கூட்டம் கூடலாம்! வாக்குக் கிடைக்குமா?

ம.இ.கா நிகழ்ச்சிகளிலும், இடைத் தேர்தல் முடிவுகளின் போதும் கூட்டம் அதிகம்  உள்ளதால் இந்திய வாக்குகள் மீண்டும் பாரிசான் நேஷனல் பக்கம் திரும்பிவிட்டதாக ம.இ.கா தலைவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

மலேசிய அரசியல் தற்போது புள்ளிவிவர முடிவிலோ அம்னோவின் கட்டுப்பாட்டிலோ இல்லை. உணவு, பணம்,  பரிசுக் கூடை, போக்குவரவுக்கான செலவு போன்றவற்றை ம.இ.கா. நீட்டும் போது, கூட்டம் கூடாதா என்ன?

ஆனால், இதே ம.இ.கா.தான், இந்தியர்களின் உரிமைகள் நலிவடைந்து போக அம்னோவுக்கு ஆதரவாய் இருந்தது!

கடந்த 55 வருட காலப் பதிவேடுகளைப் புரட்டினால், இந்திய சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஏமாற்று சூழ்ச்சிகள், நம்பிக்கைத் துரோகம் நன்கு புலப்படும். நாடு முழுவதிலும் உள்ள இந்தியர்கள் ம.இ.கா.வை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர்களைப் பொறுத்த வரை ம.இ.கா. வின் தலைவர் பிரதமர்தான்! ஏழை இந்தியர்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுப்பதற்கு அவருக்கென்று தனிப்பட்ட செயலாளர் இருக்கின்றார். இந்திய வாக்குகளைக் கவர்வதற்காக ம.இ.கா என்பது ஒரு கண் துடைப்பு மட்டுமே!

உண்மையில்  இந்த ‘வாக்குகள் வாங்கும் வலையில்’ சிக்குபவர்கள் எதையும் சீர்தூக்கி பார்க்க இயலாமல் இருக்கும் பரம ஏழைகள் மட்டுமே! இந்தியர்கள் எப்போதும் ஏழைகளாகவே இருந்தால் அவர்களை எளிதில் ஆட்டுவித்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்பது பாரிசான் நேஷனலின் கனவு!

நாட்டின் செல்வங்களை அம்னோ அபகரித்துக் கொள்வதற்கு ஏதுவாக, புதிய பொருளாதாரக் கொள்கைக்கு ம.இ.கா. அன்று ஆதரவு தெரிவித்தது.1970-ல் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போது 17.4% இந்தியர்கள் அரசாங்க வேலையிலிருந்தனர். ஆனால் இப்பொழுது 4% மட்டுமே! இதில் மட்டுமா ம.இ.கா. சோடை போனது? இன ரீதியிலான உள்நாட்டுப் பல்கலைக்கழக இடங்களைப் பெருவாரியாக அம்னோ வரித்துக்கொள்ள, தீர்மானம் எடுக்கும் அரசு உயர் பதவிகளில் அம்னோக்காரர்களே அமர்ந்துகொள்ள, சட்டத் துறை சுதந்திரத்தை துன் மஹாதீர் ஆளுமை செய்ய, இலாபம் ஈட்டும் அரசாங்க நிறுவனங்களை தனியார்மயமாக்கி அவற்றின் வருமானத்தை அம்னோ பதுக்கிக்கொள்ள ம.இ.கா. உறுதுணையாய் இருந்துள்ளது. ஆகவே இந்தியர்களைப் பிரதிநிதிக்கக் கூடிய தன்மையை ம.இ.கா. இழந்துவிட்டது!

2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசிய இந்தியர்கள் விழித்துக் கொண்டனர். இத்தனை வருட காலமாக இந்தியர்களுக்கு நியாயப்படி சேர வேண்டிய எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இந்தியர்கள் மனதில் இப்போது மாற்றத்துக்கான எழுச்சி எழும்பிவிட்டது. எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும்படி ஆட்சி செய்யக் கூடிய ஒரு நேர்மையான அரசாங்கத்தையே எதிர்பார்க்கின்றனர். 55 ஆண்டுகளாக ஓரங்கட்டப் பட்டதும், ஏமாளியானதும் போதும். தங்கள் வருங்- கால சந்ததியைப் பாதுகாக்கக் கூடிய ஓரு சிறந்த அரசியல் முறைதான் இந்தியர்களுக்கு வேண்டும்.

போலீஸாரிடம் நிலவும் ஊழலானது இந்திய இளைஞர்களை வன்செயல், மற்றும் குண்டர் கும்பலிலிருந்து மீட்காது. ம.இ.கா. ஓர் அரசு சார்பற்ற நிறுவனம் போல்  பொங்கல், தீபாவளி நிகழ்வுகளையும், ஒரே மலேசிய விருந்துபசாரங்களையும்தான் நடத்திக்கொண்டிருக்கும்.

ஆகவே, டத்தோ பழனிவேல் அவர்களே! ஏழை இந்தியர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மலேசிய இந்தியர்களுக்கெனப் புதிதாக வரையறுக்கப்படும் 2 கட்சி முறையை ஆதரியுங்கள்! இந்தியர்கள் மாற்றத்துக்காகக் காத்திருக்கின்றனர். அதுவே அவர்களின் வளர்ச்சிக்கான ஒரே வழி!

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன்