500 = -1,000,000,000 x 2 ?

கட்டுரைத் தலைப்பின் கணக்கியலில் குற்றம் இல்லை. நாட்டில் இப்பொழுது நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் அதன் தீர்வு இப்படிதான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன்.

ஒரு குடும்பத்தின் மொத்த மாத வருமானம் ரி.ம. 3,000.00-க்கும் குறைவாகப் பெறுபவர்களுக்காக திடீர்ரென்று ஏற்படுத்தப்பட்ட உதவித் தொகைதான் ரி.ம. 500.00, கடந்த நான்கு மாதங்களாக அரசாங்கம் என்பதைவிட பிரதமர் நஜிப் அவர்களின் முடிவின்படி (கவனிக்க இது அரசாங்கத்தின் முடிவு அல்ல)  மக்களுக்கு வழங்கப் பட்டுக் கொண்டிருக்கும் உதவித் தொகை என்றப் பேரில், வரப் போகும் தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் இலஞ்சம்; மன்னிக்கவும் அன்பளிப்பு.

இந்த உதவித் தொகை பின்னனி என்ன? இதனால் மக்களின் சிறமம் நீங்கி (விடுமா) விட்டதா? இரண்டு வருடங்களாக சம்பள உயர்வுக்காக போராடிவரும் கியூபெக்ஸ் அரசாங்க ஊழியர்களின் தேவையை நிறைவேற்ற முடியவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கான மாதாந்திர சம்பளம் இன்று வரையில் நாமம். நஞ்சு போல ஏறிக்கொண்டிருக்கும் விலையக் கட்டுப்படுத்த திராணியற்ற நிலை. இருப்பினும் அரசாங்கத்திற்கு ஒன்று மட்டும் தெளிவாய்த் தெரிகிறது. அதாவது வரப் போகும் தேர்தலில் முன்பை விட அதிக இடங்கள் பறிபோகும் என்ற உறுதி.

இந்த நிலையைத் தடுக்க ஒரே வழி பணம் என்ற தற்காலிக நிவாரணம். இலஞ்சமாக பொதுவில் கொடுக்க முடியாது. கொடுத்தால் ஊழல் தடுப்பு ஆணையமத்தின் கண்காணிப்பிலிருந்துத் தப்ப வாய்ப்பு உள்ளது. (கண்காணிக்காவிட்டாலும் எதிர்க்கட்சியினரின் நெருக்குதலுக்கு ஆளாக வேண்டிவரும்) விடயம் தெரிந்தவர்களுக்கு இந்த உதவித் தொகையின் (அன்பளிப்பின்) நோக்கம் புரியும். அதுத் தெரியாதவர்களுக்கு இது வரப்பிரசாதமாகும்.

அது தேவைப் படுவோர் ஏழைகளே. ஏழைகளில் 90 சதவிததினருக்குத் தேவைத் தற்காலிக நிவாரணம். அதை எல்லா அரசியல்வாதிகளும் மிகச் சரியாகவேத் தெரிந்து வைத்துள்ளனர். அதன் வெளிபாடுதான் இந்த ரி.ம.500.00 ஆகும்.

ரி.ம. 500.00 கொடுப்பதற்காக விளம்பரத்தப் பட்ட வழிமுறைகள், ஆர்ப்பாட்டங்கள் மொத்தத்தில் இது அம்னோ அரசியலில் ஒரு பகுதியாக மக்களை மாய வலையில் சிக்க வைத்த மற்றுமொரு நிகழ்வு என்று அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.

மக்கள் கூட்டனியின் அழுத்தத்தினால் கிடைக்கப் பெற்ற இந்த உதவித் தொகையினால் நாட்டிற்கோ அல்லது மக்களுக்கோ ஏதாவது நன்மையா? சின்ன ஆய்வு செய்துப் பார்ப்போம்.

நாட்டில் உள்ள 28மில்லியன் மக்கட் தொகையில் ஏறக் குறைய 2மில்லியன் குடும்பத்தினரின் மொத்த வருமானம் மாததிற்கு ரி.ம.3000.00க்கும் குறைவானது. இவர்களுக்காக பிரதமர் நஜிப்பின் அரசாங்கம் வழங்கியது ரி.ம. 1 பில்லியன்  (2,000,000 x 500 = 1,000,000,000) ஆகும். இவ்வளவுப் பெரியத்தொகை எங்கிருந்து வந்தது?

நாட்டின் வரவு செலவு பட்ஜெட்டின் தாக்களின் போது, மலேசியாவின் கடன் (உள் நாடு மற்றும் வெளி நாடு) என்று ஒரு தொகையைக் குறிப்பிட்டிருப்பார்கள். கடனோடுக் கடனாக இந்த 1 பில்லியனும் சேர்க்கப் பட்டிருக்கின்றது. இதைப்பெற மக்கள் மேல் பரிவுக் கொண்ட நமது அரசாங்கம், ஊழியர் சேமநிதி வாரியத்திடம் உத்திரவாதச் சான்றிதழை (SECURITY BOND)க் கொடுத்து பணத்தைப் பெற்று மேலும் நம்மைக் கடன்காரர்களாக ஆக்கியுள்ளார்கள்.

இப்பணம் ஊழியர் சேமநிதி வாரியத்துக்கு திரும்பிக் கிடைத்துவிடுமா அல்லது திரும்ப வராதப் பட்டியலில் சேர்த்து விடுவார்களா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக இருக்க இந்த வாரியம் இன்னும் எத்தனை வருடங்களுக்கு அதன் சந்தாக்காரர்களை எமாற்றப் போகிறது என்பதும் புரியாதப் புதிர்.

இது போன்ற சலுகைகள் ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதற்காக அல்ல. தேசிய முன்னனியைவிட அம்னோவின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இந்நாட்டு வறிய குடிமக்களை மேன்மேலும் வறியவர்களாகிக் கொண்டிருக்கும் வினை தான் இந்த ரி.ம.500. இதைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்களை மட்டுமின்றி, வரி கட்டுபவர்களையும் சேர்த்து ஏமாற்றிவிட்டனர்.

சிலாங்கூரிலும், பினாங்கிலும் மக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அம்மாநிலங்களில் நடைபெறும் திறமையான ஆட்சியின் மூலம் கிடைக்கப் பெறும் இலாபத்தை வைத்தே வழங்குக்கின்றனர். ஆனால் பிரதமரின் நடவடிக்கையே வேறு. கடன் வாங்கி உதவித் தொகைக் கொடுத்து மேலும் நம்மைக் கடன்காரப் பட்டியிலில் மேம்படுத்தியிருக்கின்றார்கள்.

நாம் பெற்றது என்னவோ ரி.ம.500 தான். ஆனால் வரியாக திருப்பி செழுத்தப் போவது நிச்சயமாகப் பல மடங்கு பல ரூபத்தில் வரும்.

அதற்கான ஆதாரம் இதோ.

2011ஆம் ஆண்டு முடிய மலேசியாவின் கடன் ரி.ம.456 பில்லியன். (இதில் 50% அரசியல்வாதிகள் சுருட்டியது) .அப்படியென்றால் நம் நாட்டில் குழந்தை பிறக்கும்போதே ரி.ம. 16,285 கடனாளியாகப் பிறக்கின்றது. நாமெல்லாம் இந்நாட்டின் கடனாளி மைந்தர்கள்.

மலேசியா போ(ங்கராப்)லே

—————————————-

கா.கலைமணி, [email protected]

TAGS: