தொன்மை மிக்க நம் பாரம்பரியத்தின், கலை, கலாச்சாரம், சம்பிரதாயங்கள், பண்டிகைகள் ஆகியவற்றின் உட்கூறுகளையும் தாத்பரியங்களையும் நாம் இன்று உணராமல் வெறும் வேடிக்கை கேளிக்கையாக்கி கொண்டிருக்கிறோம்.
உலக பிரசித்திப் பெற்ற பத்துமலை தைபூச திருவிழாவிற்கு பிரதமர் நஜிப் வரவழைக்கப்பட்டார். அந்த சமய விழாவில் ஹிந்துக்களுக்கும் மலேசிய இந்தியர்களுக்கும் அவர் விடுத்த தகவல் அம்னோ மீதும், பாரிசான் கூட்டணியின் மீதும் “நம்பிக்கை” வையுங்கள், நீங்கள் அவ்வாறு செய்தால்தான் எங்களால் உங்களுக்கு ஏதாவது செய்யமுடியும் என்பதாகும்.
ஒரு சமய நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக வருகை புரிந்திருக்கும் நாட்டின் பிரதமர் தம்முடைய அரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அவ்வாறு அவர் நடந்து கொள்ள இடமளித்தது சீனர்களோ, மலாய்காரர்களோ, ஈபான், கடாசான் இனத்தவர்களோ கிடையாது மாறாக நாம்தான், இந்தியர்கள்தான் அதற்கு இடம் அளித்தோம். நான் இந்தியர்கள் என்று சொல்லும்போது அரசியல் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு ஒருமித்த இந்தியரை சொல்கிறேன்.
இதே போன்று மற்றொரு இஸ்லாமிய, கிறிஸ்துவ அல்லது பெளத்த சமய வைபவத்தில் பிரதமர் இவ்வாறு செய்யத் துணிவாரா? அல்லது அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் அனுமதிப்பார்களா?
ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகைகளின் போதும், ஏன் ஒவ்வொரு வெள்ளிகிழமை தொழுகைக்கும் ஏதாவது ஒரு பள்ளிவாசலுக்கு இதே பிரதமர் செல்லத்தான் செய்கிறார். அங்கு ஏதாவது ஒரு சந்தர்பத்தில் இவர் இப்படி அரசியல் பேசி இருப்பாரா? அல்லது இவருக்கு தூக்கமுடியாத அளவுக்கு இராட்சச மாலை மாரியாதைதான் செய்திருப்பார்களா?
இறைவன் சன்னதியில் அனைவரும் சம நிகர் என்பதை அவர்கள் அப்பழுக்கில்லாமல் அனுசரிக்கிறார்கள். அதே போதனைகளைக் கொண்ட நம் சமய வழிபாட்டு தளங்களில் மட்டும் அந்த வரம்பு மீறப்படுவது ஏன்? அதற்க்கு இடம் கொடுத்தவர்கள் யார்? நம்மை நாமே குறை சொல்லவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?
ஏதோ காரியம் ஆக வேண்டும் என்பதற்காக மானமிழந்து, ஈனம் இழந்து, முதுகு கூனி, பல்லிளித்து, தன்மானத்தை உதறி நம் சமய, சமுதாய போதைனைகள் காற்றில் பறக்கவிடுவதற்கு எந்த கொம்பனுக்கும் அதிகாரமில்லை.
“நாமர்கோம் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்றும், “கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” என்றும் நாம் இறைவனை தவிர்த்து யாரிடமும் தலைவணங்குதல் ஆகாது என்று நம் பூட்டன் மார்கள் திடமாய் காத்த சமய நிகழ்ச்சியிலா இந்த கொடுமைகளை கண்டு நாம் சகித்து கொண்டிருக்கிறோம்?
நம்மிடமுள்ள அரசியல் உட்பட அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எறிந்துவிட்டு நடுநிலையாய் நின்று யோசித்து பார்க்க வேண்டிய தருணம் இது.
பணத்தையும் புகழையும் பதவிகளையும் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. அவற்றையெல்லாம் விடுத்தது நம் சமய வைபவங்களை அவற்றின் மாட்சியை, புனிதத்தை தனித்துவத்தை ஒரு சில தரப்பினரின் சுய தேவைக்காகத் தாரை வார்த்து கொடுப்பதை தயவுசெய்து நிறுத்திகொள்ளுங்கள்.
தைபூச வடு ஆறுவதற்குள் மேலுமொரு வைபவத்தை வைத்து அரசியல் நாடகமாட தாயராகி கொண்டிருக்கிறார் பிரதமர் நஜிப். இம்முறை காப்பாரில் பொங்கல் வைக்க போகிறாராம்.
என்ன அநியாயம் இது, தை மாதம் முதல் நாள் மகர சிகராந்தியை முன்னிட்டு கதிரவன் தன்னுடைய பயணத்தை வடக்கு வீதியில் பயணிக்க துவங்கும் முதல் நாளை, உழவர் பெருமக்களெல்லாம் தம் உழைப்பின் முதல் பலனை சூரியனுக்குச் சமர்ப்பித்துக் கொண்டாடும் பொங்கல் திருவிழாவை மாசி மாதம் 14-ஆம் தேதி ராகு காலத்தில் பிரதமர் பொங்கல் வைத்துக் கொண்டாடப் போகிறாராம்.
நம்மை இதைவிட எப்படி சிறுமைப் படுத்த முடியும்? அக்கறை உள்ளவராக இருந்திருந்தால் அதனை தை முதல் தேதியில் அல்லவா செய்திருக்க வேண்டும்? இப்படி மாதம் ஒன்று கழிந்து கொண்டாடுவதின் நோக்கம் அரசியல் கபட நாடகமன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? நம்மை இப்படி அவர் சிறுமைப் படுத்தக் காரணம் மீண்டும் சீனர்களோ, மலாய்காரர்களோ, ஈபான், கடாசான் காரர்களோ அல்ல, நம் இந்தியர்கள்தாம் !!!
பிரதமர் இந்தியர்களைத் தாராளமாகக் கூட்டட்டும் பொங்கல் வைப்பதற்கு அல்ல மாறாக
மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் முடிவான தீர்வு தர போகிறேன் எனவோ; சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு இனி வஞ்சிக்கபடாமல் மேற்கல்வி தொடரும் வாய்ப்பினை அறிவிக்கிறேன் அனைவரும் வாரீர் என்றோ; அரசாங்க அணைத்து துறை மற்றும் நிலைகளிலும் இந்தியர்களின் விழுக்காட்டை உயர்த்தும் திட்டம் அறிவிப்பு என்றோ; பிறப்பு பத்திரம், அடையாள அட்டை இல்லாதவர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அங்கே குவித்து போர்க்கால அடிப்படையில் வேலைகள் துரிதப்படுத்தபடும் என்றோ; வறுமையில் உழலும் ஏழை இந்தியர்களுக்கு அரசு பணத்தை ஒதுக்கி அமனா சஹாம் இந்தியா அறிவிக்கப்படும் என்றோ; ஆடு மாடு வளர்க விரும்பும் இந்தியர்களுக்கு சிறப்பு திட்டம் என்றோ; felda , felcra , yayasan orang india போன்ற நிலத் திட்டங்களை அறிவிக்கப் போகிறேன் என்றோ; இந்திய இளம் வணிகர்களை உருவாக்கும் அற்புதத் திட்டம் அறிவிப்பு என்றோ பிரதமர் இந்தியர்களை ஒன்று திரட்டுகிறார் என்றால் அதில் அர்த்தம் உள்ளது நாம் ஆதரிப்போம்.
அதை விடுத்து “நான் பொங்கல் வைக்க வேண்டுமென்றால், நீங்கள் ‘நம்பிக்கை’ வைக்க வேண்டும்” என்று அப்பாவி ஏழை இந்தியனை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் வக்கிர செயலை கண்டு கொண்டு நாம் வாயடைத்து நிற்கத்தான் போகிறோமா?
எத்தனை காலம்தான் நாம் இப்படி வெற்று வாக்குறுதிகளுக்கு ஏமாளிகளாக போகிறோம்? சுயமானத்தை இழந்து ஒரு சாராரின் அரசியல் நோக்கத்திற்கு நாம் பலியாக வேண்டாம்!
சகோதர்களே, இயக்க தலைவர்களே, அரசியல்வாதிகளே நீங்கள் பிரதிநிதிப்பதாக கூறிகொள்ளும் இந்தியர்களை இந்த பொங்கல் விழாவிற்கு செல்ல வேண்டாம் என திசை எங்கும் பிரச்சாரம் செய்யுங்கள். அறிக்கைகள் மூலம், மின்னஞ்சல்கள் மூலம், குறுஞ்செய்திகள் மூலம் இந்தியர்களை இந்நிகழ்வினைப் புறக்கணிக்க சொல்லுங்கள். 54 ஆண்டுகள் ஏமார்ந்தது போதும் விழித்தெழுவோம், நமது மறுக்கப்பட்ட உரிமையைத் தெளிவாக உணர்ந்து அவற்றை மீட்டெடுப்போம் வாரீர்.
இளைய தலைமுறையினரிடம் நம் மேன்மையை விவரிக்க தவறிக்கொண்டிருகிறோம். இதன் விளைவு நாம் வெட்கி தலைகுனியும் அவலத்திற்கு இட்டுச் செல்லப்போவது உறுதி.
இந்தியர்களியே, நெஞ்சில் உறமும், நேர்மை திறனும் கொள்ளத்தவறிய பாதாக செயலை நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் செய்ய தவறி விட்டோம் என்று நம் சந்ததியினர் நம்மை பார்த்து காரி உமிழாதிருக்க வகை செய்வோம்.
– வி. சம்புலிங்கம்
ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர்