமையிட்டு உலகத் தமிழர் பேரவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசியல் வானில் நீண்டகாலம் பிரகாசித்தவர் திரு. சம்பந்தன். 36 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், 2015-2018 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியதோடு, கடந்த 23 வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கி நடத்தியும் வந்தார். தமிழரது உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துவந்த திரு சம்பந்தன், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்கவேண்டுமென்பதற்காக தனது அரசியல் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர்.
1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் அரசியல் எப்போதுமே சிறந்த தலைவர்களின் சேவைகளைப் பெற்றுவந்திருக்கிறது. ஐம்பதுகள் முதல் எழுபதுகள் வரை சிறுபான்மை இனங்களின் மீது சிங்கள பெளத்த தேசியம் ஆதிக்கம் செலுத்திவந்த போது தமிழ்ச் சமூகம் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்ற முன்னாள் தலைவர்களால் வழிநடத்தப்பட்டு வந்தது. இனஆதிக்க அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் தமிழ் மக்களை ஒன்றிணைத்து காந்தீய பாதையில் அஹிம்சை வழிப் போராட்டங்களை முன்னெடுத்து வடக்கு-கிழக்கு வாழ் மக்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுயாட்சியைப் பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்த பலமான, அர்ப்பணிப்புள்ள தலைமைத்துவம் எழுபதுகள் எண்பதுகளின் போதும் மறைந்த தலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்களின் கீழ் தொடர்ந்தது. இக்காலகட்டத்தில்தான் அரச ஒடுக்குமுறையும் ஆயுதக் கிளர்ச்சியும் தமிழ் மக்களின் வாழ்வை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. இந்த கொந்தளிப்பான போர்க்கால கட்டத்தில்தான் திரு. சம்பந்தன் ஓரு முக்கிய, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவராக ஆனார்.
2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததும் தமிழ் சமூகம் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டது. எண்ணற்ற உயிர்களையும் உடமைகளையும் மட்டுமன்றி நம்பிக்கையையும் அது இழந்திருந்தது. வெற்றி கொண்ட இனவாதபேராண்மை அரசு இச்சந்தர்ப்பத்தைக் கபளீகரம் செய்து மென்மேலும் தமிழர்களை ஓரங்கட்டத் தொடங்கியது. சர்வதேச சமூகம் தமிழ்த் தலைமைகளை அவர்களின் கடந்த கால மற்றும் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்து இருமனப் போக்குடன் பார்த்தது. இந்த முக்கியமான காலகட்டத்தை திரு. சம்பந்தன் சிறப்பாக வழிநடத்தி, கவனமாக கணக்கிட்டுச் செய்த முயற்சிகள் மற்றும் நடைமுறை அரசியல் வேலைத்திட்டத்தின் மூலம் தமிழ் அரசியல் தலைமையை உறுதிப்படுத்தி மீளக்கட்டியெழுப்பினார்.
இதில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய முக்கிய நிகழ்வாக 2015 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்புலத்தில் திரு. சம்பந்தன் அவர்கள் எடுத்துக்கொண்ட வகிபாகத்தைக் கூறமுடியும். போரினால் தமிழர் சந்தித்த இழப்புகளிலிருந்து சற்று ஆசுவாசம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப அவரது முயற்சிகள் பெரிதும் வழிகோலின.
தமிழர்களின் தேவைகளை மிகவும் ஆணித்தரமாக முன்வைக்கும் அதே வேளையில் பெரும்பான்மை சமூகத்தின் அச்சங்களையும், கரிசனைகளையும், நாட்டின் தேவைகளையும் கருத்தில் கொள்வது திரு. சம்பந்தனின் தனித்துவமான பண்பு.
இலங்கையின் அரசியலமைப்பு வரலாற்றையும், தென்னிலங்கை சிங்கள அரசியல் தலைவர்கள் கடந்த காலத்தில் வழங்கிய பல நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் முன்வைத்து, அரசியல் தீர்விற்காக திரு. சம்பந்தன் மிகச் சிறப்பாக வாதிட்ட எண்ணற்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. அதே மூச்சில், தமிழர்களுக்கான சம உரிமைக்கான கோரிக்கைகள் ஒரு ‘ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத’ நாட்டிற்குள் அடைய முடியும் என்பதை அவர் ஒருபோதும் குறிப்பிடத் தவறவில்லை.
போரின் போது இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்குத் தீர்வு காண்பதில் இலங்கை விருப்பம் காட்டாதபோது, நாட்டில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக 2012 முதல் இலங்கையை ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் முக்கிய தலைமைத்துவம் வழங்கியவர் அவரே.
அதேபோன்று, 2018இல் அரசியலமைப்பு நெருக்கடியில் இலங்கை முடங்கியபோது, திரு. சம்பந்தன் நாட்டின் நலனை மனதில் வைத்து நிலைமையை மேற்கொள்வதற்கு கொள்கை ரீதியான தலைமைத்துவத்தை வழங்கினார்.
இலங்கையிலும் சர்வதேச அரங்குகளிலும் திரு. சம்பந்தன் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுவதற்கு அவரது இப்படியான உயரிய பண்புகளே காரணம். இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களின் தலைவர்களாலும், பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களாலும், இராஜதந்திரிகளாலும் திரு. சம்பந்தன் பெற்ற பெரும் பாராட்டுக்களை உலகத் தமிழர் பேரவை பல சந்தர்ப்பங்களில் பார்த்ததுண்டு.
திரு. சம்பந்தனின் வாழ்வுகாலத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவேண்டும் என்ற விருப்பம் இலங்கையிலும் சர்வதேச அரங்குகளிலும் அடிக்கடி எதிரொலிக்கப்பட்டு வந்திருக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி இது திரு. சம்பந்தன் மீது அவர்கள் கொண்டிருந்த மரியாதையையும் அபிமானத்தையும் எடுத்துக் காட்டுவதோடு, இலங்கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தமிழ் தலைவர்கள் வரிசையில் அவர் இடம்பெற்றிருக்கிறார் என்பதையும் குறிக்கும்.
ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால், திரு. சம்பந்தன் இனி நம்மிடையே இல்லை, இலங்கையும் காலங்காலமான தேசியப் பிரச்சினையை அனைத்து சமூகங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இன்னமும் தீர்க்கவில்லை.
பல தசாப்தங்களாக இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் நீதி, சமத்துவம், அங்கீகாரம் ஆகியவற்றுக்கான போராட்டத்தின் முகமாக இருந்து வந்தவர் திரு. சம்பந்தன்.
அந்த பேராளுமையின் இடத்தை புதிய, தகைமையுள்ள தலைவர் ஒருவரால் ஈடுசெய்வதென்பது மிகப்பெரிய சவால் நிறைந்ததொன்று. புதிய தலைவர் திரு. சம்பந்தனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தமிழர் நலன்களுக்காக இடைவிடாமல் குரல் கொடுப்பதுடன், ஒட்டுமொத்த நாட்டின் நலனுடன் பயணிப்பவர்களை ஒருங்கிணைத்து செயற்படுவார் என்று உலகத் தமிழர் பேரவை நம்புகிறது.
மறுபுறம், இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களும், குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவ்வளவு நீண்ட காலமாகத் தேசியப் பிரச்சினைக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வைக் காணத் தவறியதன் காரணத்தை ஆழமாகச் சிந்தித்து அறிதல் வேண்டும்.
“தேசியப் பிரச்சினை” என்று மறைந்த திரு. சம்பந்தன் அடிக்கடி குறிப்பிட்ட விடயத்திற்கு, நல்லெண்ணத்துடனும் நேர்மையுடனும், நீதியான மற்றும் நியாயமான தீர்வை நோக்கிச் செயற்படுவதே நாடு அவருக்கு செலுத்தக்கூடிய அதி உயர்ந்த அஞ்சலியாகும். அதற்கான நேரமும் இதுவே.
- சுரேன் சுரேந்திரன்