யாருக்காக, லினாஸ் யாருக்காக? மலேசியா கதிர் இயக்க குப்பை மேடா?

நேற்று காலையில் குவந்தான் திடலில் சுமார் ஆயிரம் காவல்துறையினர் முன்பு கூடிய 15,000 மலேசிய மக்கள், லினாஸ் என்ற கதிரியக்க சுத்தரிப்பு நிலையத்தை 24 மணிநேரத்திற்குள் பிரதமர் மூட அறிவிக்காவிட்டால் இதுபோன்ற மறியல்கள் தொடரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

லினாஸ் நிறுவனம் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது. அந்த நிறுவனமானது குவந்தான் அருகில் இருக்கும் கெபெங்கில் என்ற இடத்தில் ஒரு சுத்திகரிப்பு தொழிற்சாலையை ரிம 70 கோடி செலவில் கட்டி வருகிறது.

இந்த சுத்திகரிப்பு தொழிற்சாலை ஒர் ஆண்டில் 10,500 மெட்ரிக் டன் எடையுள்ள கதிரியக்கம் கொண்ட அர்ய மண்னை சுத்திகரிப்பு செய்யும் பொருட்கள் இந்த தொழிற்சாலையில் சுத்திகரிக்கப்படும். இதன் முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த சுத்திகரிப்பு என்பது அனுக்கதிர் சார்புடையதாக உள்ளது. அனுக்கதிர் சார்புடைய இந்த சுத்தகரிப்பின் வழி வெளியாகும் கழிவுப் பொருட்களின் அனுக்கதிர்கள் ஒட்டுமொத்தமாக அகற்றப்படவேண்டுமென்றால் அதற்கான காலங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக, இதில் சுத்திகரிப்பு செய்யப்படும் லந்தானும் (Lanthanum) என்னும் அரிய மண்ணின் அரை ஆயுள் (half life) காலம் 10.2 கோடி ஆண்டுகள் ஆகும். அதாவது, அதன் கதிரியக்க வலுவில் பாதி கதிரியக்க தன்மையை இழக்க 10.2 ஆண்டுகள் ஆகும்.

ஆகவே, இந்த சுத்திகரிப்பின் வழி வெளியாக்கப்படும் கழிவுப் பொருட்கள் மலேசிய நாட்டிலேயே புதைக்கப்படுமானால் அவை தொடர்ச்சியான கதிரியக்கங்களை உண்டாக்கி மலேசியாவில் வாழும் மக்களுக்கும், எதிர் கால மக்களுக்கும்  இன்னல்களை அளிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேலும், ஆஸ்ரேலியா என்பது ஒரு பெரிய நாடு. அந்நாட்டில் இச்சுத்திகரிப்பை செய்ய இயலும் என்பது யாவரும் அறிந்ததே. அது அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் மலேசியா என்ற சிறிய நாட்டில் ஏன் அவர்கள் அந்த சுத்திகரிப்பை கொண்டு வந்து தள்ளவேண்டும் என்பது ஒரு கேள்வியாக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

நேற்று குவந்தானில் கூடிய 15,000 மேற்பட்ட மக்களின் முன்னிலையில் பேசியவர்கள் இதுபோன்ற கருத்துகளை தொடர்ந்து முன்வைத்தனர்.

ஆரவாரமாக ஏற்பட்ட இந்நிகழ்ச்சியில் பல்லிண மக்கள் கலந்துகொண்டு தங்களின் முடிவு ஒன்றாகதான் இருக்கவேண்டும் என்பதால் ‘லினாஸ் ஒழிய வேண்டும்’, ‘லினாஸ் தேவையில்லை’ ‘இந்த நாட்டுக்கு உகந்தவகையிலேயே இயற்கைக்கு உட்பட்ட மேம்பாடுகளையே இந்நாடு கொண்டிருக்கவேண்டும்’ என்று ஏகமானதாக ஏற்றுக்கொண்டனர்.

இப்பேரணியில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், இந்த நாட்டுக்கு இது தேவையற்ற முதலீடு என்றும் இந்த முதலீட்டுக்கு அடிப்படை காரணங்கள் அது சார்புடையதாக உருவாக்கப்பட்டிருக்கும் லஞ்சமே ஆகும் என்று பகிரங்கமாக நடப்பு அரசாங்கத்தை குற்றஞ்சாட்டினார்.

மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்த இப்பேரணி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அருட்செல்வன், லினாஸ் என்ற நிறுவனத்தின் இந்த சுத்திகரிப்பு திட்டம் மலேசியாவில் நடைபெறுமானால் மலேசியா என்ற ஒரு நாடு அனுக்கதிர்களை உண்டாக்கக் கூடிய குப்பைகளை இறக்குமதி செய்து இந்த நாட்டு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட கொள்கையாக மாறிவிட்டது என்று வெளிப்படையாகவே தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

லினாஸ் எதிர்ப்பு சுலோகங்களுடன் பச்சை நிற சட்டையணிந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்திய பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், பச்சை நிறத்துடன் பெர்சேயின் மஞ்சள் நிறமும் இணைந்துள்ளதாக கோடிகாட்டினார். லினாஸ் திட்டம் மலேசியாவிற்கு உகந்ததல்ல என்றும் அதை பெர்சே ஏற்றுக்கொள்ளாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.

அதைத்தொடர்ந்து உரையாற்றிய மலேசிய சீனர் அமைப்புகளின் தலைவரான தான் யு சிங், லினாஸ் நிறுவனத்திற்கு சீன அமைப்புகள் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிப்பதாகவும் லினாஸ் என்பது நமக்கு தேவையற்ற திட்டமாகும் என்று சாடினார்.

இப்பேரணியில் கலந்துகொண்டிருந்த சுவாராம் மனித உரிமைக் கழகத் தலைவர் கா. ஆறுமுகம், மலேசியா ஒரு வளரும் நாடகவே இருந்து வருகிறது. மலேசியாவில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் மலேசியர்கள் தங்களது சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் தாங்களாகவே தூய்மைக்கேடு அற்ற வகையில் நாட்டை வளமாக்க முடியும் என்ற நிலைத்தன்மை அற்ற நிலையில் வாழ்ந்துகொண்வருகிறார்கள்.

நம்மிடையே இருக்கும் தூய்மைக்கேட்டையே உருப்படியாக நிறுவகிக்கமுடியாத சூழ்நிலையில் நம்மால் எப்படி கதிரியக்கம் கொண்ட லினாஸ் போன்ற தொழிற்சாலைகளின் வழி வெளிவரும் கழிவுப் பொருட்களை நிர்மாணிக்க இயலும் என்று கேள்வியெழுப்பினார். இவை ஒரு இலாபகரமான வணிகமாக என்று மலேசியா ஈடுபடுமானால் அது மிகவும் ஆபத்தான முதலீடாக அமையும் என்று அவர் எச்சரித்தார்.

மலேசியாவின் பொருளாதார சூழ்நிலைகளை உயர்த்த பலவழிகள் இருந்தும் ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து லினாஸ் என்ற நிறுவனத்தின் மூலம் கதியரியக்கம் கொண்ட அரிய மண் பொருட்களை இறக்குமதி செய்து அதை சுத்திகரிப்பதன் வழி உருவாகும் கதிரியக்க கழிவுகளை நம் நாட்டிலேயே வைத்திருப்பது எதிர்காலத்திற்கு ஏற்றமுடைய செயல் அல்ல அது முட்டாள்தனமானது என்று மேலும் கூறினார்.

TAGS: