இராகவன் கருப்பையா – பிறரை நம்பியிராமல் நம்மை நாமே சுயமாக உயர்த்திக் கொண்டால்தான் வரும் காலங்களில் தலைநிமிர்ந்த ஒரு சமுதாயமாக இந்நாட்டில் நாம் வாழ முடியும் என்கிறார் அறிவியலாளர் முனைவர் மகாலெட்சுமி அர்ஜுனன்.
இன்னும் சுமார் 35 ஆண்டுகளில், அதாவது 2060ஆம் ஆண்டுவாக்கில் இந்நாட்டின் மக்கள் தொகை ஏறத்தாழ 43 மில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்த காலக் கட்டத்தில் நம் சமூகத்தினரின் எண்ணிக்கை இப்போதிருக்கும் 6.5 விழுக்காட்டிலிருந்து 4.7 விழுக்காடாகக் குறைந்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது இப்போது இருக்கும் 2.2 மில்லியன் பேர்களில் இருந்து குறைந்து, 2060ஆம் ஆண்டு வாக்கில் 1.9 மில்லியன் இந்தியர்கள்தான் இந்நாட்டில் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
“அத்தகைய சூழலில், எண்ணிக்கையில் நாம் குறைவாக இருந்தாலும், ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது,’ என்பதைப் போல பல துறைகளிலும் நாம் சிறந்து விளங்கினால்தான் நமக்கான உரிமைகளை நாம் தட்டிக் கேட்க முடியும்,” என, ஒரு சமூக ஆர்வலருமான மஹாலெட்சுமி குறிப்பிட்டார்.
“அரசியல்வாதிகள் நமக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்து வெறுமனே காத்துக் கிடப்பதில் அர்த்தமில்லை, பயனுமில்லை.”
“நமக்கான வழிகளை நாம்தான் தேடிச் செல்ல வேண்டும். அரசாங்கம் வழங்கும் பயிற்சித் திட்டங்களையும் இதர சலுகைகளையும் நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என சமூக வலைத்தள பதிவு ஒன்றில் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
“நாம் ஒவ்வொருவரும் பொருளாதாரத்தில் வலுப்பெற வேண்டும். சொத்துடமையாளர்களாக முன்னேறுவதில் முனைப்பு காட்ட வேண்டும்.”
“கல்வியில் சிறந்து விளங்குவது மிக மிக அவசியம். எனினும் அவ்வாறு செய்ய இயலாதவர்கள் கைத் தொழில் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்,” என மஹாலெட்சுமி மேலும் கூறினார்.
“சுய தொழில் செய்து முன்னேறுவதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன. அவ்வகையிலும் நமது வாழ்க்கையை நாம் வளப்படுத்திக் கொள்ள முடியும்.”
“சம்பாதிக்கும் பணத்தை சரியான இடங்களில் நாம் முதலீடு செய்ய வேண்டும். பொருளாதார வளப்பத்திற்கு இது மிகவும் அவசியமாகும்.”
“விளையாட்டுத் துறையிலும் கூட நமது இளையோர் தடம் பதித்து கோலோச்ச வேண்டும்,” என உலகின் 100 முதல் நிலை பெண் விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழும் மஹாலெட்சுமி ஆலோசனை வழங்கினார்.
“இவ்வாறு சுய காலில் நின்று பல்வேறுத் துறைகளில் நாம் முன்னேறிச் சென்றோமேயானால் அரசாங்கம் நம்மை உதாசீனப்படுத்த வாய்ப்பே இல்லை,” என்றார் அவர்.
“எண்ணிக்கையில் நாம் குறைவாக இருந்தாலும் பிறரால் மதிக்கப்படும் ஒரு சமூகமாக மிளிர்வதற்கு இத்தகைய முன்னேற்றங்கள் அவசியமாகும்.”
“அதிகமான பிள்ளைகளை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு சிறப்பானதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் வலு பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும். இல்லையேல் சிறிய குடும்பமே சிறப்பு.”
அறிவியல் தொடர்பு துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மலேசியரான மஹாலெட்சுமி, செறிவுமிக்க தமது கருத்துகளை மேற்கண்டவாறு அந்த காணொளியில் பதிவு செய்திருந்தார்.

























