கூரை சரிவு: தமிழ்ப்பள்ளியின் கதியைக் காட்டுகிறது!

– செனட்டர் எஸ்.இராமகிருஷ்ணன், மார்ச் 20, 2012.

700 மாணவர்களுடன் 50 ஆண்டுகால பழமைவாய்ந்த செர்டாங் தமிழ்ப்பள்ளி மலேசிய தலைமை நிர்வாக மையகமாக விளங்கும் புத்ரா ஜெயா அருகில் உள்ளது. 2002-ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறை பள்ளிக் கட்டிடத்தை சோதனையிட்டபோது, கூரை பழுதடைந்து துவாரங்கள் காணப்படுவதும், மின்சாரக் கம்பி இணைப்புகளில் கோளாறுகள் இருப்பதும் அறியப்பட்டன.

இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஒதுக்கீடு கோரி பள்ளி நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பல கடிதங்களை சிலாங்கூர் கல்வி இலாகாவிற்கும், கல்வி அமைச்சுக்கும் அனுப்பின. ஆனால் அவை நிராகரிக்கப்பட்டன. அரசாங்கம் வழக்கமாக கொடுக்கும் காரணம்தான் பதில் கடிதங்களக வந்தன! அதாவது ஒதுக்கீட்டுத் தொகை தீர்ந்துவிட்டது என்பதுதான்.

கடந்த மாதம் செர்டாங் தமிழ்ப்பள்ளியறை ஒன்றின் கூரை இடிந்தது. நல்ல வேளையாக அக்கூரை திடீரென சரிந்து விழுவதற்குள் மாணாக்கர்கள் அந்த அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கூரை சரிந்து விழுந்த பின்பும், கல்வி அமைச்சு அது குறித்து கரிசனம் காட்டவில்லை! கல்வி அமைச்சருக்காக ம.இ.கா. துணை அமைச்சர் வந்து நிற்கின்றார்!

அது மட்டுமா? தமிழ்ப்பள்ளி விவகாரங்களைக் கவனிக்க கல்வி அமைச்சில் ஒரு தனிப்பட்ட பிரிவோ துறையோ கிடையாது. தமிழ்ப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் எனும் பெயரில் கிட்டத்தட்ட ஒரு குமாஸ்தாவுக்கு ஈடான பதவியில் ஓர் அதிகாரி இருப்பார். அவ்வளவுதான்! மாபெரும் கல்வி அமைச்சில் அவ்வதிகாரி யின் குரல் எடுபடுவதில்லை. ம.இ.கா அம்னோவின் ஓடும்பிள்ளையாக உள்ளதே தவிர தட்டிக் கேட்கும் சட்டாம்பிள்ளையாக இல்லை! தமிழ்ப்பள்ளிக்கூட நலம், வளம், வளர்ச்சிக்காக உரிய இடத்தில் கேள்வி எழுப்ப, வாதாட, போராட அதற்குத் துணிவும் இல்லை! ஆற்றலும் இல்லை!

கல்வி அமைச்சின் ஊழியர்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்காக எதுவும் செய்ய இயலாத சூழ்நிலை நிலவுகிறது. ஏனெனில், பி.தி.என் (BTN) எனப்படும் தேசிய குடியியல் கழகம் மற்றும் பிரதமர் துறையின் ஆளுமையின் கீழ் இயங்கும் ஐ.சி.யு (ICU) எனப்படும் செயலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு போன்றவை அவ்வூழியர்களை வழிநடத்திச் செல்வதால் தமிழ்ப்பள்ளிகள் என்பது அவர்களின் வேலிக்கு அப்பால் உள்ளன. இந்நிலையில் தமிழ்ப்பள்ளிகளின் கதிதான் என்ன? (பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள் அரசாங்க ஊழுயர்களுக்கான பி.தி.என். அமலாக்கத்தை தடை செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)

ஒவ்வொரு முறையும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ்ப்பள்ளி குறித்துப் பேச எழும்போது, யாராவது ஓர் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் இடைமறித்து எதற்காக இந்திய, சீன மாணவர்கள் தாய்மொழிப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என கேள்வி கேட்பார். தேசிய ஒற்றுமையை வளர்க்க நாம் அனைவரும் ஒரே கூரையின் கீழ் கல்வி கற்க வேண்டும் என அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவர். அவர்களுக்கு ஆதரவாக பின்னாலுள்ள கூட்டணி கட்சி ஆதரவாளர்கள் ராகம் பாடுவர். இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பதால்தான் தமிழ்ப்பள்ளிகள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அம்னோவுக்கு செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்ப் பள்ளிக்கும் இந்தியர் உரிமைக்கும் எதிரான வாக்காகும். ஆனால் ம.இ.கா.வின் தலைவர்களின் சுயநலத்தாலும், கண்மூடித்தனமான போக்காலும், இந்தியர் தன்மானம் அம்னோவின் காலடியில் கொட்டப்படுகிறது. தமிழ்ப்பள்ளி நிர்மானம் பற்றிய பிரதமரின் அறிவிப்பு அரசியல் இலாபத்துக்காக அன்றி தமிழ்ப்பள்ளியின்பால் அரசாங்கம் அக்கறை கொண்டிருப்பதாக அர்த்தமாகா. அத்துடன் தமிழ்ப்பள்ளி பற்றிய தகவல்களை பிரதமருக்கு வழங்குவது தமிழ்மொழியின் மேல் பற்றுடைய அரசு சார்பற்ற நிறுவனங்களே அன்றி, ம.இ.காவோ, கல்வி அமைச்சோ அல்ல!

2008-கும் 2012-ஆம் ஆண்டுக்கும் இடையே தமிழ்ப் பள்ளிகளுக்காக 440 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் கூறுகிறார். ஏன் செர்டாங் தமிழ்ப்பள்ளிக்கு அதில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படவில்லை? கூரை உடைந்தபின்தான் உதவி செய்யப்படுமா?

மேலும் 6 தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படும் என் பிரதமர் அறிவித்துள்ளார். இதன் செயலாக்கத்திற்கு யார் பொறுப்பு? நிச்சயமாகக் கல்வி அமைச்சில் உள்ள எவரும் பிரதமரின் அறிவிப்பைக் கண்டுகொள்ளப் போவதில்லை! இறுதியில் இப்பணி ம.இ.காவிடம் ஒப்படைக்கப்படும். அத்துடன் அத்திட்டம் தூங்கிவிடும். கல்வி அமைச்சைப் பொறுத்தவரைக்கும் தமிழ்ப்பள்ளிகள் அகற்றப்பட வேண்டிய அனாதைகள் என்பதை ம.இ.கா. ஒப்புகொள்ள வேண்டும். இந்தியர்களின் வாக்குகளைக் கவரவே பிரதமர் அலுவலகம் பாடுபடுகிறது.

இந்தியர்கள் விவேகத்துடன் வாக்களிக்கவில்லை என்றால் இந்நாட்டில் அவர்களின் தலையெழுத்து மாறப்போவதில்லை.