நாமும் நமது வேலை வாய்ப்பும்!

ம.இ.காவினால் தோற்றுவிக்கப் பட்டு இப்பொழுது டாக்டர் மாரிமுத்துவால் நிர்வாகிக்கப்படும் ஒய்.எஸ்.எஸின் ஆய்வின்படி, கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் வரைப் பயின்றுள்ள நம் இந்திய மாணவர்களில் 5,000 பேரும், இடைநிலைப்பள்ளி வரைப் பயின்றவர்கள் அல்லது இடையிலேயேப் படிப்பைத் துண்டித்துக் கொண்டவர்களில் 45,000 பேர் ஆக மொத்தம் 50,000 பேருக்கு வரையில் வேலை இல்லை என்பது அவர்களின் செய்தி.

ஏன் வேலை இல்லை என்பதைவிட எதற்காக வேலை இல்லை என்பதை ஆய்வு செய்ததில் நமக்கு அதற்கு அதிர்ச்சியாக சில தகவல்கள் கிடைத்தன. சுருக்கமாகச் சொல்லப் போனால்,

1. இடையிலேயேப் படிப்பைத் துண்டித்துக் கொள்பவர்கள், படிப்பில் ஆர்வமே இல்லாதவர்களாகவும், சோம்பேறிகளாகவும், யாரைப்பற்றியும் கவலைப் படாமல் இருக்கின்றனர்.

2. நேரடி விற்பனை என்ற வியாபாரம் மிகவும் மோசமான சிந்தனைகளை விதைத்துள்ளது. அதாவது குறைந்த மதிப்புள்ளப் பொருட்களை அதிக விலை கொடுக்கப் பயனீட்டாளர்களை ஏமாற்றும் வித்தையை அவர்களிடம் கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளது. இதுவும் முறைத் தவறி நடப்பதற்கும் ஏணியாய் அமைந்திருக்கின்றது.

3. நியாயமான வழியில் சம்பாதிக்கும் வழி கசப்பாகவேத் தெரிகின்றது.

4. கிடைத்த வேலை செய்வதைவிட ஆசைப்பட்ட வேலைக்கிடைக்கும் வரை வெட்டியாய் இருப்பதில் ஆர்வம்

5. இவைகளைவிட மிகவும் முக்கியமானது யாதெனில், வேளாவேளைக்கு உணவு, தேவைக்கும் அதிகமான உடுப்புகள், ஊர் சுற்ற மோட்டார் சைக்கிள், கை தொலைப்பேசி எல்லா செலவுகளுக்கானப் பணம். நேரம் காலம் வரையற்றத் தூக்கம் இவைகள் அனைத்தும் பெற்றோர் செய்துக் கொடுத்துள்ள வசதிகள்,

இந்த நிலையில் எங்கெங்கே அந்நியவர்களின் ஆக்கிரமிப்பு என்பதைக் காண்போம்.

* காலையில் அலுவலகம் சென்றால் கேட்டைத் திறந்து குட்மார்னிங் சொல்கிறான் பாக்கிஸ்தானி பணிவாக…

* அலுவலகத்தின் மின்தூக்கி நுழைவாயிலில் வெல்கம்சார் என்று பல்லிக்கின்றான் நேப்பாளி கம்பீரமாக…

* என் நேரமறிந்து சரியாக 9 மணிக்கு காப்பி கொண்டு வருகிறாள் இந்தோனேசியப் பெண் அடக்கமாக…

* வடிவமைப்பு விடயமாக அலுவகத்தில் என்னிடம் ஆலோசனைக் கேட்கின்றனர் (இந்திய) இந்தியர்கள் நம்பிக்கையாக…

* மதிய உணவுக்கு செல்கிறேன் சுவாடிகாப் என்று இன்முகத்தோடு வரவேற்கிறாள் தாய்லாந்துக்காரி அன்பாக…

* வெளி வேலையைப் பார்வையிட செல்கிறேன் கெர்ஜா சுடாஹ் பேரஸ்ப்பா சொல்கிறான் இந்தோனேசியக்காரன் பெருமையாக…

* மகிழ்வுந்து நிறுத்தும் இடத்திலிருந்து வெளியேறுகிறேன் சீ யு டுமாரோ போஸ் என்கிறான் இந்தியத் தமிழன் ஏளனமாக…

* வண்டிக்கு ஊற்றிய பெட்ரோலுக்காக கல்லாவில் பணத்தை எண்ணுகிறான் பங்களாதேஷி நம்பிக்கையாக…

* வீட்டுக்குப் போகும் வழியில் காய்கறி வாங்குகிறேன் பேரம் பேசுகிறான் மியான்மாக்காரன் பரபரப்பாக…

பத்திரிக்கை செய்தியொன்று நினைவுக்கு வந்தது.
20 ஆயிரம் பர்மியர்கள்
50 ஆயிரம் வியட்நாமியர்கள்
1 இலட்சம் இந்தியர்கள்
4 இலட்சம் நேப்பாளிகள்
10 இலட்சம் பிலிப்பினோக்கள்
30 இலட்சம் இந்தோனேசியர்கள்
3 இலட்சம் மற்ற நாட்டினர்
இங்கே வேலை வாய்ப்போடு

48 இலட்சம் வெளிநாட்டினருக்கு மலேசியா சொர்க்க பூமி ஆனால் 50,000 மலேசிய இந்தியர்களுக்கு இன்னும் வேலைக் கிடைக்கவில்லையாம்!!!

எப்பொழுதோ ஒரு நகைச்சுவைப் படித்த நினைவு. இருவரின் உரையாடல். மரத்தடியில் உட்கார்ந்துக் கொண்டு மகிழ்ச்சியாக வெண்சுருட்டை புகைத்துக்கொண்டிருந்த மகனிடம் அவனின் அப்பா,

அப்பா: ஏன்டா வேலை செய்யாமல் இப்படி இருக்கின்றாயே நியாயமா?
மகன் : எதற்காக வேலை செய்யவேண்டும்?
அப்பா : வேலை செய்தால் தானே பணம் கிடைக்கும்
மகன் : பணம் கிடைத்தால் ?
அப்பா: காடி வாங்கலாம், வீடு வாங்கலாம்
மகன் : அப்புறம் ?
அப்பா : பிடித்தமான உடுப்பு வாங்கலாம், நல்ல உணவு சாப்பிடலாம்
நினைத்த இடத்திற்குப் போய் வரலாம்.
மகன் : பிறகு
அப்பா : சந்தோஷமாக இருக்கலாம்.
மகன் : இப்பொழுது மட்டும் எப்படி இருகின்றேனாம் ? என்றுக் கூறிவிட்டுத்
தொடர்ந்தான் தன் புகைத்தல் வேலையை.

ஒன்று மட்டும் புரிகின்றது சுகத்தின் விளைவு சோகத்தில் முடிவதற்குப் பெற்றோர்கள் தான் முதற் காரணம் என்று.

————————————–

– கா. கலைமணி
[email protected]