மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது!

மலேசிய நாட்டின் தமிழ்ப்பள்ளிகளுக்கே உரித்தான பஞ்சக்கோலத்திலிருந்து விடுபட்டு அடுத்த நூற்றாண்டிற்கு வழிகோலும் முன்னுதாரணமாக தலைநிமிர்ந்து நிற்கும் ஷா அலாம், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி இன்று காலை 10 மணியளவில் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராஹிம் அவர்களால் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்ததுடன் பக்கத்தான் அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொது இயக்கங்களின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

காலை 9 மணிக்கு பள்ளி வாளாகத்திற்கு வருகை தந்த மந்திரி புசார் காலிட் இப்ராஹிம், மிட்லண்டஸ் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடங்களை பார்வையிட்டார். அவருடன் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் மற்றும் சேவியர் ஜெயக்குமார், நகராண்மைக் கழக உறுப்பினர் கா. ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரவி என பலர் உடனிருந்தனர்.

10 மணியளவில் மிட்லண்டஸ் மாநாட்டு மண்டபத்தை மந்திரி புசார் திறந்து வைத்தார் அதன் பின்னர் பள்ளியின் வாரியத் தலைவரும் புதிய பள்ளி கட்டுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தவருமான கா. உதயசூரியன் உரை நிகழ்த்தினார். அதன் பின்னர் சேவியர் ஜெயகுமார், சிலாங்கூர் மந்திரி புசார் ஆகியோர் உரையாற்றினர்.

சிறப்பு உரைகளைத் தொடர்ந்து மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் முற்பகல் 11.50 மணி அளவில் மந்திரி புசார், சேவியர் ஜெயகுமார், உதயசூரியன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக திறந்துவைத்தனர்.

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிக்கு நிரந்தர இடத்தில் நிலையான கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என்ற தங்களின் தணியாத தாகத்திற்கு இப்போதுதான் பலன் கிடைத்துள்ளது என்று பள்ளியின் வாரியத் தலைவர் க. உதயசூரியன் கூறினார்.

பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதில்  அனைத்து வகையிலும் உதவிகள் புரிந்த சிலாங்கூர் மாநில அரசுக்கும், குறிப்பாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாருக்கும், பள்ளி வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளியின் நிர்மாணிப்புக்கு கூடுதலாகத் தேவைப்படும் 19 லட்சம் வெள்ளியைத் திரட்டும் முயற்சியில் தாங்கள் தீவிரம் காட்டவுள்ளதாகவும் உதயசூரியன் கூறினார்.

1990 ஆம் ஆண்டில் சுமார் 315 மாணவர்களுடன் செயல்பட்ட இப்பள்ளி பற்வேறு பிரச்சனைகளின் காரணமாக தற்போது சுமார் 200 மாணவர்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது இங்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள வசதிகளால், புதிய கட்டிடத்திற்கு மாறிய ஈராண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி ஈர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் கூறினார்.

24 வகுப்பறைகள், கணினி மையம், அறிவியல் கூடம், நூலகம், சிற்றுண்டிச் சாலை இவற்றோடு சுமார்  1,800 பேர் அமரக்கூடிய மண்டபம் என நாட்டில் எந்தத் தமிழ்ப்பள்ளியும் கொண்டிராத வசதிகளை இப்பள்ளி கொண்டு ஷா ஆலம், செக்சன் ஏழில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று மாடிக் கட்டிடமாக உயர்ந்து கம்பீரமாக நிற்கிறது மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி.

இப்பள்ளியின் நிர்மாணிப்புக்கு 49 இலட்சம் ரிங்கிட் செலவாகியுள்ளது. அதில் 30 இலட்சம் ரிங்கிட்டை மாநில அரசு வழங்கியுள்ளது. எஞ்சிய 19 இலட்சம் ரிங்கிட்டை திரட்டும் பொறுப்பை பள்ளி வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளன.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிக் கட்டிடத்தின் தோற்றம் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் வேளையில் அதற்காகச் செய்யப்பட்ட செலவு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இப்பள்ளியை பாரிசான் அரசு கட்டியிருந்தால் செலவு இரண்டு மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

நிகழ்வின் இறுதியில் நன்கொடையாளர்கள் பலர், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்புக்காக நன்கொடைகளை வழங்கினர்.