தலைப்புச் செய்தி:- பிரதமர் மருதாணி அரைக்கிறார்!

கடந்த வாரம் சன் நாளிதழில் முகப்புப் பக்கத்தில் பிரதமர் மருதாணி அரைத்துக் கொண்டிருந்தார். தோசை சுட்டு, மீ கோரிங் பிரட்டி, தே தாரிக் ஆற்றி இப்போது அம்மிக் கல்லில் மருதாணி அரைக்கிற நிலைமைக்குத் தேர்தல் பிரதமரைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

பிரதமர் எதற்காக இதையெல்லாம் செய்கிறார் என்பதுதான் இப்போது எனது முதல் குழப்பமாக இருக்கிறது. முன்பக்கத்தில் வந்து மலிவு விளம்பரம் தேடுவதற்காகத்தான் இதையெல்லாம் பிரதமர் செய்து கொண்டிருக்கிறார் என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது.

மக்களோடு மக்களாக ஒரு பிரதமர் இப்படியாக செய்யும் மிகச் சாதாரண நிகழ்வுகளுக்கு முன்பக்க முன்னுரிமைகள் ஏன்… பிரதமர் இதையெல்லாம் கேட்கிறாரா? அல்லது அவரைச் சுற்றி உள்ளவர்கள் கேட்கிறார்களா!

பிரதமர் ஏதாவதொரு புதிய திட்டத்தை அறிவித்து விட்டால் “பிரதமர் இதனை அறிவித்தார். அது பிரதமர் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது” என்று இவர்களாகவே சப்புக் கொட்டிக் கொள்கிறார்கள்.

மக்களாட்சி, ஜனநாயக நாடு என பீற்றிக் கொள்ளும் நம் நாட்டில் ஒரு பிரதமருக்குறிய பொறுப்பு என்ன? மக்களின் நீண்ட காலத் தேவை என்பது என்ன என்பதை ஆய்ந்து அறிந்து அதை அடைவதற்கு அவர்களுக்கு வழிகாட்டுவது; அதற்கான வழிகளை உருவாக்குவது; அந்த வழிகள் தொடர்ந்து நிலைத்தன்மையுடன் இருப்பதற்கு அரணாக இருப்பது என்பதுதானே அவரது பணி.
அதைவிடுத்து வெறும் தேர்தல் வெற்றியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு மழைக்கு முளைத்து எழும் காளான்களைப் போல் தேர்தலுக்கு முளைத்து எழும் வாக்குறுதிகளைத் தந்துவிட்டு தனது அரசியல் நாடகத்தை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்ற தொனியில் மக்களை முட்டாளாக்குவதை என்னவென்பது?

ஒரு பிரதமர் வந்தார்.
2020 தூர நோக்கை நமது இலக்கு என்றார்.
அடுத்த பிரதமர் வந்தார்.

எனக்காக சேவையாற்ற வேண்டாம். என்னோடு சேர்ந்து சேவையாற்றுங்கள் என்றார்.
இப்போது இருக்கிற பிரதமரோ “ மக்களுக்கு முன்னுரிமை அடைவுநிலைக்கு முக்கியத்துவம்” என்று சொல்லிவிட்டு “ஒரே மலேசியா” வியாபாரக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார்

(பின்குறிப்பு: மக்களுக்கு முன்னுரிமை என்று ஒரு பக்கம் அறிக்கைவிட்டுக் கொண்டு எதிர்க்கட்சிகள் மக்களுக்காக நடத்தும், நடத்துகிற செயல்திட்டங்களின் மக்கள் பங்கெடுக்க கூடாது என்று பூச்சாண்டி காட்டும் வேலை குறித்து யாரும் இங்கே கேள்வி எழுப்பக் கூடாது.)

ஆக, ஒவ்வொரு பிரதமரின் பதவியேற்புக்குப் பின்பும் பகடைக் காய்களாக்கப்படுவது மக்களே. மேய்ப்பவர்களின் பின்னால் செல்லும் ஆட்டு மந்தைகளைப் போல் மக்களை இவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்குத் தெரிந்த சிலரிடம் போய் “ஒரே மலேசியா” என்றால் என்னவென்று கேட்டுப் பாருங்கள்.

* சிலர் 500 வெள்ளி கொடுத்ததைப் பற்றி பேசுவார்கள்
* சிலர் பொங்கல் வைத்ததைப் பற்றி சொல்வார்கள்.
* சிலர் அரிசி, பருப்பு, வேட்டி, சேலை கிடைத்ததைப் பற்றியும் அது கிடைப்பதற்கு முன்பின் நடந்த   கூத்துகளைப் பற்றியும் பேசுவார்கள்.
* மாணவர் என்றால் மடிக்கணினி கிடைத்ததைப் பற்றியும் பென்சில், பேனா, புத்தகங்கள் வாங்க 200 வெள்ளி கிடைத்ததைப் பற்றி பேசுவார்கள்.

ஆக “ஒரே மலேசியா” என தண்ணீராய் பணம் கரைத்துக் கொண்டிருக்கும் ஒன்றைப் பற்றிய அடிப்படையான அறிவுகூட இன்றுவரையில் பலருக்கு இல்லை. ஆனால் மிகப் புனிதமாக ஒன்றாக உலக தலைவர்களெல்லாம் போற்றிப் புகழும் ஒரு திட்டமாக இதனை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்திட்டத்தால் பயன்பெறுவது யார் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்.

இன்றைய நிலையில் மக்களுக்கு யாரும் மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதை பற்றி இதுவரை யோசிக்கவில்லை. அவ்வப்போது எழும் பசிக்கு எப்போதாவது பழைய மீன்களை புதியனவாக்கி வழங்கும் வித்தையை மட்டும் பொறுப்பில் உள்ளவர்களும் எல்லாரும் மிகத் தெளிவாக கற்று வைத்திருக்கின்றனர்.

ஆனால் ஒன்றை மட்டும் எல்லாரும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இப்படியான கோமாளிக் காட்சிகள் அரங்கேறும் போதேல்லாம் படித்த இளைய சமூகத்தின் ஆதரவை பிரதமர் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பிரதமர் மருதாணி அரைத்துக் கொண்டிருக்கட்டும். மருதாணியிட்ட அவரது கைகள் சிவந்துவிட்டதா என்பதை மட்டும் யாராவது பார்த்து சொல்லுங்கள்.

– தமிழினி

TAGS: