இராகவன் கருப்பையா- அரசியலில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தான்தோன்றித்தனமான, சர்வாதிகார முடிவுகளினால் பல வேளைகளில் திறன்மிக்கவர்கள் ஓரங்கட்டப்பட்டு முற்றாக ஒதுக்கப்படுகின்றனர்.
அதீதத் திறமை இருந்தும் அவர்களில் பலருடைய அரசியல் வாழ்க்கை அதோடு அஸ்தமனமாகிவிடுவது வேதனைக்குரிய ஒரு விஷயம்.
கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து சுமார் 5 ஆண்டுகளுக்கு நமது துணைப் பிரதமராக இருந்த மூசா ஹீத்தாமை அவ்வளவு சுலபத்தில் நாம் மறந்துவிட முடியாது.
அந்த காலக்கட்டத்தில் மூசா ஹீத்தாம் மிகுந்த ஆற்றல் மிக்க ஒரு தலைவராக விளங்கினார். அந்த காரணத்தினாலோ என்னவோ, அப்போதைய பிரதமர் மகாதீர் அவரை ஒரு மிரட்டலாகக் கருதினார்.
நிறைய விஷயங்களில் அவ்விருவருக்குமிடையில் முரண்பாடுகள் இருந்தன. குறிப்பாக பினேங் பால நிர்மாணிப்பு மற்றும் புரோட்டோன் கார் தயாரிப்பு ஆகிய இரு விவகாரங்களில் மகாதீரின் தன்னிச்சையானப் போக்கை ஏற்றுக் கொள்ள இயலாத அவர் தனது துணைப் பிரதமர் பதவியைத் துறந்தார்.
மகாதீருக்குப் பிறகு நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்த 5 பேர்களில் எவருக்குமே மூசாவின் ஆற்றலுக்கு ஈடான திறன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதே போலத்தான் ம.இ.கா.வின் முன்னாள் துணைத் தலைவர் சுப்ரமணியம் சின்னையாவின் நிலையும். கட்சியின் அப்போதையத் தலைவர் சாமிவேலு அவரை ஒரு மிரட்டலாகவே பார்த்தார்.
உயர் கல்வி பெற்றவரான சுப்ரமணியம் அதிக ஆர்ப்பாட்டமின்றி கட்சியை வழிநடத்தக் கூடிய திறமைப் பெற்றவர். ஆனால் ஒருபோதும் அவர் ம.இ.கா.வின் தலைவராகவோ முழு அமைச்சராகவோ ஆகிவிடக் கூடாது என்பதில் சாமிவேலு தீவிர முனைப்புக் காட்டி அதில் வெற்றியும் கண்டார்..
சேவைத் திறனுக்கு பெயர் பெற்றிருந்த போதிலும் அநியாயமாக வஞ்சிக்கப்பட்ட மற்றொரு அரசியல்வாதி ம.இ.கா.வின் தற்போதைய உதவித் தலைவர்களில் ஒருவரான முருகையா.
கடந்த 2000ஆம் ஆண்டுளில் மக்கள் முற்போக்கு(பி.பி.பி.) கட்சியின் இளைஞர் பகுதித் தலைவராக இருந்த அவர் 2008ஆம் ஆண்டில் படாவி அரசாங்கத்தில் பிரதமர் துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பொதுமக்களின் புகார்களைக் கவனிப்பதற்கு பொறுப்பேற்றிருந்த முருகையா, படாவியே வியக்கும் அளவுக்கு களப்பணியாற்றி மக்களின் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கலைந்தார்.
அதற்கு அடுத்த ஆண்டு உள்பூசலுக்கு பலியாகி கட்சியிலிருந்தே அவர் நீக்கப்பட்ட போதிலும், படாவியின் செல்வாக்கில் 2013ஆம் ஆண்டு வரையில் திறம்பட சேவையாற்றினார்.
பேராக், சுங்ஙை சிப்புட் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கல் ஜெயக்குமாரை இத்தருணத்தில் நாம் நினைவுக் கூறத்தான் வேண்டும்.
பி.எஸ்.எம். கட்சியின் தற்போதையத் தலைவரான அவர், சுங்ஙை சிப்புட் வட்டாரத்தில் நன்கு புகழ் பெற்ற மிகச் சிறந்த சேவையாளர். சாமானியத் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்நேரத்திலும் களமிறங்கி குரல் கொடுக்கக் கூடியவர்.
தமது கட்சிக்கு ஆதரவு வழங்குமாறு பலமிக்கக் கட்சியான பி.கே.ஆர்.ஐ அவர் கேட்டுக் கொண்ட போதிலும், பிரதமர் அன்வார் அவ்வாறு செய்யாமல் தனது வேட்பாளர் கேசவனை அங்கு போட்டியிடச் செய்தார்.
கேசவனோடு ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் மைக்கல் ஜெயக்குமார் அதீத ஆற்றல்மிக்க ஒரு சேவையாளர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அதிகாரத்தால் வஞ்சிக்கப்பட்ட மற்றொரு அரசியல்வாதி சிலாங்கூர், கிளேங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் சந்தியாகோ.
கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து 3 தவணைகளுக்கு அத்தொகுதியில் அப்பழுக்கற்ற சேவையாற்றிய அவர் ஒரு பொருளாதார நிபுணராவார். அமைச்சரவையில் இடம்பெறத் தகுதியானவர்.
இருந்த போதிலும் அவருடையத் திறமையை அங்கீகரிக்கத் தவறிய சில ஜ.செ.க. தலைவர்கள் அவருடைய முன்னேற்றத்திற்கு தடைக்கல் போட்டனர்.
சிலாங்கூர், பாண்டான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.
அன்வார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்துவதில் அவர் பெரும் பங்காற்றினார். நாடு தழுவிய நிலையில் சூறாவளி பயணம் செய்து கட்சிக்கு ஆதரவுத் திரட்டினார்.
தெள்ளத் தெளிவாக ஆய்வுகள் செய்வதில் வள்ளவரான ரஃபிஸி,
முன்னாள் பிரதமர் நஜியின் ஊழல் குற்றங்களை அக்கக்காக அம்பலப்படுத்தியதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
இருந்த போதிலும் கடந்த ஆண்டில் நடந்து முடிந்த கட்சித் தேர்தலில் என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும். திட்டமிட்டு அவர் தூக்கி ஏறியப்பட்டது யாருக்குத்தான் தெரியாது!
ஆக திறமைசாலிகள் ஓரங்கட்டப்படுவதும் வஞ்சிக்கப்படுவதும் ‘அரசியல் யதார்த்தம்’ என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ‘அரசியல் ஒரு சாக்கடை’ என்று கூறப்படுவதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்குமோ!

























