பத்துமலை படிக்கட்டுகள் சீர்திருத்தப்பட வேண்டும்

இராகவன் கருப்பையா – அண்மைய வாரங்களாக பத்துமலை திருத்தளத்தில் ‘எஸ்கலேட்டர்'(Escalator) எனப்படும் ‘மின் படிக்கட்டுகள்’ நிர்மாணிக்கப்படுவது தொடர்பான சர்ச்சைகள் பலரின்  கவனத்தையும் ஈர்த்தது.

சர்ச்சைகள் தற்போது ஓய்ந்துள்ள போதிலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம எப்போது அதற்கு அனுமதி வழங்கும், அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது.

பத்துமலையில் மின் படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டியது அவசியம்தான் எனும் போதிலும் அதைவிட முக்கியமான, பாதுகாப்புத் தொடர்பான ஒன்றை கோயில் தேவஸ்தானம் அவசரமாக கவனிக்க வேண்டியுள்ளது.

அதாவது தற்போது அங்குள்ள அதன் அசல் படிகட்டுகள் உண்மையிலேயே பாதுகாப்பாகத்தான் உள்ளனவா என்றால் ‘இல்லை,’ என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த 1930ஆம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்ட அந்த படிக்கட்டுகள் ஏறத்தாழ 90 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.

அவை உறுதியாக உள்ளனவா என்பது ஒருபுறமிருக்க, பொது மக்களின் பயனீட்டுக்கு, குறிப்பாக தைப்பூசத் திருவிழாக்களின் போது பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.

அந்தப் படிகள் இயல்பாவே சற்று சிறியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. சிறு பிள்ளைகளுடைய கால்களின் அளவுக்குதான் அவை பொருந்தும்.

இன்னும் சுமார் 4 ஆண்டுகளில் ஒரு நூற்றாண்டைக் கடக்கவிருக்கும் அந்தப் படிகளில் ஏறுவது அவ்வளவாக சிரமம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் இறங்கும் போது அடுத்தடுத்தப் படிகளில் நமது கால்களை பக்கவாட்டில் சற்று வளைத்து மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் இறங்க வேண்டியுள்ளது.

அதிகமானக் கூட்ட நெரிசலின் போது ஒருவர் தடுமாறி விழுந்தாலும் ஏற்படக்கூடிய சங்கிலித் தொடர் விளைவுகளை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இந்திய தலைநகர் புதுடில்லியில் உள்ள குதுப்மினார் கோபுரத்தில் கடந்த 1981ஆம் ஆண்டும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்திலும் நிகழ்ந்த பேரிடர்களில் எண்ணற்ற அப்பாவிகள் மிதிபட்டு மரணமடைந்த சோகமானச் சம்பவங்களை நாம் இங்கு நினைவுக்கூரத்தான் வேண்டும்.

ஆக, மின் படிகட்டுகளை நிர்மாணித்து பத்துமலையை நவீன மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக, அதன் தற்போதைய அசல் படிக்கட்டுகளை சீர்திருத்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கோயில் நிர்வாகம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

கீழே சுமார் 40 அல்லது 50 மீட்டர்களுக்கு நீட்டித்து, தற்போது இருக்கும் 272 படிகளை 350 அல்லது 400 படிகளாக அதிகரித்தால் அதன் செங்குத்தான நிலை சீரடையும்.

தைப்பூசத் திருவிழாக்களின் போது மேலே கோயிலுக்குச் சென்று திரும்பும் இலட்சக் கணக்கான பக்தர்களும் சுற்றுப் பயணிகளும் பயமின்றி பாதுகாப்பாக கீழே இறங்க இது வகை செய்யும்.

பினேங் மாநிலத்தில் உள்ள தண்ணீர் மலைக் கோயிலின் படிக்கட்டுகளை இப்படிதான் அதன் நிர்வாகத்தினர் பாதுகாப்பாக நிர்மாணம் செய்துள்ளார்கள்.