பல்கலைக்கழங்களில் உயர்கல்வி கற்பதில் இந்தியர்களின் வாய்ப்பு வெகுவாக குறைக்கப்படும் நிலை உள்ளதாகவும் இது ஒருவகையான பலத்த மோசடி என்று வர்ணிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மலேசியாவில் உள்ள சுமார் 55 இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு தலா ரிம 100 கொடுத்ததோடு டிசம்பர் மாதத்தில் ரிம 3,000-க்கும் குறைவான மாத வருமானம் பெரும் குடும்பங்களுக்கு தலா ரிம 500 கொடுத்தது தேசிய முன்னணி அரசாங்கம்.
மேற்கண்ட அந்த நடவடிக்கை ஏதோ ஒரு உடனடி தேவைக்கு சிறிய நிவாரணமாக பலருக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தியர்களை பொறுத்த மட்டில் அதுபோன்ற செயல்களின் பின்னணியில் பலத்த ஏமாற்றுத்தனம் ஒளிந்துள்ளதை உணர வேண்டும் என்கிறார் சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம்.
“நமக்கு மிட்டாய்களை கொடுத்துவிட்டு, நமது குழந்தைகளின் எதிர்கால கல்வி வாய்ப்பை பறித்துள்ளது அரசாங்கம்” என வன்மையாக சாடுகிறார் ஆறுமுகம்.
இனிவரும் காலங்களில் மக்களின் வரி பணத்தால் நடத்தப்படும் அரசாங்க பட்டப் படிப்பு என்பது பூமிபுத்திராக்களுக்கு முழுக்க முழுக்க பயன் தரும். அதே நேரம் மற்ற இனத்தவர்கள் அதை தனியார் பல்கலைக்கழகங்களில் அதிக பணம் கட்டியோ அல்லது கடன் வாங்கியோதான் பெற இயலும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருவதாக விளக்குகிறார் ஆறுமுகம்.
தேசிய முன்னணி அரசாங்கத்தின் இந்த இனவாத வியூகத்தை இரண்டு நிலைகளில் காணலாம். முதலாவதாக மாரா (UiTM)) தொழில்நுட்ப பல்கலைக்கழங்களை விரிவாக்கம் செய்து அதன் இட ஒதுக்கீடுகளை பூமிபுத்திரா மாணவர்களின் தேவைக்கேற்ப அதிகரித்தல் ஆகும்.
இரண்டாவதாக அரசாங்க உயர்நிலை கல்விக் கூடங்களை முதுநிலை (Masters) மற்றும் முனைவர் (PhD) படிப்பிற்கான ஆய்வு நிலை கல்விக்கூடங்களாக மாற்றம் செய்து அதிலிருக்கும் இளங்கலை (Bachelor) படிப்பான இடங்களை குறைப்பதாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக (2007 – 2010) உண்டான மாற்றங்களில் இருந்து வியூகங்களின் தாக்கத்தை உணர இயலும்.
2007-ல் மாராவில் நுழைந்த மாணவர்களின் எண்ணிக்கை 44,874 இது 2010-இல் 76,007-க்கு அதிகரித்துள்ளது. அதாவது மூன்றே ஆண்டுகளில் 31,133 இட ஒதுக்கீடுகள் பூமிபுத்திராக்களுக்காக அதிகரித்துள்ளன.
அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் உள்ள ஒட்டு மொத்த 19 பொது உயர்கல்வி கூடங்களின் மொத்த நுழைவு 83,965-இல் இருந்து 91,152-க்கு அதிகரித்தது. ஆனால் இந்த அதிகரிப்பு முனைவர் மற்றும் முதுநிலை படிப்பிற்கு மட்டுமே. பொதுவாக ஆறாம் படிவம் படித்துவிட்டு விண்ணப்பம் செய்யும் இளங்கலை படிப்பிற்கான 2,924 இடங்கள் குறைக்கப்பட்டன.
இந்த வியூகங்களின் தாக்கம் பூமிபுத்திரா அல்லாத வறுமை நிலை கொண்ட மாணவர்களின் பட்டதாரியாக வேண்டும் என்ற எதிர்கால கனவுகளை கேள்விக் குறியாக்கும். இதில் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்களாகவே இருப்பார்கள் என்கிறார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.
இதில் வேதனை என்னவென்றால், இதை செய்யும் அம்னோவுக்கு ஆமாம் போடும் மஇகா ஒரு புறமும் கூஜா தூக்கும் அதன் தீவிர இளைஞர் பிரிவினர் மறு புறமும் மீண்டும் தேசிய முண்ணனிக்கு ஆதரவு தேடி அலைவதுதான்.