நம் மக்கள் பிச்சைக்காரர்களா?

பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தை) தாமான் தென்னமரம் மைதானத்தில் நடைபெற்ற ‘ஒரே மலேசியா’ உதவித் திட்டம் குறைந்தபட்சம் இருவரின் உயிரைப் பலிகொண்டுள்ளது என்ற செய்தி தற்போது காட்டுத்தீ போல் பரவிவருகிறது.

ஆனால், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேசிய முன்னணி பேராளர்கள் அச்சம்பவத்தை எப்படியாவது மூடிமறைக்க வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாகவும் உறுதியாகவும் இருக்கின்றனர்.

சுற்றுவட்டார மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எந்த மரணமும் பதிவு செய்யப்படாதது அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

‘ஒரே மலேசியா’ சின்னத்திலான ஐந்து கிலோ அரிசி, சீனி, கோதுமை மாவு, பால்டின், சார்டின், மீஹூன் ஆகியவை அடங்கிய பொட்டலத்தைப் பெறுவதற்கு நடந்த தள்ளுமுள்ளுச் சம்பவத்தில் ஒரு வயோதிக மாது மிதிபட்டு இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் கிள்ளான், மேருவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த ஐந்தே நிமிடங்களில் அந்த மூதாட்டியின் சடலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னொரு ஆடவர் மூச்சுத் திணறலால் மாண்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதனை ஒரு பஸ் ஓட்டுநர் நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் மூவாயிரம் பேர் கூட திரள முடியாத அந்த சிறிய இடத்தில் 300 பஸ்களில் இந்திய சமுதாய மக்கள் ஆடு, மாடுகளைப் போல் கொண்டுவந்து இறக்கப்பட்டதில் அப்பகுதியே மக்கள் நெரிசலில் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.

ஆளுக்கு 10 வெள்ளி, 50 வெள்ளி என பேரம் பேசப்பட்டு அங்கு கொண்டுவந்து குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும், அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி ஏழ்மையிலான முதியவர்களை ஏற்பாட்டாளர்கள் பிடித்துக் கொண்டு வந்து கேவலப்படுத்தியிருக்கின்றனர்.

பிற்பகல் 2.00 மணிக்கெல்லாம் அங்கு கொண்டுவந்து இறக்கிவிடப்பட்ட அவர்களில் பலர், தாங்கள் வந்த பஸ்ஸுக்காக பின்னிரவு 1.00 மணிவரைக் காத்திருந்து துவண்டுபோன அவலமும் அங்கு நிகழ்ந்திருக்கிறது.

பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களாக ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்த கூடாரங்கள், நிகழ்ச்சி முடிந்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டதில் இருளில் மூழ்கின. இதனால் தங்களது பேருந்துகளுக்காக காத்திருந்த முதியோர்கள் தட்டுத்தடுமாறி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் திரண்ட இடத்தில் 20 தற்காலிக கழிப்பறைகள் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இயற்கை உபாதைகளுக்குக்கூட அரசாங்க இடம் இல்லாமல் பரிதவித்தவர்கள், அங்குள்ள வீடுகளை நோக்கிப் படையெடுத்த பரிதாபமும் நிகழ்ந்திருக்கிறது.

உணவுப் பொருட்கள் அடங்கியப் பொட்டலங்கள் மேடைக்குப் பின்னால் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

பெருந்தலைவர்கள் வந்துபோனதும், அந்தப் பொட்டலங்களை எடுத்துக் கொடுப்பதற்கு கூட ஒரு நாதியும் இல்லாமல் போனதில் அதனை எடுப்பதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டு தள்ளுமுள்ளுவில் இறங்கிய காட்சி, கண்களில் கண்ணீரை வரவழைத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வருணித்தனர்.

கலைநிகழ்ச்சி நடத்தப்படுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை, ‘அவரைக் காணவில்லை’, ‘இவரைக் காணவில்லை’, ‘கைப்பையைக் காணவில்லை’ என்று சொல்லி தேடும் அறிவிப்பு மேடையாக மாறிப்போனதும் சுட்டிக்காட்டப்பட்டது.

போதுமான நாற்காலிகள் இல்லாமல் நீண்ட நேரம் கால் கடுக்க நின்ற வேதனையில் சில முதியோர்கள் மயக்கம் போட்டு விழுந்திருக்கின்றனர்.

பிற்பகல் 3.00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியிருக்கிறது. மாலை 5.00 மணியளவில் அங்கு வந்து சேர்ந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சாலைக்கு அந்தபுறம் ‘சைம் டார்ஃபி’ நிறுவனத்தின் வீடமைப்புத் திட்டத்தை திறந்துவைத்தார்.

அதன்பின்னர் இந்தப்புறம் வந்த அவர், சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

அதன் பின்னர்தான் இந்த நாடகத்தின் உச்சக்கட்டம் அரங்கேற்றம் கண்டது.

தாங்கள் ஏமாற்றப்பட்டதாக குமுறிய மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தம’ஒரே மலேசியா’ டீ-சட்டைகளைக் கழற்றி வீசியிருக்கின்றனர். திடல் முழுவதும் அந்தக் காட்சியைக் காணமுடிந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் சமைக்கப்பட்ட உணவு வகைகள், மதிய வேளையில விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த உணவும் கெட்டுப்போய் விட்டதாக அவர்கள் மனம் குமுறினர்.

ஒட்டுமொத்தத்தில் நமது சமுதாய மக்களை ‘பிச்சைக்காரர்’களாக சித்தரிக்கும் நாடகம் அரங்கேறியிருக்கிறது.

நன்றி : தினக்குரல்

TAGS: