தமிழர்களுக்கு நீதி கேட்டு கொண்டுவரப்படும் ஐக்கிய நாட்டுசபை தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும் என ஜெனிவாவில் உள்ள மலேசிய பிரதிநிதிகள் கோடிகாட்டியுள்ளனர்.
அடுத்த வாரம் முதல் துவங்கும் ஐநா மனித உரிமைகள் சபைக் கூட்டம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை (Panel of Experts’ Report) உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, மலேசியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் இலங்கைக்கு ஆதரவாக இருந்ததோ, அதே ஆதரவை இப்போதும் கொடுக்க திட்டமிடுகிறது. இப்படி மலேசியா செய்வது, மனித உரிமையை அவமதிக்க துணைபோவதோடு அப்பாவித் தமிழர்களை கொன்ற கொலைகாரனுக்கும் உடந்தையாவதாகும் என எச்சரிக்கிறார் சுவாரம் மனித உரிமைக் கழகத் தலைவர் கா.ஆறுமுகம்.
முஸ்லீம்களை இஸ்ரேல் கொல்லும் போதும், தென் தாய்லாந்திலும், போஸ்னியாவிலும் முஸ்லீம்கள் பாதிப்படைந்தபோது மலேசியர்களாக நாம் அனைவருமே வெகுண்டோம். ஆனால், தமிழர் உரிமையில் மலேசியா கொண்டுள்ள போக்கு கண்டனத்திக்குறியது. மலேசியா தனது போக்கை மாற்றா விட்டால், அதற்கு பொறுப்பு ஏற்கும் நமது பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களை மலேசிய தமிழர்கள் தமிழ் இனத்தின் துரோகியாவே பார்க்க நேரிடும் என்ற வழக்கறிஞருமான ஆறுமுகம், “பிரதமர் நேரிடையாக இந்த விவகாரத்தை கையாள வேண்டும், அவருக்கு உண்மை நிலையை உணர்த்த மீண்டும் தகவல்களை அனுப்புவோம்” என்றார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் அந்த ஐக்கிய நாடுகள் குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இது பற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
ஐ.நா. சபையின் மனித உரிமை கழகத்தின் உறுப்பு நாடாக மலேசியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் பெரும்பான்மையாக கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபக்சே மீது அனைத்துலக விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். மலேசியா அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் இலங்கைக்கு ஆதரவாகவே மலேசியா இருந்து வருகிறது.
கட்சி அரசியல் சார்பற்ற வகையில் மலேசியத் தமிழர்கள் ஒருங்கிணைந்து, மனித உரிமையை நிலைநாட்ட, இலங்கை மீதான தீர்மானத்தை மலேசியா ஆதரிக்க வேண்டும் என கோரி பிரதமரை வற்புறுத்த வேண்டும்.