கடந்த 14.02.2012-ல் 100 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம் போலவே பிரதமருக்கு பாராட்டுகள் பலரிடமிருந்ந்து பலவிதத்தில். இந்திய சமுதாயத்திற்கு குடியுரிமைக் கிடைக்க நான் / நாங்கள் தான் காரணம் என்று இப்பொழுதே பத்திரிக்கைகளில் தனி துதிபாடும் அறிக்கைகள்போல் கூடிய விரைவில் அரை அல்லது முழுப் பக்கத்துடன் பல்லைக் காட்டிக் கொண்டு பிரதமருக்கு ஆளுயர மாலை அணிவிக்கும் படத்துடன் தமிழ் செய்தித் தாட்களில் விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
புதிதாகக் குடியுரிமைப் பெற்றவர்கள், இங்கே புதியதாகக் குடியேரியவர்கள் அல்ல. இங்கேயேப் பிறந்து வளர்ந்தவர்கள். (வெகு சிலரே இந்தியாவிலுருந்து வந்தவர்கள்) 40 வருடப் போராட்டங்கள். பிறப்புப் பத்திரம் இல்லாத ஒரே (முக்கிய) காரணத்திற்காக குடியுரிமை வழங்க மறுக்கப்பட்டவர்கள்
எந்தவொரு அடையாளப் பத்திரமும் இல்லாத இந்தியர்கள் ஏறக்குறைய 40,000 பேர்களுக்கு மேல் என்றும் இதில் மைடப்தாரில் பதிந்துக் கொண்டவர்கள் 15,000 பேர்கள் என்றும், அரசின் பரிசீலனைக்கு உட்பட்டவர்கள் 9,600 பேர்கள் என்றும், 5,600 பேர்கள் அங்கரீக்கப்பட்டு விட்டனர் என்றும், வழக்கமான நம்மவர்கள் துதிப்பாடும் நிகழ்வில் நமது பிரதமர், இப்பொழுதைக்கு 100 பேர்களுக்கு மட்டுமே தகுதி சான்றிதழை கடந்த 14.1.2012-ல் வழங்கியுள்ளார். மீதியுள்ள 5,500 பேர்களுக்கு வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னால் வழங்கப்பட்டாலும் படலாம் அல்லது தேர்தல் முடிவைப் பொறுத்து வழங்கப் படாமலேயேப் போகலாம். இப்பொழுதைக்கு இந்தியர்களின் கடிவாளம் பிரதமரின் கையில். ம.இ.கா அதற்கு உறுதுணை..
அதாவது ஆட்டம் கண்டிருக்கும் தேசிய முன்னனியின் வெற்றி வாய்ப்பைப் புதுப்பித்துக் கொள்ள, ஆளும் கட்சிக்கான சிறப்பு ஆலோசகர்களால் (பிரதமருக்கும் தனிப்பட்ட ஆலோசகர்கள் உண்டு) முன்மொழியப்பட்ட பட்டியல்களில் தகுதி சான்றிதழ்களும் (பிறப்புப் பத்திரம் / குடியுரிமை / நீல நிற அடையாள அட்டை) ஒன்று. பரிட்சார்ந்த முறையில் முதலில் கொஞ்சம் பேருக்குத் தகுதி சான்றிதழை வழங்கி, மீதமுள்ளவர்களின் நெஞ்சினில் ஆசையை வளர்த்து, ஆதரவான ஓட்டுப் போட்டால் மட்டுமே மீதச் சான்றிதழ்களை வழங்க முடியும் என்ற மறைமுக எச்சரிக்கையும் வைக்க முடியும்.
இதன் மூலம் வெற்றிப் பெற்றால், இந்தியர்களின் பிச்சைகாரத்தனத்தை தங்களுக்கு சாதகமாக்கியும், தோல்விக் கண்டால் தோற்றதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்க, வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரேக் காரணமாக தகுதித் சான்றிதழ்கள் கொடுக்கப்படாமலேயே வரும் சூழ்நிலையும் உண்டு. அதுவும் இண்டர்லோக் மாதிரி சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத நிலை ஆகிவிடுமா என்று, அரசாங்கத்தின் நடைமுறை கொள்கைகளில் எனக்கு சந்தேகம் உண்டு.
இந்நாட்டில் வரையருக்கப்பட்டுள்ள சட்டம் தனி நபரின் செல்வாக்கால் மீறப்படும் போது, வாய் மொழி வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டியக் கட்டாயம் இல்லையே!
முன்னால் பிரதமர் துன் ரசாக் காலத்திலிருந்தே நமக்கு இந்த தகுதிச் சான்றிதழ் பிரச்சனை உண்டு. தங்களை வெற்றிக் கொள்ள யாரும் இல்லை என்ற இறுமாப்பு அந்த முன்னால் பிரதமர்களுக்கும், இந்தியர்களுக்கு நம்மை விட்டால் வேறு யாரும் இல்லை என்று ம.இ.காவுக்குத் தலைக் கணமும் இருந்ததால் இந்த 40,000 பேர்களின் விண்ணப்பங்கள் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் செய்தத் தவறுதான் என்ன? இவர்களின் பெற்றோரின் பொறுப்பற்றத் தனத்தால் பிறப்புப் பத்திரம் எடுக்காமல் விட்ட அலட்சியம் மட்டுமே.. வேறு எந்தக் காரணமும் இல்லை.
இப்பொழுதைக்குத் தகுதிச் சான்றிதழ் கிடைப்பதற்கு எந்த ஒரு புது தகுதியையும் இவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக இருக்கும் அதேக் காரணம் தான் இன்றும் அவர்களுக்கு உண்டு. பிரதமர் நஜீப்புக்கு (கவனிக்க நடப்பு அரசாங்கம் அல்ல) ஏன் இந்தியர்களின் மேல் திடீரென்று இந்தப் பாசம்?
சென்றத் தேர்தலுக்கு முன்னரே சிலாங்கூர் மாநிலத்தின் முன்னால் முதல் அமைச்சர் கீர் தோயோ அவர்கள் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது போல் கிள்ளான் டேவான் ஹம்சா மண்டபத்தில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வின் ஏறக்குறைய 4,000 பேர்கள் பதிவு செய்தனர்; இது மட்டுமின்றி நாட்டில் சில இடங்களிலும் இதேப் போன்ற நிகழ்வுகள் நடந்தேறியது. இந்த விடயத்தில் ம.இ.கா செய்தக் கூத்துக் கொஞ்சமல்ல. பதிவுகள் வெறும் கதையாகிப் போனதுதான் மிச்சம்.
வரலாறுக் காணாதத் தோல்வி ம.இ.கா வின் தலமைத்துவத் திமிரை அடக்கியது, தேசியக் கூட்டணின் அகம்பாவத்தை ஆட்டம் காண வைத்தது. அதன் தொடர்ச்சியாக சில இடைத்தேர்தல்களில் தோல்விகளைத் தழுவியது.. அன்வார் நின்ற இடத்தில் ஆளும் கூட்டணி வரலாறுக் காணாத அளவுக்குப் போட்டியைத் தவிர்த்தது இந்தத் தோல்வி வரும் பொதுத் தேர்தலிலும் தொடரும் என்று உறுதியாக நம்பப்படுவதால், இழந்தப் பலத்தை மீண்டும் பெற நாய் சாப் கின்னஸ் ஸ்டவுட் உங்களுக்கு நல்லது என்ற விளம்பரத்தைப் போல, ஆளும் தேசியக் கூட்டனிக் கட்சியினர் மக்களுக்கு திடீரென்று வழங்கும் சலுகைகளை கின்னஸ் ஸ்டவுட்டாக நினைக்கின்றார்கள். வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் தகுதி இந்தியர்களின் ஓட்டுக்கு இன்னும் உண்டு என்று நம்புவதுதான் முக்கியக் காரணம்.
மலாய்க்காரர்களும், சீனர்களும் அரசியலில் மிகவும் தெளிவாக இருப்பதால், அரசியல்வாதிகள் நமது இளிச்சவாயத்தனத்தை நன்றாகவேப் புரிந்து வைத்துள்ளனர்.
பொதுவாகவே நம்மவர்கள் பிரச்சனைகளை உணர்ச்சிப் பூர்வமாகவே அனுகுவார்களேத் தவிர அறிவுப் பூர்வமாகச் செயல்பட மாட்டார்கள் என்பது சரித்திரம். இனத்தால் சாதிக்க முடியாததை மதத்தால் இந்தியர்களை ஒன்றுப் படுத்தி வெற்றிக் கண்டிருக்கின்றது ஹிண்ராப். தேசிய முன்னனி எதிர்க்கட்சியிடம் இந்தியர்களின் ஓட்டைப் பறி கொடுக்க முக்கியக் காரணமாக அமைந்தது. கிள்ளான் கம்போங் ஜாவாவில் உடைபட்ட இந்துக் கோயிலாகும்.
இந்நாட்டில் பல மொழிகளோடு வாழும் இந்தியர்களுக்கு தமிழை வாழவைக்க வேண்டும் என்றக் கட்டாயமோ, அவசியமோ அல்லதுத் தேவையோக் கிடையாது. மலாயையும், ஆங்கிலத்தையும் கட்டிக்காக்கும் நம்மவர்கள் தமிழை சுயநலத்திற்காகவேப் பயன் படுத்துகின்றனர். ஆனால் கோயிலுக்கு என்றால் கண்ணை மூடிக் கொண்டு வழங்குகிறார்கள்.
இதையே தான் ஆளும் கட்சியினர், இடைத் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் முன்பாகவே கோயிலுக்கு அள்ளியும், தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிள்ளியும் கொடுத்தார்கள், கொடுக்கின்றார்கள்
சோறு கண்ட இடமே சொர்க்கம் என்ற நமது சிந்தனை காலங்காலமாகவே நமது மர மண்டையில் ஊறிப்போன ஒன்று. சின்ன மீனைப் போட்டால் தான் பெரிய மீனைப் பிடிக்க முடியும் என்பதை எல்லாக் கட்சியினரும் நன்றாகவேத் தெரிந்து வைத்துள்ளனர்.
காலங்காலமாக ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை அசைக்க யாருக்கும் துணிவில்லை என்ற ஆணவத்தில், தங்களுக்கும் தங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும், தொடர்ந்தார்ப்போல் வருமானம் வருவதற்கு மிகப் பெரிய வலையைப் பின்னி வைத்திருப்பர். இந்த வலை இவர்களுக்குப் பொண்முட்டை இடும் வாத்தாகும். (உதாரணம் பிளஸ் நெடுஞ்சாலை).
இது போன்ற வருமானத்தின் பலனைத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால் அரசியலில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். அப்படித் தொடர்ந்து இருக்க மக்களின் ஆதரவு வேண்டும். ஆதரவு நிலைத்திருக்க மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்ய வேண்டும். திட்டங்கள் மக்கள் மனதைப் பிடிக்கத் தவறும் போது, கிடப்பில் இருக்கும் கோரிக்கைகளைத் தூசுத்தட்டி ஊறுகாய் போல நிறைவேற்றும் போது இழந்தப் பாலத்தை மீண்டும் பெறமுடியும் என்ற நம்பிக்கை. அதுதான் இப்பொழுது நம் நாட்டு அரங்குகளில் வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கும் தெருக் கூத்து.
சொந்த நாட்டிலிள்ளவர்களையே நாடோடிகளாக்கிவிட்டு, அவர்களும் இந்நாட்டின் குடி மக்களே என்று சமயத்திற்கேற்றால் போல நீலிக் கண்ணீர் வடிப்பதை என்னவென்று சொல்லுவது?
இந்தியர்களின் ஆதரவு இப்பொழுது ஆளும் கட்சிக்குத் திரும்பியிருக்கின்றது என்பது, கிடைத்துக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டுகளுக்காகவெயன்றி, தங்களின் உரிமைக்காக அல்ல. இந்த எலும்புத் துண்டுகள் கூட மக்கள் கூட்டணியின் அணுகு முறையால் வந்ததாகும் என்பதை மறுக்க இயலாது.
ஆளும் கூட்டணி அசைக்கமுடியாத நிலையில் இருந்தப் போதும், இப்பொழுது ஆட்டம் கண்டுக் கொண்டிருக்கும் இப்போதும் நம்முடையப் பிரச்சனைகளில் மாற்றம் இல்லை. மாறவேண்டியது. நாம். இல்லையேல் இருப்பதையும் பறிகொடுக்க வேண்டிவரும். இப்பொழுது, இந்தியர்களை சிறு பான்மையாக ஆக்குவதற்கு இனவாரியாகக் கணக்கெடுக்கும் வேலைத் திரை மறைவில் வேகமாக அரங்கேறி வருகின்றது.
நாம் நமது உரிமைகளைப் பெறுவதில் உறுதியாக இருக்கவேண்டுமே ஒழிய, சலுகைகளுக்காகக் கூழைக் கும்பிடுப் போட்டுக் கொண்டு எதிர்காலத்தைப் பணயம் வைக்கக் கூடாது
-கா. கலைமணி [email protected]